இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

புது தில்லி: இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

மாற்றத்துக்கு வாய்ப்புள்ள இந்த அணியில், சஞ்சு சாம்சன், யுஜவேந்திர சஹல், ரிஷப் பந்த், ஷிவம் துபே ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்க, ஷுப்மன் கில், ரிங்கு சிங் உள்பட 4 பேர் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி, வரும் ஜூன் 1 முதல் 29-ஆம் தேதி வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. அதற்கான அணிகள் அறிவிப்பை நியூஸிலாந்து திங்கள்கிழமை தொடங்கி வைத்த நிலையில், இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்தன.

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு, வழக்கம்போலவே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், அந்த அணி தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் அகமதாபாதில் புதன்கிழமை நடைபெற்றது. அதன் பிறகு டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

ரோஹித் கேப்டனாக இருக்கும் இந்த அணிக்கு, ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் தகுந்த ஃபார்மில் இல்லாததால் பாண்டியாவை சேர்ப்பதற்கு பலத்த விவாதம் இருந்ததாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

கேப்டனாகவும், பேட்டராகவும் வெற்றிகரமாக செயல்பட்டுவரும் சஞ்சு சாம்சன், விவாதத்துக்கு இடமின்றி ரிஷப் பந்துக்குப் பிறகான, 2-ஆவது விக்கெட் கீப்பர் - பேட்டராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். கே.எல்.ராகுல், இஷான் கிஷண் தவிர்க்கப்பட்டுள்ளனர்.

அணிக்கான இரு லெக் ஸ்பின்னர்களாக, யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சஹல், கடைசியாக 2023 ஆகஸ்ட்டில் இந்தியாவுக்காக விளையாடியிருந்தார்.

ரவீந்திர ஜடேஜா ஸ்பின் ஆல்-ரவுண்டராக இருக்கும் நிலையில், தேவைப்பட்டால் அவருக்கான மாற்று வீரராக அக்ஸர் படேல் செயல்படுவார்.

இந்த ஐபிஎல் போட்டியை சற்று தடுமாற்றத்துடன் தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், தற்போது சதமும் விளாசி சிறப்பாக விளையாடி வருவதால், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் புதுமையை புகுத்தாமல் இருந்ததே கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தோல்வி கண்டதற்கு காரணமாக விமர்சிக்கப்பட்ட நிலையில், அதனடிப்படையில் இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையிலேயே, ரிங்கு சிங் நல்லதொரு ஃபார்மில் இருந்தாலும், மிடில் ஆர்டரில் அட்டகாசமாக சிக்ஸர்களை விளாசுவதற்காக ஷிவம் துபேவை தேர்வாளர்கள் சேர்த்துள்ளனர். 2019-க்குப் பிறகு அவர் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். மோசமான கார் விபத்தை சந்தித்து, அதிலிருந்து மீண்டு முழு உடற்தகுதியுடன் இருக்கும் ரிஷப் பந்துக்கு அதற்கான பலனாக இந்த உலகக் கோப்பை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ரோஹித், கோலிக்கு இது கடைசி டி20 உலகக் கோப்பை போட்டியாக இருக்கலாம் என விவாதிக்கப்படும் நிலையில், டாப் ஆர்டரில் அவர்களது ஆட்டமும் கவனம் பெறும். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு துணையாக முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தேர்வாகியுள்ளனர். ஐபிஎல் போட்டியில் பலம் காட்டும் ஆவேஷ் கான் ரிசர்வ் வீரர் ஆகியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் போட்டியில் அதிரடி ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக், உலகக் கோப்பை

போட்டிக்கு தேர்வு செய்யப்படு வாரா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவர் சேர்க்கப்படவில்லை. அதேபோல், நடராஜன், ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படாததற்கும் கிரிக்கெட் விமர்சகர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து

டி20 உலகக் கோப்பை போட்டிக்காக ஜாஸ் பட்லர் தலைமையில் 15 பேருடன் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக ஓராண்டு இடைவேளைக்குப் பிறகு, வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இணைந்திருக்கிறார். கடைசியாக அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விளையாடியிருந்தார்.

அணியில் ஒரே அறிமுக வீரராக, இளம் ஆல்-ரவுண்டர் டாம் ஹார்ட்லிக்கு அறிமுக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த அணியில் இடம் பிடித்திருக்கும் பல இங்கிலாந்து வீரர்கள், நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் நிலையில், இம்மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்காக இங்கிலாந்து திரும்புகின்றனர். இதனால் அவர்கள் ஐபிஎல் போட்டியின் கடைசி கட்டத்தில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா

எய்டன் மார்க்ரம் தலைமையில், தென்னாப்பிரிக்க டி20 உலகக் கோப்பை அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக இது அவருக்கு முதல் உலகக் கோப்பை போட்டியாகும். மறுபுறம், காயம் காரணமாக 9 மாதங்கள் களம் காணாத வேகப்பந்து வீச்சாளர் அன்ரிஹ் நோர்கியா, இந்தப் போட்டியில் இணைகிறார்.

விக்கெட் கீப்பர் - பேட்டர் ரையான் ரிக்கெல்டன், வேகப்பந்து வீச்சாளர் ஆட்னியல் பார்ட்மேன் ஆகிய இரு வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எஸ்ஏ20 போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் அவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் தென்னாப்பிரிக்க அணி இம்மாதம் மேற்கிந்தியத் தீவுகளுடன் டி20 தொடரில் விளையாடவுள்ளது. எனினும், ஐபிஎல் போட்டியில் அங்கம் வகிக்கும் தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடவில்லை.

அணி விவரம்

ஜாஸ் பட்லர் (கேப்டன்),

மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர்,

ஜானி பேர்ஸ்டோ, ஹேரி புரூக்,

சாம் கரன், பென் டக்கெட்,

டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ்,

கிறிஸ் ஜோர்டான்,

லியம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷீத்,

ஃபில் சால்ட், ரீஸ் டாப்லீ,

மார்க் வுட்.

அணி விவரம்

எய்டன் மார்க்ரம் (கேப்டன்),

ஆட்னியல் பார்ட்மேன்,

ஜெரால்டு கோட்ஸீ,

குவின்டன் டி காக்,

ஜோரன் ஃபோர்டின்,

ரீஸா ஹெண்ட்ரிக்ஸ்,

மார்கோ யான்சென்,

ஹென்ரிக் கிளாசென்,

கேசவ் மஹராஜ், டேவிட் மில்லர்,

அன்ரிஹ் நோர்கியா,

ககிசோ ரபாடா,

ரையான் ரிக்கெல்டன்,

தப்ரைஸ் ஷம்ஸி,

டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com