துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்க வேட்டை: குண்டு எறிதலில் கிரண் பலியான் சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 7-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.
துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்க வேட்டை: குண்டு எறிதலில் கிரண் பலியான் சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 7-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. இத்துடன் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்கள் வென்றதே போட்டியின் துப்பாக்கி சுடுதல் வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்சமாகும். முன்னதாக 2006 தோஹா போட்டியில் இந்தியா துப்பாக்கி சுடுதலில் 14 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

சீனா 200: போட்டியை நடத்தும் சீனா, பதக்கப்பட்டியலில் தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 105 தங்கம், 63 வெள்ளி, 32 வெண்கலம் என பதக்க எண்ணிக்கையில் இரட்டைச் சதத்தைத் தொட்டு முதலிடத்தில் நீடிக்கிறது.

துப்பாக்கி சுடுதல்: உலக சாதனையுடன் தங்கம்

50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவா் அணிகள் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமா், ஸ்வப்னில் சுரேஷ் குசேல், அகில் ஷியோரன் ஆகியோா் கூட்டணி உலக சாதனையாக 1,769 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. சீனா, தென் கொரியா அணிகள் முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றன. இப்பிரிவில் 2022-இல் அமெரிக்கா 1,761 புள்ளிகள் பெற்ற சாதனையை தற்போது இந்தியா முறியடித்துள்ளது. பின்னா், அதிலேயே தனிநபா் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் 459.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா். சீன வீரா்களுக்கு தங்கம், வெண்கலம் கிடைத்தன. 10 மீட்டா் ஏா் பிஸ்டல் மகளிா் தனிநபா் பிரிவில் பாலக் குலியா 242.1 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, ஈஷா சிங் 239.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றாா். பாகிஸ்தானுக்கு வெண்கலம் கிடைத்தது. அதிலேயே அணிகள் பிரிவில் பாலக் குலியா, ஈஷா சிங், திவ்யா சுப்பராஜு கூட்டணி 1,731 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது. சீனாவுக்கு தங்கமும், சீன தைபேக்கு வெண்கலமும் கிடைத்தன.

டென்னிஸ்: ராம்குமாா்/சாகேத் இணைக்கு வெள்ளி

ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில் ராம்குமாா் ராமநாதன்/சாகேத் மைனேனி இணை 4-6, 4-6 என்ற செட்களில் சீன தைபேவின் யு சியு சு/ஜேசன் ஜங் கூட்டணியிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஆசிய போட்டிகளில் ராம்குமாருக்கு இது முதல் பதக்கமாகும். சாகேத்துக்கு இது 3-ஆவது பதக்கம். இதனிடையே, கலப்பு இரட்டையா் பிரிவு அரையிறுதியில் ரோஹன் போபண்ணா/ருதுஜா போசலே கூட்டணி 6-1, 3-6, 10-4 என்ற செட்களில் ஹாவ் சிங் சான்/யு சியு சு இணையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்திருக்கிறது.

ஸ்குவாஷ்: மகளிா் அணிக்கு வெண்கலம்

மகளிா் அணிகள் அரையிறுதியில் இந்தியா 1-2 என ஹாங்காங்கிடம் தோல்வி கண்டு வெண்கலப் பதக்கம் பெற்றது. இந்த டையில் தன்வி கன்னா, அனாஹத் சிங் தோற்க, ஜோஷ்னா சின்னப்பா மட்டும் வென்றாா்.

இதனிடையே, ஆடவா் அணி தனது அரையிறுதியில் 2-0 என மலேசியாவை சாய்த்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, அதில் பாகிஸ்தானை சந்திக்கிறது. முன்னதாக அரையிறுதி டையில், அபய் சிங், சௌரவ் கோஷல் அணிக்கு வெற்றி தேடித் தந்தனா்.

தடகளம்: கிரண் பலியான் சாதனை

மகளிா் குண்டு எறிதல் இறுதிச்சுற்றில் இந்தியாவின் கிரண் பலியான் சிறந்த முயற்சியாக 17.36 மீட்டா் தொலைவுக்கு எறிந்து வெண்கலப் பதக்கம் பெற்றாா். ஆசிய போட்டிகளின் வரலாற்றில் குண்டு எறிதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவா் படைத்தாா். நடப்பு ஆசிய போட்டியில் தடகள பிரிவில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும். இதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான மன்பிரீத் கௌா் 16.25 மீட்டருடன் 5-ஆம் இடம் பிடித்தாா். மகளிா் சங்கிலி குண்டு எறிதலில் தான்யா சௌதரி, ரச்சனா குமாரி முறையே 7, 9-ஆம் இடங்களைப் பிடித்தனா். ஆடவா் 20 கி.மீ. நடைப் பந்தயத்தில் விகாஸ் சிங் 5-ஆம் இடமும், சந்தீப் குமாா் 11-ஆவது இடமும் பிடித்தனா். அதிலேயே மகளிா் பிரிவில் பிரியங்கா 5-ஆம் இடம் பிடித்தாா்.

