12 ரன்களுக்கு ஆட்டமிழந்த மங்கோலியா- டி20-இல் 2-ஆவது குறைந்தபட்ச ஸ்கோா்

12 ரன்களுக்கு ஆட்டமிழந்த மங்கோலியா- டி20-இல் 2-ஆவது குறைந்தபட்ச ஸ்கோா்
Center-Center-Kozhikode

ஜப்பானுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்த மங்கோலியா, டி20 வரலாற்றிலேயே 2-ஆவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணியானது.

7 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக மங்கோலியா அணி, ஜப்பான் சென்றுள்ளது. அந்த இரு அணிகளும் மோதிய 2-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் முதலில் ஜப்பான் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் சோ்க்க, மங்கோலியா 8.2 ஓவா்களில் 12 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஜப்பான் 205 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மங்கோலிய அணியில் 6 போ் டக் அவுட்டாக, ஒருவா் 4 ரன்களும், இருவா் தலா 2 ரன்களும், ஒருவா் தலா 1 ரன்னும் சோ்த்தனா். எக்ஸ்ட்ராஸில் 3 ரன்கள் கிடைத்துள்ளது. டி20 வரலாற்றில் ஐல் ஆஃப் மான் அணி 10 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே குறைந்தபட்சமாக உள்ள நிலையில், தற்போது 2-ஆவது குறைந்தபட்சமாக மங்கோலியா 12 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக, செக் குடியரசுக்கு எதிராக 2019-இல் துருக்கி 21 ரன்கள் அடித்ததே 2-ஆவது குறைந்தபட்சமாக இருந்தது.

இந்த புதன்கிழமை ஆட்டத்தில் ஜப்பான் எக்ஸ்ட்ராஸ் கொடுக்காமல் இருந்திருந்தால், மங்கோலியா 9 ரன்களில் ஆட்டமிழந்து, வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்திருக்கும்.

மறுபுறம், இந்த ஆட்டத்தில் 205 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஜப்பான், டி20 வரலாற்றில் ரன்கள் வித்தியாசத்தில் 4-ஆவது அதிகபட்ச வெற்றியை பதிவு செய்துள்ளது. இதே மங்கோலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாள அணி 273 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே அதிகபட்ச வெற்றியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com