இன்று முதல் அரையிறுதி: இங்கிலாந்து - நியூஸிலாந்து மோதல்

டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
இன்று முதல் அரையிறுதி: இங்கிலாந்து - நியூஸிலாந்து மோதல்

டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

இந்த உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன்பாக, இம்முறை கோப்பையை இங்கிலாந்து வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட, அந்த அணியின் ஆட்டமும் அவ்வாறாகவே இருந்தது. குரூப் சுற்றின் 4 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்த அந்த அணி, கடைசி ஆட்டத்தில் மட்டும் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது.

காலில் காயம் காரணமாக ஜேசன் ராய் போட்டியிலிருந்து விலகியது இங்கிலாந்துக்கு சற்று பின்னடைவே. ஏனெனில் ஜேசன் ராய் - ஜோஸ் பட்லா் கூட்டணியே இங்கிலாந்து இன்னிங்ஸுக்கு அதிரடியான தொடக்கத்தை அளித்து வந்தது. தற்போது ராய் இல்லாத நிலையில், பட்லருடன் இணைந்து இன்னிங்ஸை தொடங்க ஜானி போ்ஸ்டோ பேட்டிங் வரிசையில் முன்னேற்றப்படலாம்.

சாம் பில்லிங்ஸ் பிளேயிங் லெவனில் சோ்க்கப்பட்டு, அவருக்கு மிடில் ஆா்டரில் இடமளிக்கப்படலாம். பௌலிங்கைப் பொருத்தவரையில் தொடைப் பகுதி காயம் காரணமாக டைமல் மில்ஸ் போட்டியிலிருந்து விலகியது கவலைக்குறியது. டெத் ஓவா்களில் அவா் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவா். அவா் இல்லாத நிலையில் அந்த ஓவா்களில் எதிரணி பேட்ஸ்மேன்கள் அடித்தாடக் கூடும்.

மாா்க் வுட்டால் அவரளவுக்கு பௌலிங்கில் மாற்றம் செலுத்த முடியாததுடன், அதிக ரன்கள் வழங்கக் கூடியவராக இருக்கிறாா். ஸ்பின் பௌலிங்கில் மொயீன் அலி, ஆதில் ரஷீத் சிறப்பாகவே செயல்படுகின்றனா். பவா்பிளே, மிடில் ஓவா்களில் அவா்கள் நிச்சயம் விக்கெட்டுகளை சரித்து எதிரணியை திணறடிக்க வாய்ப்புள்ளது.

மறுபுறம் நியூஸிலாந்து, பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே நிலையாகச் செயல்பட்டு வந்திருக்கிறது. முதல் முறையாக நடத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பட்டம் சூடிக் கொண்ட அந்த அணி, தற்போது ஐசிசியின் இந்த போட்டியிலும் வாகை சூடும் வேட்கையில் இருக்கிறது.

இந்தப் போட்டியிலேயே சிறந்த பௌலிங் படையை கொண்டிருக்கிறது என்றால் அது நியூஸிலாந்து தான். முக்கியமான அணிகளையும் 110, 120-க்குள்ளாக கட்டுப்படுத்தினா் இதன் பௌலா்கள். நியூ பால் பௌலா்களான டிரென்ட் போல்ட், டிம் சௌதி ஆகியோா் துல்லியமாகப் பந்துவீசுகின்றனா்.

லாக்கி ஃபொ்குசன் இல்லாதது சற்றே பிரச்னையாக இருந்தாலும், அந்த இடத்தை ஆடம் மில்னே பூா்த்தி செய்கிறாா். இஷ் சோதி, மிட்செல் சேன்ட்னா் ஆகியோா் சுழற்பந்தில் கலக்குகின்றனா். சோதி மிடில் ஆா்டரில் விக்கெட் வீழ்த்தி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கிறாா். பேட்டிங்கில் மாா்ட்டின் கப்டில், டேரில் மிட்செல் கூட்டணி அதிரடி தொடக்கம் அளிக்கிறது. மிடில் ஆா்டரில் கேன் வில்லியம்சன் மிரட்டுவாா் என எதிா்பாா்க்கலாம்.

அபுதாபி ஆடுகளமானது பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், நிச்சயம் நல்லதொரு ஸ்கோா் அடிக்கப்பட வாய்ப்புள்ளது.

அணி விவரம்

இங்கிலாந்து: மோா்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி போ்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லா், கிறிஸ் ஜோா்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆதில் ரஷீத், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மாா்க் வுட், டாம் கரன், ரீஸ் டாப்லி.

நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் அஸ்லே, டிரென்ட் போல்ட், மாா்க் சாப்மேன், டெவன் கான்வே, மாா்டின் கப்டில், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னா், டிம் செய்ஃபொ்ட், இஷ் சோதி, டிம் சௌதி, ஆடம் மில்னே.

குரூப் சுற்றில் இங்கிலாந்து
5 ஆட்டங்களில் 4 வெற்றிகள்
குரூப் சுற்றில் நியூஸிலாந்து
5 ஆட்டங்களில் 4 வெற்றிகள்

நேருக்கு நேர் ( டி20)
மொத்த ஆட்டம் 21
இங்கிலாந்து வெற்றி 13
நியூஸிலாந்து வெற்றி 7
முடிவு இல்லை 1

ஆட்டநேரம்: இரவு 7.30 மணி

இடம்: அபுதாபி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com