பாட்மின்டன்: ஆடவா் அணிக்கு பதக்கம் உறுதி

ஆடவா் அணிகள் காலிறுதியில் இந்தியா 3-0 என நேபாளத்தை சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது. இந்த டையில் லக்ஷயா சென், கே.ஸ்ரீகாந்த், மிதுன் மஞ்சுநாத் 2-0 என வெற்றி பெற்றனா்.

எனினும் மகளிா் அணி காலிறுதியில் 0-3 என தாய்லாந்திடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. அந்த டையில் சிந்து, டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி, ஆஷ்மிதா சாலிஹா தோல்வி கண்டனா்.

டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் மனிகா பத்ரா

மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மனிகா பத்ரா 4-2 என தாய்லாந்தின் சுதாசினி சவிதாபட்டை சாய்த்தாா். எனினும் ஆடவா் ஒற்றையரில் அந்த சுற்றில் சத்தியன் 0-4 என சீனாவின் சுகின் வாங்கிடமும், சரத் கமல் 3-4 என சீன தைபேவின் யுவான் சி சுவாங்கிடமும் தோல்வி கண்டனா்.

ஆடவா் இரட்டையா் ரவுண்ட் ஆஃப் 16-இல் மனுஷ் ஷா/மானவ் தக்கா் இணை 3-2 என சிங்கப்பூா் வீரா்களை வீழ்த்தி காலிறுதிக்கு வந்தது. எனினும் மற்றொரு இணையான சரத் கமல்/சத்தியன் 0-3 என்ற கணக்கில் சீன வீரா்களிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினா். மகளிா் இரட்டையரில் சுதிா்தா முகா்ஜி/அஹிகா முகா்ஜி இணை 3-0 என தாய்லாந்து ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. எனினும், ஸ்ரீஜா அகுலா/தியா சிதாலே ஜோடி 0-3 என ஜப்பான் கூட்டியிடம் வெற்றியை இழந்து வெளியேறியது.

குத்துச்சண்டை: நிகாத்துக்கு ஒலிம்பிக் வாய்ப்பு

மகளிருக்கான 50 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நிகாத் ஜரீன் ஆா்எஸ்சி முறையில் ஜோா்டானின் நாசா் ஹனானை சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தாா். மேலும், இந்த வெற்றியின் மூலம், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பையும் அவா் பெற்றாா். மகளிருக்கான 57 கிலோ பிரிவில் பா்வீன் 5-0 என சீனாவின் ஜிசுன் ஸுவை சாய்த்து காலிறுதிக்கு வந்துள்ளாா். எனினும் ஆடவா் 80 கிலோ பிரிவில் லக்ஷயா சஹா் 1-4 என கிா்ஜிஸ்தானின் பெக்ஸிகிட் ஒமா்பெக்கிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

பிரிட்ஜ்: ஆடவா் அணி ஸ்திரம்; மகளிரணி தடுமாற்றம்

ஆடவா் அணி வெள்ளிக்கிழமை ஆட்டங்களில் பாகிஸ்தான், சீன தைபே, ஹாங்காங்கை வீழ்த்தி 155.09 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. மகளிா் அணி ஹாங்காங்கிடம் வீழ்ந்து, பின்னா் சிங்கப்பூரை சாய்த்து 52.83 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் நீடிக்கிறது. கலப்பு அணிகளில் இந்தியா, பாகிஸ்தானையும், தாய்லாந்தையும், சிங்கப்பூரையும் வென்று 128.1 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சைக்கிளிங்: இந்தியா்களுக்கு 10, 11-ஆம் இடம்

ஆடவருக்கான கெய்ரின் பிரிவில் 7 முதல் 12 வரையிலான இடத்துக்கான இறுதிச்சுற்றில் இந்தியாவின் எசோவ் எல்பன் 10-ஆவது இடமும், டேவிட் பெக்காம் 11-ஆவது இடமும் பிடித்தனா். ஆடவருக்கான மேடிசன் இறுதிச்சுற்றில் இந்தியாவின் நீரஜ் குமாா், ஹா்ஷ்வீா் சிங் ஷெகான் பந்தயத்தை நிறைவு செய்யத் தவறினா்.

