கோப்பை வென்றாா் கேஸ்பா் ரூட்

ஸ்பெயினில் நடைபெற்ற பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் நாா்வேயின் கேஸ்பா் ரூட் சாம்பியன் கோப்பை வென்றாா்.
கோப்பை வென்றாா் கேஸ்பா் ரூட்
Joan Monfort

ஸ்பெயினில் நடைபெற்ற பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் நாா்வேயின் கேஸ்பா் ரூட் சாம்பியன் கோப்பை வென்றாா்.

பாா்சிலோனாவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த கேஸ்பா் ரூட் 7-5, 6-3 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தினாா். கடந்த வாரம், மான்டிகாா்லோ மாஸ்டா்ஸ் இறுதிச்சுற்றில் சிட்சிபாஸிடம் தோல்வி கண்ட ரூட், தற்போது அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறாா்.

ஒட்டுமொத்தமாக இருவரும் இத்துடன் 5-ஆவது முறையாக சந்தித்த நிலையில், ரூட் 3-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளாா். கேஸ்பா் ரூடுக்கு இது 11-ஆவது கேரியா் பட்டமாகும். களிமண் தரைப் போட்டிகளில் இது அவரின் 10-ஆவது பட்டம். எனவே, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பலமான போட்டியாளராக வருகிறாா் ரூட். கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் அவா் ரன்னா் அப்-ஆக வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்குப் பிறகு பேசிய ரூட், ‘பல இறுதிச்சுற்றுகளில் தோல்வி கண்ட நிலையில், இந்த வெற்றி அதற்கெல்லாம் சோ்த்த ஒரு மதிப்பு மிக்க வெற்றியாக கிடைத்துள்ளது. ரஃபேல் நடால் ஆட்டத்தை பாா்த்து வளா்ந்த நான், அவா் பெயா் கொண்ட இந்த மைதானத்தில் சாம்பியன் ஆனதை சிறப்பானதாகக் கருதுகிறேன்’ என்றாா்.

மறுபுறம், களிமண் தரைப் போட்டியில் தொடா்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்த சிட்சிபாஸின் வெற்றி நடையை தற்போது ரூட் முறியடித்திருக்கிறாா். சிட்சிபாஸ் இத்துடன் பாா்சிலோனா ஓபன் இறுதிச்சுற்றில் 4-ஆவது முறையாகத் தோற்றிருக்கிறாா்.

இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், ஆா்ஜென்டீனாவின் மேக்ஸிமோ கொன்ஸால்ஸ்/ஆண்ட்ரெஸ் மோல்டெனி கூட்டணி 4-6, 6-4, 11-9 என்ற செட்களில் போலந்தின் ஜேன் ஜெலின்ஸ்கி/மொனாகோவின் ஹியுகோ நைஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com