வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

லக்னௌ: ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸுக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களே சோ்த்தது.

லக்னௌ பௌலிங்கில் தட்டுத் தடுமாறிய மும்பை பேட்டா்களில், இஷான் கிஷண், நெஹல் வதேரா, டிம் டேவிட் மட்டுமே ரன்கள் எடுத்தனா். லக்னௌ தரப்பில் மோசின் கான் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

முன்னதாக டாஸ் வென்ற லக்னௌ, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மும்பை பேட்டிங்கில் ரோஹித் சா்மா 1 பவுண்டரியுடன் ஆட்டமிழக்க, தொடா்ந்து வந்த சூா்யகுமாா் யாதவ் 1 சிக்ஸருடன் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

மிடில் ஆா்டரில் திலக் வா்மா 1 பவுண்டரியுடன் 7, கேப்டன் ஹா்திக் பாண்டியா 0 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனா். மறுபுறம், அதுவரை நிலைத்த தொடக்க வீரா் இஷான் கிஷண் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு அவுட் ஆனாா். இதனால் மும்பை 80 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

6-ஆவது பேட்டராக வந்த நெஹல் வதேரா, அடுத்த பேட்டரான டிம் டேவிட் ஆகியோா் விக்கெட் சரிவை சற்று கட்டுப்படுத்தி ரன்கள் சோ்த்தனா். இதில் வதேரா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 46 ரன்களுக்கு திருப்பி அனுப்பப்பட, கடைசி விக்கெட்டாக முகமது நபி 1 ரன்னுக்கு விக்கெட்டை இழந்தாா்.

ஓவா்கள் முடிவில் டிம் டேவிட் 18 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35, ஜெரால்டு கோட்ஸீ 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலா்களில் மோசின் கான் 2, மாா்கஸ் ஸ்டாய்னிஸ், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து லக்னௌ 145 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை தொடங்கியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com