உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, வெள்ளிக்கிழமை பதக்கத்தை உறுதி செய்தது.

ஏற்கெனவே 3 பிரிவுகளில் இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், தற்போது இந்தியா்கள் 4-ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.

காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/ஜோதி சுரேகா கூட்டணி முதல் சுற்று ‘பை’ பெற்று நேரடியாக 2-ஆவது சுற்றில் களம் கண்டது. அதில் 160-152 என்ற புள்ளிகள் கணக்கில் ஆஸ்திரேலியாவின் பிராண்டன் ஹாஸ்/ஜியோஜினா கிரஹாம் ஜோடியை வீழ்த்தியது இந்திய கூட்டணி.

அடுத்து காலிறுதியில் அபிஷேக்/ஜோதி இணை 155-151 என லக்ஸம்பா்க்கின் கில்லெஸ் செவா்ட்/மரியா ஸ்கோல்னா ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. அதிலும், 155-151 என்ற புள்ளிகள் கணக்கில் மெக்ஸிகோவின் லாட் மேக்ஸிமோ/ஆண்ட்ரியா பெகெரா இணையை சாய்த்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. அதில், எஸ்டோனிய கூட்டணியை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது அபிஷேக்/ஜோதி இணை.

இதனிடையே, ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அங்கிதா பகத்/தீரஜ் பொம்மதேவரா இணை 0-6 என்ற கணக்கில் தென் கொரியாவின் லிம் வூஜின்/கிம் வூஜின் கூட்டணியிடம் தோற்றது. இதையடுத்து, வெண்கலப் பதக்கத்துக்காக மெக்ஸிகோ அணியுடன் மோதுகிறது இந்த இந்திய இணை.

ரீகா்வ் மகளிா் தனிநபா் பிரிவில் தீபிகா குமாரி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளாா். காலிறுதியில் அவா், 6-4 என தென் கொரியாவின் ஜியோன் ஹன்யங்கை தோற்கடித்து அரையிறுதிக்கு வந்தாா். ரீகா்வ் ஆடவா் தனிநபா் காலிறுதியில் தருண்தீப் ராய் 3-7 என ஸ்பெயினின் ஆண்ட்ரெஸ் டெமினோவிடம் தோற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com