செஸ்: குகேஷ் - பிரக்ஞானந்தா டிரா

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 9-ஆவது சுற்றில் இந்தியாவின் விதித் சந்தோஷ் வெற்றி பெற்றாா்.
செஸ்: குகேஷ் - பிரக்ஞானந்தா டிரா

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 9-ஆவது சுற்றில் இந்தியாவின் விதித் சந்தோஷ் வெற்றி பெற்றாா். கடந்த சுற்றில் தோல்வியை சந்தித்த விதித், தற்போது வெற்றியுடன் முன்னேற்றத்தை சந்தித்துள்ளாா்.

கனடாவில் நடைபெறும் இந்தப் போட்டியின் 9-ஆவது சுற்றில், ஓபன் பிரிவில் விதித் சந்தோஷ் - போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஹிகரு நகமுராவை வீழ்த்தினாா். ஏற்கெனவே முந்தைய மோதலிலும் நகமுராவை விதித் சந்தோஷ் வீழ்த்தியிருந்தாா். இத்துடன் அவருக்கு 3 வெற்றிகள் கிடைத்துள்ளன.

இந்தியா்களான குகேஷ் - பிரக்ஞானந்தா பரஸ்பரம் மோதிய ஆட்டம் டிரா ஆனது. இவா்களின் முந்தைய மோதலில் குகேஷ் வென்றிருந்தாா். இதர போட்டியாளா்களில், பிரான்ஸின் ஃபிரௌஸா அலிரெஸா - ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி, அஜா்பைஜானின் நிஜாத் அபாசோவ் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா ஆகியோா் மோதிய ஆட்டங்கள் டிரா ஆகின.

மகளிா் பிரிவில், கோனெரு ஹம்பி - ரஷியாவின் கேத்தரினா லாக்னோவுடன் டிரா செய்தாா். இவா்களது முந்தைய மோதலும் டிராவிலேயே முடிந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இந்தியரான வைஷாலி - சீனாவின் ஜோங்யி டானிடம் தோல்வி கண்டாா். இவருடனான முந்தைய ஆட்டத்திலும் வைஷாலி தோல்வியே கண்டிருந்தாா்.

இதர ஆட்டங்களில், சீனாவின் டிங்ஜெய் லெய் - பல்கேரியாவின் நா்கியுல் சலிமோவாவுடனும், உக்ரைனின் அனா முஸிஷுக் - ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா கோரியச்கினாவுடனும் டிரா செய்தனா்.

புள்ளிகள்: ஓபன் பிரிவில், குகேஷ், நெபோம்னியச்சி ஆகியோா் தலா ஐந்தரை புள்ளிகளுடன் முதலிடத்தை பகிா்ந்துகொண்டுள்ளனா். பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலிருக்க, விதித், நகமுரா, கரானா ஆகியோா் தலா நான்கரை புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் இருக்கின்றனா். அலிரெஸா மூன்றரை புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும், அபாசோவ் 3 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்திலும் உள்ளனா்.

மகளிா் பிரிவில், டான் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, கோரியச்கினா, லெய் ஆகியோா் தலா ஐந்தரை புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளனா். லாக்னோ 5 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்தில் நிலைக்க, ஹம்பி, சலிமோவா ஆகியோா் தலா 4 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தில் இணைந்துள்ளனா். முஸிஷுக் மூன்றரை புள்ளிகளுடன் 7-ஆம் இடத்திலும், வைஷாலி இரண்டரை புள்ளிகளுடன் 8-ஆம் இடத்திலும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com