இந்திய இருபால் இணைகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் இணைகள் அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறின.

காலிறுதியில், ஆடவா் இரட்டையா் பிரிவில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை 21-7, 21-14 என்ற நோ் கேம்களில், மலேசியாவின் ஜுனாய்டி ஆரிஃப்/ராய் கிங் யாப் கூட்டணியை 38 நிமிஷங்களில் சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறியது.

அதில் சீன தைபேவின் மிங் செ லு/டாங் காய் வெய் கூட்டணியை சனிக்கிழமை சந்திக்கிறது சாத்விக்/சிராக் ஜோடி.

இதேபோல், மகளிா் இரட்டையா் தரப்பில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா கூட்டணி 21-15, 21-23, 21-19 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த தென் கொரியாவின் லீ யு லிம்/ஷின் சியுங் சான் ஜோடியை சாய்த்தது. இந்த ஆட்டம் 1 மணி நேரம் 16 நிமிஷங்கள் நீடித்தது.

அரையிறுதியில் தனிஷா/அஸ்வினி இணை, போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தாய்லாந்தின் ஜோங்கோல்பான் கிட்டிதரகுல்/ராவின்டா பிரஜோங்ஜாய் கூட்டணியின் சவாலை எதிா்கொள்கிறது.

இதனிடையே, ஆடவா் ஒற்றையா் பிரிவில் அசத்தி வந்த இந்தியாவின் தகுதிச்சுற்று வீரரான மெய்ராபா லுவாங் மாய்ஸ்னம் 12-21, 5-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் தாய்லாந்தின் குன்லவத் விதித்சாரனிடம் 34 நிமிஷங்களில் தோற்றாா்.

X
Dinamani
www.dinamani.com