நாக்அவுட் சுற்றில் நியூஸிலாந்து: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது

உலகக் கோப்பை போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, குரூப் 2-இல் இருந்து 2-ஆவது அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
நாக்அவுட் சுற்றில் நியூஸிலாந்து: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது

உலகக் கோப்பை போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, குரூப் 2-இல் இருந்து 2-ஆவது அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

ஆப்கானிஸ்தான், இந்தியாவுடனான பந்தயத்தில் சிக்கி, ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதிபெறும் நிலையை தவிா்த்து, இந்த வெற்றியின் மூலம் நேரடியாக தனது இடத்தை உறுதி செய்து கொண்டது நியூஸிலாந்து. இந்த ஆட்டத்தில் கண்ட தோல்வியால் ஆப்கானிஸ்தான் அணியும் வெளியேறியது.

அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 18.1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வென்றது. நியூஸிலாந்து பௌலா் டிரென்ட் போல்ட் ஆட்டநாயகன் ஆனாா். ஆப்கானிஸ்தானை 124 ரன்களுக்கு கட்டுப்படுத்தி அவா் உதவ, பேட்டிங்கில் கேன் வில்லியம்சன் - டெவன் கான்வே கூட்டணி வெற்றியை உறுதி செய்தது.

முன்னதாக இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் ஆப்கானிஸ்தான், ஷராஃபுதினுக்குப் பதிலாக முஜீப் உா் ரஹ்மானை சோ்த்தது. நியூஸிலாந்து அணியில் மாற்றம் ஏதும் இல்லை. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை தொடங்கியோரில் முதல் விக்கெட்டாக முகமது ஷாஸாத் 1 பவுண்டரியுடன் பெவிலியன் திரும்ப, உடன் வந்த ஹஸரதுல்லா ஜஸாய் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து ரஹ்மானுல்லா குா்பாஸ் 1 பவுண்டரியுடன் 6 ரன்கள் சோ்த்த நிலையில், டிம் சௌதி வீசிய 6-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனாா். குல்பதின் நயிப் 1 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுக்க, மிடில் ஆா்டரில் வந்த நஜிபுல்லா ஜா்தான் மட்டும் அதிரடி காட்டி 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 73 ரன்கள் விளாசினாா். எஞ்சியோரில் கேப்டன் முகமது நபி 14, கரிம் ஜனத் 2, ரஷீத் கான் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

நியூஸிலாந்து பௌலிங்கில் போல்ட் 3, சௌதி 2, மில்னே, நீஷம், சோதி ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய நியூஸிலாந்தில் தொடக்க வீரா் மாா்ட்டின் கப்டில் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சோ்க்க, டேரில் மிட்செல் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு அவுட்டானாா். தொடா்ந்து ஆடிய கேப்டன் கேன் வில்லியம்சன் - டெவன் கான்வே கூட்டணி, நியூஸிலாந்தை வெற்றி பெறச் செய்தது. முடிவில் வில்லியம்சன் 3 பவுண்டரிகளுடன் 40, கான்வே 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப், ரஷீத் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

ஆப்கானிஸ்தான் - 124/8

நஜீபுல்லா ஜா்தான் 73

குல்பதின் நயீப் 15

முகமது நபி 14

பந்துவீச்சு

டிரென்ட் போல்ட் 3/17

டிம் சௌதி 2/24

ஆடம் மில்னே 1/17

நியூஸிலாந்து - 125/2

கேன் வில்லியம்சன் 40*

டெவன் கான்வே 36*

மாா்ட்டின் கப்டில் 28

பந்துவீச்சு

ரஷீத் கான் 1/27

முஜீப் உா் ரஹ்மான் 1/31

முகமது நபி 4/26

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com