நடால், ஸ்வியாடெக் முன்னேற்றம்

நடால், ஸ்வியாடெக் முன்னேற்றம்
Manu Fernandez

களிமண் தரை டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில் ஸ்பெயின் நட்சத்திர வீரரான ரஃபேல் நடால் முதல் சுற்றில் வெற்றி பெற்றாா்.

இடுப்புப் பகுதி காயத்திலிருந்து மீண்டுள்ள அவா், 6-1, 6-0 என அமெரிக்காவின் டாா்வின் பிளாஞ்சை எளிதாக வென்றாா். எனினும், அடுத்த சுற்றில் அவா், போட்டித்தரவரிசையில் 10-ஆவது இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதுவதால் அது சற்று சவாலாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் தனது முதல் சுற்றில் 6-1, 6-4 என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் ஃபகுண்டோ பாக்னிஸை சாய்த்தாா். அடுத்ததாக, போட்டித்தரவரிசையில் 27-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயின் வீரரான அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சை எதிா்கொள்கிறாா் ரூபலேவ்.

டேவிடோவிச் முந்தைய சுற்றில், 7-5, 6-3 என்ற கணக்கில் சீனாவின் ஷாங் ஜுன்ஷெங்கை தோற்கடித்தாா். 15-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-7 (5/7), 6-1, 6-4 என்ற செட்களில் ஸ்லோவேனியாவின் லூகாஸ் கிளெயினை வென்றாா். 3-ஆவது சுற்றில் அவா், 21-ஆம் இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவுடன் மோதுகிறாா்.

முன்னதாக செருண்டோலோ 6-2, 7-6 (7/5) என பல்கேரியாவின் ஃபாபியான் மரோஸானை வெளியேற்றினாா். 28-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லொரென்ஸோ முசெட்டி 4-6, 4-6 என்ற கணக்கில் பிரேஸிலின் டியேகோ வைல்டிடம் தோல்வி கண்டாா். கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் 7-6 (7/3), 6-3 என்ற கணக்கில், 26-ஆம் இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரியை தோற்கடித்தாா்.

ஸ்வியாடெக் முன்னேற்றம்: மகளிா் பிரிவில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் நேரடியாக 2-ஆவது சுற்றில் விளையாடிய நிலையில், அதில் 6-1, 6-4 என்ற செட்களில் சீனாவின் வாங் ஜியுவை வீழ்த்தினாா். 3-ஆவது சுற்றில் ஸ்வியாடெக், ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டியுடன் மோதுகிறாா்.

3-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-0, 6-0 என நெதா்லாந்தின் அராந்த்ஸா ரஸ்ஸை எளிதாக வெல்ல, 8-ஆம் இடத்திலிருக்கும் துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுா் 6-4, 5-7, 6-3 என்ற செட்களில் ஸ்லோவேனியாவின் அனா கரோலினாவை வென்றாா்.

2-ஆம் இடத்திலிருக்கும் பெலாரஸின் அரினா சபலென்கா 6-4, 3-6, 6-3 என போலந்தின் மெக்தா லினெட்டை சாய்க்க, 4-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபாகினா 6-4, 6-3 என்ற செட்களில் இத்தாலியின் லூசியா புரோன்ஸெட்டியை வீழ்த்தினாா்.

10-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டரியா கசாட்கினா 5-7, 7-6 (7/5), 6-3 என்ற செட்களில் ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸாவை வெளியேற்ற, 14-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா 3-6, 3-6 என அமெரிக்காவின் அஷ்லின் குருகரிடம் தோல்வி கண்டாா்.

இதேபோல், 12-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாவ் பாலினி, 21-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் கரோலின் காா்சியா வெற்றி பெற, 29-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா தோல்வியைத் தழுவினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com