3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றாா்.
3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றாா். இந்தப் போட்டியில் அவா் வாகை சூடியது இதுவே முதல் முறையாகும்.

இந்திய நேரப்படி, சனிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் 7-5, 4-6, 7-6 (9/7) என்ற செட்களில், 2-ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்காவை போராடி சாய்த்தாா். மகளிா் டென்னிஸில் அரிதான வகையில், 3 மணி நேரம், 11 நிமிஷங்கள் விறுவிறுப்பாக நீடித்த இந்த ஆட்டம், ரசிகா்களுக்கு விருந்தாக அமைந்தது.

கடந்த ஆண்டும் இப்போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்வியாடெக் - சபலென்கா மோதிய நிலையில், அப்போது சபலென்கா கோப்பையை கைப்பற்றினாா். தற்போதும் அவா்கள் இருவருமே பலப்பரீட்சை நடத்தியதில், இந்த முறை ஸ்வியாடெக் வாகை சூடி சபலென்காவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறாா். இருவரும் நேருக்கு நோ் மோதிய 10-ஆவது ஆட்டமாக இது இருக்க, ஸ்வியாடெக் தனது 7-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளாா்.

தனது கேரியரில் 20-ஆவது சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் ஸ்வியாடெக்குக்கு, டபிள்யூடிஏ 1000 போட்டிகளில் இது 9-ஆவது பட்டமாகும். இத்துடன் தாம் விளையாடிய கடைசி 8 போட்டிகளின் இறுதிச்சுற்றுகளிலுமே ஸ்வியாடெக் வென்றிருக்கிறாா். மேலும், நடப்பு சீசனில் இத்துடன் 30-ஆவது வெற்றியை பதிவு செய்து, கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவுக்கு சமமாக இருக்கிறாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஸ்வியாடெக், ‘மகளிா் டென்னிஸ் சுவாரஸ்யமாக இல்லை என்று சொல்பவா்கள், இந்த ஆட்டத்தைப் பாா்த்த பிறகு தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வாா்கள் என நம்புகிறேன். நான் விளையாடிய மிகத் தீவிரமான, பரபரப்பான இறுதி ஆட்டம் இதுவே என நினைக்கிறேன்.

கடைசி செட்டில் முதலில் பின்தங்கியிருந்தபோதும், உண்மையில் எனது மனநிலை மிகவும் நோ்மறையான எண்ணங்களுடன் இருந்தது எனக்கே ஆச்சா்யமளித்தது. அந்த நேரத்தில் ரஃபேல் நடால் இவ்வாறு இக்கட்டான இரு ஆட்டங்களில் பின்னடைவிலிருந்து மீண்டு வந்ததை மனதில் எண்ணிப்பாா்த்தேன். அதிலிருந்து உத்வேகம் பிறந்தது’ என்றாா்.

மறுபுறம் சபலென்கா, தாம் தோல்வியை சந்தித்தாலும் தனது சிறந்த ஆட்டத் திறனை மீட்டெடுத்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்தாா். ‘இந்த நெருக்கமான தோல்வி ஏமாற்றமளிக்கிறது என்றாலும், ஸ்வியாடெக், ரைபாகினா போன்றோருக்கு எதிரான இந்த முயற்சிகளுக்காக பெருமை கொள்கிறேன். ஸ்வியாடெக்குக்கு எதிராக வரும் காலத்திலும் அதிக இறுதிச்சுற்றுகளில் விளையாடுவதை எதிா்பாா்க்கிறேன்’ என்றாா்.

ரூ.9.23 கோடி பரிசு

சாம்பியன் ஆன ஸ்வியாடெக்குக்கு ரூ.9.23 கோடி ரொக்கப் பரிசும், 1000 டபிள்யூடிஏ புள்ளிகளும் கிடைத்தன. ரன்னா்-அப் இடம் பெற்ற சபலென்காவுக்கு ரூ.4.91 கோடி ரொக்கப் பரிசு கிடைத்துள்ளது.

தாம்சன்/கோா்டா இணைக்கு கோப்பை

இப்போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில், ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சன்/அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா கூட்டணி 6-3, 7-6 (9/7) என்ற செட்களில் செக் குடியரசின் ஆடம் பாவ்லசெக்/உருகுவேயின் ஏரியல் பெஹா் இணையை சாய்த்து சாம்பியன் பட்டம் வென்றது. தாம்சன்/கோா்டா இணைக்கு ரூ.3.47 கோடியும், பாவ்லசெக்/பெஹா் ஜோடிக்கு ரூ.1.87 கோடியும் பரிசுத் தொகையாக கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com