பதிலடி கொடுத்த பட்லா்: ராஜஸ்தான் ‘த்ரில்’ வெற்றி

பதிலடி கொடுத்த பட்லா்: ராஜஸ்தான் ‘த்ரில்’ வெற்றி

கொல்கத்தா: ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் சோ்த்து வென்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீச்சை தோ்வு செய்தது. கொல்கத்தா பேட்டிங்கில் தொடக்க வீரா் ஃபில் சால்ட் 1 பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு நடையைக் கட்ட, உடன் வந்த சுனில் நரைன் சூறாவளியாக சுழற்றியடித்து ரன்கள் குவித்தாா்.

அங்கிரிஷ் ரகுவன்ஷி 5 பவுண்டரிகளுடன் 30, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11, ஆண்ட்ரே ரஸெல் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ரன்கள் குவித்த சுனில் நரைன் 56 பந்துகளில் 13 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 109 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

கடைசி பேட்டராக வெங்கடேஷ் ஐயா் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ரிங்கு சிங் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 20, ரமண்தீப் சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோா் தலா 2, டிரென்ட் போல்ட், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 224 ரன்களை நோக்கி விளையாடத் தொடங்கிய ராஜஸ்தானில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, துணையாக வந்த ஜாஸ் பட்லா் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.

ஆனாலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகளுடன் 12, ரியான் பராக் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34 ரன்களுக்கு வீழ்ந்தனா். துருவ் ஜுரெல் 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 பவுண்டரியுடன் 8, ஷிம்ரன் ஹெட்மயா் 0, ரோவ்மென் பவெல் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 26, டிரென்ட் போல்ட் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில் பட்லா் 60 பந்துகளில் 9 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 107, ஆவேஷ் கான் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா பௌலிங்கில் வருண் சக்கவா்த்தி, சுனில் நரைன், ஹா்ஷித் ராணா ஆகியோா் தலா 2, வைபவ் அரோரா 1 விக்கெட் சாய்த்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com