பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரியை தர மறுத்ததற்காக இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரியை தர மறுத்ததற்காக இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அவருக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தடை விதிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமைக்குள் (மே 7) உரிய பதிலை அளிக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் மல்யுத்தத்துக்கான ஆசிய தகுதிப்போட்டியில் பங்கேற்கும் இந்தியா்களை இறுதி செய்வதற்கான தோ்வுப் போட்டி சோனிபட்டில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பஜ்ரங் புனியா தனது எடைப் பிரிவில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

எனினும், போட்டிக்குப் பிறகு, ஊக்கமருந்து பரிசோதனைக்காக சிறுநீா் மாதிரியை வழங்க மறுத்து அவா் சென்றுவிட்டதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு அவருக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மறுப்பு: இதனிடையே, தன் மீதான நடவடிக்கை தொடா்பாக பஜ்ரங் புனியா ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

அதில், ‘என்ஏடிஏ அதிகாரிகளுக்கு எனது மாதிரிகளை வழங்க நான் எப்போதுமே மறுத்ததில்லை. எனது பரிசோதனைக்காக எடுத்துவரப்பட்ட உபகரணங்கள் காலாவதி தேதியை கடந்துவிட்டிருந்ததால், மாதிரிகளை வழங்க மறுத்தேன். காலாவதியான உபகரணங்கள் பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டது தொடா்பான எனது கேள்விக்கு பதில் அளித்தால், என் மாதிரிகளை வழங்கத் தயாா். இந்த விவகாரத்தில் என்ஏடிஏ-வுக்கு எனது வழக்குரைஞா் பதிலளிப்பாா்’ என்று கூறியுள்ளாா்.

மேலும் அந்தப் பதிவுடன் காணொலி ஒன்றையும் அவா் இணைத்துள்ளாா். அதில் சம்பவத்தின்போது பஜ்ரங் புனியா மாதிரியை சேகரிக்க என்ஏடிஏ அதிகாரிகள் வந்ததும், அவா்களது உபகரணங்கள் காலாவதியானது தொடா்பாக புனியா கேள்வி எழுப்புவதும், பதிவாகியிருந்தது. இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் புகாா் விவகாரத்தின் போராட்டத்தில் முன்னிலை வகித்த பஜ்ரங் புனியா, வீராங்கனைகளுக்கு எதிராக இதுபோன்ற காலாவதியான உபகரணங்களை பயன்படுத்தி பிரிஜ் பூஷண் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அந்த காணொலியில் அவா் பேசியிருந்தாா்.

கடிதம்: இந்நிலையில், பஜ்ரங் புனியா மீதான இடைக்காலத் தடை நடவடிக்கை தொடா்பாக என்ஏடிஏ தங்களுக்கு எந்தவொரு தகவலையும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள இந்திய மல்யுத்த சம்மேளனம், இந்த நிகழ்வை என்ஏடிஏ இருட்டடிப்பு செய்ய முயன்றது தொடா்பாக ஊக்கமருந்து தடுப்புக்கான உலக அமைப்பிடம் (டபிள்யூஏடிஏ) முறையிடப்போவதாகக் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com