கடைசி வரை அதிரடி காட்டிய பாகிஸ்தான்: இந்தியாவுக்கு 160 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
கடைசி வரை அதிரடி காட்டிய பாகிஸ்தான்: இந்தியாவுக்கு 160 ரன்கள் இலக்கு!


டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மெல்போர்னில் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சூழலைக் கருத்தில் கொண்டு தொடக்கத்தில் பந்து 'ஸ்விங்' ஆகும் என்பதால், அதைப் பயன்படுத்த விரும்புவதாக ரோஹித் தெரிவித்தார்.

மிரட்டல் தொடக்கம்:

இதற்கேற்றார் போல முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் மிகச் சிறப்பாக வீசினார். வைட் மூலமாக மட்டுமே 1 ரன்னைக் கொடுத்தார். 2-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அவர், முதல் பந்திலேயே பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கே உரித்தான முறையில் எல்பிடபிள்யு செய்தார்.

இதன்பிறகு, புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் தொடர்ந்து ஸ்விங் பந்துகள் மூலம் பாகிஸ்தானுக்கு நெருக்கடியளித்தனர். இந்த நேரத்தில் அர்ஷ்தீப் சிங், தனது இரண்டாவது ஓவரில் திடீரென ஷாட் பிட்ச் பந்தை வீச ரிஸ்வான், பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார்.

பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு, ஷான் மசூத் மற்றும் இஃப்திகார் அகமது பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்.

அசத்தல் பாட்னர்ஷிப்:

இந்த இணை ஹார்திக் பாண்டியா ஓவரில் சற்று துரிதமாக ரன் சேர்க்க முயற்சிக்க, சுழற்பந்துவீச்சாளர்களையே தொடர்ச்சியாகப் பந்துவீச அழைத்தார் ரோஹித்.

ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 11-வது ஓவரில் இஃப்திகார் அகமது இமாலய சிக்ஸர் அடித்து அதிரடிக்கு மாறினார். அக்சர் படேல் வீசிய அடுத்த ஓவரில் இஃப்திகார் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டது மட்டுமில்லாமல், கடைசி பந்தில் 3 ரன்களை சேர்த்தார்.

அக்சர் ஓவரில் 21 ரன்கள்:

அந்த ஓவரில் பாகிஸ்தானுக்கு 21 ரன்கள் கிடைத்தது மட்டுமில்லாமல், இஃப்திகாரும் அரைசதத்தை எட்டினார்.

நம்பிக்கை நாயகன் ஷமி:

ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்புகிறது என்றவுடன், உடனடியாக சுழற்பந்துவீச்சை நிறுத்தி முகமது ஷமியை மீண்டும் பந்துவீச அழைத்தார் ரோஹித்.

இதற்குப் பலனாக, இஃப்திகார் அகமது 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பலே பாண்டியா:

பாகிஸ்தானும் ரன் ரேட்டை உயர்த்த முயற்சித்து, ஷதாப் கானை முன்கூட்டியே களமிறக்கியது. அவரை 5 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார் பாண்டியா. இதே ஓவரில் அடுத்து களமிறங்கிய ஹைதர் அலியையும் சூர்யகுமார் யாதவிடமே கேட்ச் ஆகச் செய்தார் பாண்டியா.

ஸ்பைடர் கேம் சர்ச்சை:

களத்தில் ஷான் மசூத் மற்றும் மகுமது நவாஸ் இருந்ததால், சரியான நேரமெனக் கருதி சுழற்பந்துவீச்சை முடிக்க நினைத்து அஸ்வினிடம் பந்தைக் கொடுத்தார் ரோஹித். இதற்குப் பலனாக மசூத் விக்கெட் கிடைத்திருக்கும். ஆனால், பந்து ஸ்பைடர் கேமில் (Spider Cam) பட்டு கீழே விழ, இந்தியர்கள் விரக்திக்குள்ளானார்கள். இந்திய அணிக்கு விக்கெட் வாய்ப்பு பறிபோனது.

அடுத்து பந்துவீசிய பாண்டியா, 2 பவுண்டரிகளை கொடுத்தாலும், அச்சுறுத்தலை உண்டாக்கக் கூடிய நவாஸ் விக்கெட்டை கைப்பற்றினார்.

தொடக்கத்தில் மிரட்டிய அர்ஷ்தீப் சிங், கடைசி நேரத்திலும் மிரட்டி ஆசிப் அலியை ஷாட் பிட்ச் பந்து மூலம் வீழ்த்தினார்.

ஆனால், இந்திய அணி கடைசி 3 ஓவர்களில் நிறைய ரன்களை கொடுத்தது.

கடைசி 3 ஓவரில் அதிரடி:

18-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரில் மசூத் 2 பவுண்டரிகள் விளாச, பாகிஸ்தானுக்கு 10 ரன்கள் கிடைத்தன. 

இதுவரை சிறப்பாக வீசி வந்த அர்ஷ்தீப் சிங், 19-வது ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி உள்பட 14 ரன்களை கொடுத்தார். மசூதும் இந்த ஓவரில் தனது அரைசதத்தை எட்டினார்.

கடைசி ஓவரில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக வீசி ஷஹீன் அஃப்ரிடி (8 பந்துகள் 16 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினாலும், ஹாரிஸ் ரௌஃப் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். எனினும், கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

நிர்ணயிக்கப்பட் 20 ஓவரில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மசூத் 42 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணித் தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com