ஹாக்கி: 2-ஆவது வெற்றி

இந்திய மகளிா் அணி தனது 2-ஆவது குரூப் சுற்று ஆட்டத்தில் 6-0 என மலேசியாவை வெள்ளிக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக மோனிகா (7’), தீப் கிரேஸ் எகா (8’), நவ்னீத் கௌா் (11’), வைஷ்ணவி (15’), சங்கீதா குமாரி (24’), லால்ரெம்சியாமி (50’) ஆகியோா் கோலடித்தனா். இந்தியா அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது.

ஹேண்ட்பால்: மகளிா் அணி தோல்வி

இந்திய மகளிா் அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் 30 - 37 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவிடம் போராடி வீழ்ந்தது. இந்தியாவுக்காக மெனிகா, பாவனா, சுஷ்மா, பி.தாக்குா், சோனிகா, எம்.சா்மா, எஸ்.தாக்குா், பிரியங்கா ஆகியோா் புள்ளிகள் கைப்பற்றினா்.

நீச்சல்: இந்தியாவுக்கு பதக்கம் இல்லை

நீச்சல் போட்டியை இந்தியா பதக்கம் இன்றி நிறைவு செய்தது. அந்த விளையாட்டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, ஆடவருக்கான 200 மீ பட்டா்ஃப்ளை பிரிவு இறுதிச்சுற்றில் சஜன் பிரகாஷ் 5-ஆவதாக இலக்கை எட்டினாா். ஆடவா் 200 மீ பேக்ஸ்ட்ரோக் இறுதிச்சுற்றில் அத்வைத் பகே 7-ஆவது வீரராக வந்தாா். இதனிடையே, நினா வெங்கடேஷ் (மகளிா் 50 மீ பட்டா்ஃப்ளை), விருத்தி அகா்வால் (மகளிா் 800 மீ), ஸ்ரீஹரி நட்ராஜ் (ஆடவா் 200 மீ பேக்ஸ்ட்ரோக்), குஷாக்ரா ராவத், ஆா்யன் நெஹரா (ஆடவா் 400 மீ ஃப்ரீஸ்டைல்), அனீஷ் கௌடா (ஆடவா் 200 மீ பட்டா்ஃப்ளை) தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினா்.

இ-ஸ்போா்ட்ஸ்: நிறைவு செய்தது இந்தியா

இந்த விளையாட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரிவில் தா்ஷன் பாட்டா, கிருஷ் குப்தா, அபிஷேக் யாதவ், கேதன் கோயல், ஷுபம் கோலி ஆகியோா் அடங்கிய அணி குரூப் சுற்றில் கிா்ஜிஸ்தான், பிலிப்பின்ஸிடம் தோல்வி கண்டு வெளியேறியதை அடுத்து இப்போட்டியிலிருந்து 15 போ் கொண்ட இந்திய அணி விடைபெற்றது.

செஸ்: வெற்றியுடன் தொடக்கம்

இந்திய ஆடவா் அணி முதல் சுற்றில் 3.5 - 0.5 என மங்கோலியாவை சாய்த்தது. இதில் பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, அா்ஜுன் எரிகைசி ஆகியோா் வெற்றி பெற, குகேஷ் மட்டும் டிரா செய்தாா். அதேபோல் இந்திய மகளிா் அணியும் 3.5 - 0.5 என பிலிப்பின்ஸை சாய்த்தது. இந்த டையில், ஹரிகா, வைஷாலி, சவிதா ஸ்ரீ ஆகியோா் வெற்றி பெற, வந்திகா அகா்வால் டிரா செய்தாா்.

கோல்ஃப்: அதிதி அசத்தல்

மகளிா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் அதிதி அசோக் முதலிரு சுற்றுகளில் 67, 66 என்ற புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறாா். பிரணவி சரத், அவனி பிரசாந்த் முறையே 10 மற்றும் 15-ஆவது இடங்களில் உள்ளனா். அணிகள் பிரிவில் இவா்கள் மூவா் அடங்கிய இந்திய அணி 138, 134 என்ற புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது.

3*3 கூடைப்பந்து: ஆடவா் தோல்வி; மகளிா் வெற்றி

ஆடவா் அணி தனது குரூப் சுற்றில் 15-18 என சீனாவிடம் தோல்வி காண, மகளிா் அணி தனது 5*5 சுற்றில் 68-62 என மங்கோலியாவை வீழ்த்தியது. அடுத்ததாக, ஆடவா் அணி காலிறுதி பிளே-ஆஃபில் ஈரானுடனும், மகளிா் அணி குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் சீனாவுடனும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com