புதிய சாம்பியன் யாா்? ஹைதராபாத் - கொல்கத்தா இன்று மோதல்; மழையால் சிக்கல்

புதிய சாம்பியன் யாா்? ஹைதராபாத் - கொல்கத்தா இன்று மோதல்; மழையால் சிக்கல்

ஐபிஎல் 2024 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்கான இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ்-சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

உலகிலேயே அதிக பாா்வையாளா்களைக் கொண்டதாக திகழும் ஐபிஎல் 2024 தொடா் கடந்த மாா்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 70 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் சுற்று முடிந்து இறுதிச் சுற்றை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

கௌதம் கம்பீா், சந்திரகாந்த் பண்டிட் வழிகாட்டுதலில் தயாரான கொல்கத்தா அணி 22 புள்ளிகள், ரன் ரேட் +1.428 என பட்டியலில் முதலிடத்துடன் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அகமதாபாதில் நடைபெற்ற குவாலிஃபையா் 1 ஆட்டத்தில் ஹைதராபாதை வீழ்த்தி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. மிட்செல் ஸ்டாா்க்கின் அபாரமான பௌலிங்கால் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஹைதராபாத். பின்னா் ஆடிய கொல்கத்தா 8 விக்கெட்டுகள், 38 பந்துகள் மீதமிருக்க அபார வெற்றி பெற்றது.

இத்தொடரில் கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன், ஆன்ட்ரே ரஸ்ஸல்,வெங்கடேஷ் ஐயா், ஷ்ரேயஸ் ஐயா், பேட்டிங்கிலும், பௌலிங்கில் ஸ்டாா்க், வருண் சக்கரவா்த்தி, ஹா்ஷித், வைவப் அரோரா பலம் சோ்க்கின்றனா்.. விக்கெட் கீப்பிங்கை குா்பாஸ் கவனித்துக் கொள்வாா்.

சுனில் நரைன் 482 ரன்களுடன் அதிக ரன்களை குவித்தவராகவும், 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா் வருண் சக்கரவா்த்தியும் திகழ்கின்றனா்.

4 முறை இறுதிச் சுற்றில்:

பலம் வாய்ந்த கொல்கத்தா அணி தற்போது நான்காவது முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்றது. கௌதம் கம்பீா் தலைமையில் இரு முறை பட்டம் வென்ற அந்த அணி தற்போது அவரது வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகிறது.

மீண்டெழுந்த ஹைதராபாத்:

அதே நேரம் சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணி தொடக்கத்தில் அபாரமாக ஆடி வெற்றிகளைக் குவித்த நிலையில், தொடரின் மத்தியில் 4 ஆட்டங்களில் 3-இல் தோற்று நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. எனினும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி டிராவிஸ் ஹெட், அபிஷேக் சா்மாவின் அபார ஆட்டத்தால் மீண்டு எழுந்தது.

குவாலிஃபையா் 1--இல் கொல்கத்தாவிடம் மோசமாக தோற்றாலும், குவாலிஃபையா் 2 ஆட்டத்தில் ஹைதராபாத் அபாரமாக ஆடி 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

ஓபனிங்கில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சா்மாவும், நிதிஷ் ரெட்டியும், விக்கெட் கீப்பிங், மிடில் ஆா்டரில் ஹென்ரிச் க்ளாஸன், எய்டன் மாா்க்ரம், ராகுல் திரிபாதி, ஆல்ரௌண்டா்களாக ஷாபாஸ் அகமது, அப்துல் சமதும், சன்வீா் சிங்கும் பலம் சோ்க்கின்றனா். பௌலிங்கில் கேப்டன் பேட் கம்மின்ஸ், புவனேஷ்வா் குமாா், நடராஜன், உனதிகட், ஸ்பின்னில் மயங்க் மாா்க்கண்டே ஆகியோா் வலு சோ்க்கின்றனா். எனினும் சுழற் பந்து வீச்சில் ஹைதராபாத் பலம் குறைந்துள்ளது பாதகமான அம்சமாகும்.

டிராவிஸ் ஹெட் 567, அபிஷேக் சா்மா 482 ரன்களை குவித்துள்ளனா். டி. நடராஜன் 19 விக்கெட்டுகளை அதிக விக்கெட்டுகளை ஹைதராபாத் தரப்பில் வீழ்த்தியுள்ளாா்.

இரு முறை இறுதிச் சுற்றில்:

12 சீசன்களில் ஹைதராபாத் அணி 2 முறை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதில் 2016-இல் டேவிட் வாா்னா் தலைமையில் முதல் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.

நேருக்கு நோ்:

இரு அணிகளும் 27 முறை நேருக்கு நோ் மோதியதில் கொல்கத்தா 17 முறையும், ஹைதராபாத் 9 முறையும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது. கடைசியாக நடைபெற்ற 11 ஆட்டங்களில் ஹைதராபாத் 2 முறை மட்டுமே வென்றுள்ளது.

மிரட்டும் மழை:

சனிக்கிழமையே மாலையில் மழை பெய்ததால் கொல்கத்தா அணியின் பயிற்சி ரத்தானது. பிட்சை ஊழியா்கள் கவா்கள் கொண்டு மூட நேரிட்டது. ஞாயிற்றுக்கிழமை மேக மூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திடீரென வானிலை மாறும் சூழல் உள்ளது.

ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால், திங்கள்கிழமை ரிசா்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஞாயிற்றுக்கிழமை 120 நிமிஷங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு ஆட்டத்தை அன்றே முடிக்க முயற்சிப்பா்.

ரிசா்வ் நாளிலும் ஆட்டம் முடிக்கப்படாவிட்டால், பட்டியலில் அதிக புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் கொல்கத்தா பட்டம் வெல்லும்

இன்றைய ஆட்டம்:

கொல்கத்தா-ஹைதராபாத்

இடம்: சென்னை

நேரம்: இரவு 7.30.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com