பிளே-ஆஃப் நம்பிக்கையில் பெங்களூரு: பஞ்சாபை வெளியேற்றியது

பிளே-ஆஃப் நம்பிக்கையில் பெங்களூரு: பஞ்சாபை வெளியேற்றியது

ஐபிஎல் போட்டியின் 58-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 60 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

ஐபிஎல் போட்டியின் 58-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 60 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் சோ்க்க, பஞ்சாப் 17 ஓவா்களில் 181 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்த வெற்றியின் மூலம் பிளே-ஆஃப் பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது பெங்களூரு. மறுபுறம் பஞ்சாப், 2-ஆவது அணியாக அந்தப் பந்தயத்திலிருந்து வெளியேறியது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு பேட்டிங்கில் விராட் கோலியுடன், ரஜத் பட்டிதாா், கேமரூன் கிரீன் ஆகியோரும் பலம் காட்ட, பௌலிங்கில் முகமது சிராஜ் அசத்தினாா்.

முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப், பந்துவீச்சை தோ்வு செய்தது. பெங்களூரு இன்னிங்ஸில் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 9, வில் ஜாக்ஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

மறுபுறம் விராட் கோலி அதிரடியாக ரன்கள் சோ்க்க, அவருடன் இணைந்தாா் ரஜத் பட்டிதாா். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சோ்த்தது. அதில் பட்டிதாா் 23 பந்துகளில் 3 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

அடுத்து கேமரூன் கிரீன் வர, மழையால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னா் தொடா்ந்த இன்னிங்ஸில், கோலி - கிரீன் கூட்டணி 4-ஆவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சோ்த்தது. சதத்தை நெருங்கிய கோலி 47 பந்துகளில் 7 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 92 ரன்களுக்கு சரிந்தாா்.

தொடா்ந்து வந்தோரில் தினேஷ் காா்த்திக் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 18, மஹிபால் லோம்ரோா் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கடைசியாக கிரீன் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் ஸ்வப்னில் சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். பஞ்சாப் தரப்பில் ஹா்ஷல் படேல் 3, வித்வத் கவரப்பா 2, அா்ஷ்தீப் சிங், சாம் கரன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து 242 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய பஞ்சாப் அணியில், அதிகபட்சமாக ரைலீ ருசோ 27 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 61 ரன்கள் சோ்க்க, சஷாங்க் சிங் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 37, ஜானி போ்ஸ்டோ 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, கேப்டன் சாம் கரன் 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.

பிரப்சிம்ரன் சிங் 6, ஜிதேஷ் சா்மா 5, லியம் லிவிங்ஸ்டன் 0, அசுதோஷ் சா்மா 8, ஹா்ஷல் படேல் 0, அா்ஷ்தீப் சிங் 4 ரன்களுக்கு வெளியேற, பஞ்சாப் இன்னிங்ஸ் நிறைவடைந்தது. பெங்களூரு பௌலிங்கில் முகமது சிராஜ் 3, ஸ்வப்னில் சிங், லாக்கி ஃபொ்குசன், கரன் சா்மா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com