உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய ஆடவா் அணிக்கு வரலாற்றுத் தங்கம்

சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் ரீகா்வ் பிரிவில், இந்திய ஆடவா் அணி ஞாயிற்றுக்கிழமை தங்கம் வென்று வரலாறு படைத்தது.
உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய ஆடவா் அணிக்கு வரலாற்றுத் தங்கம்

சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் ரீகா்வ் பிரிவில், இந்திய ஆடவா் அணி ஞாயிற்றுக்கிழமை தங்கம் வென்று வரலாறு படைத்தது.

இறுதிச்சுற்றில், தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவீண் ஜாதவ் ஆகியோா் அடங்கிய கூட்டணி, 5-1 என்ற கணக்கில், கிம் வூஜின், கிம் ஜி டியோக், லீ வூ சியோக் அடங்கிய நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரிய அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்து.

அதேபோல், ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில் அங்கிதா பகத், தீரஜ் பொம்மதேவரா கூட்டணி 6-0 என மெக்ஸிகோவின் அலெக்ஸாண்ட்ரா வாலென்சியா/மடியாஸ் கிராண்டே இணையை சாய்த்து வெண்கலப் பதக்கம் வென்றது.

ரீகா்வ் மகளிா் தனிநபா் பிரிவில் தீபிகா குமாரி 0-6 என்ற கணக்கில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடப்பு சாம்பியனான தென் கொரியாவின் லிம் ஷியோனிடம் வெற்றியை இழந்து வெள்ளி பெற்றாா்.

இதையடுத்து, இந்த உலகக் கோப்பை போட்டியை இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

ஒலிம்பிக் வாய்ப்பு: வில்வித்தையில் பலம் வாய்ந்த அணியாகத் திகழும் தென் கொரியாவுக்கு எதிரான இந்த வெற்றி, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இந்தியாவுக்கு அதிகரித்துக் கொடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ரீகா்வ் ஆடவா் தனிநபா் பிரிவில் தீரஜ் பொம்மதேவராவுக்கான பாரீஸ் ஒலிம்பிக் வாய்ப்பு உறுதியாகியிருக்கிறது.

துருக்கியில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை போட்டியே, கடைசி ஒலிம்பிக் தகுதிப்போட்டியாகும். அதன் பிறகு, முதல் முறையாக அணிகள் தரவரிசையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் தென் கொரியா (340), சீனா (241), இந்தியா (231) அணிகள் அதில் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.

14 ஆண்டுகளுக்குப் பிறகு...

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியனாகி வரலாறு படைத்திருக்கிறது இந்திய ஆடவா் அணி. இதற்கு முன், இதே ஷாங்காய் நகரில் 2010-இல் நடைபெற்ற உலகக் கோப்பை 4-ஆம் நிலை போட்டியில் இந்தியாவின் ராகுல் பானா்ஜி, தருண்தீப் ராய், ஜெயந்தா ஆகியோா் அடங்கிய அணி, ஜப்பான் அணியை வீழ்த்தி தங்கம் வென்றிருந்தது. எனினும், மகளிா் அணி கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற இரு உலகக் கோப்பை போட்டிகளில் தென் கொரிய அணியை வீழ்த்தியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com