

மதுரை, ஜூன் 16: மதுரை அருகே திங்கள்கிழமை இரவில் கண்டெடுக்கப்பட்ட கூஜா குண்டுகளில் பத்து குண்டுகளை போலீஸôர் செவ்வாய்க்கிழமை காலை செயலிழக்கச் செய்தனர்.
மதுரை வண்டியூர் சாலை, சுற்றுச்சாலை சந்திப்பு பகுதியில் பொக்லைன் சம்பந்தமான ஒர்க்ஷாப் உள்ளது. இதில் கடந்த ஓராண்டாக ராஜபாளையம் பகுதி சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்த ஆரியன்மதுரம் என்ற மகேஷ் வேலை செய்து வருகிறார்.
திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் தனது நண்பருடன் அப்பகுதியில் சிறுநீர் கழிக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த சிறிய பாலத்தின் பக்கவாட்டில் புதிய பை ஒன்று கிடந்தது. பையை எடுத்துப் பிரித்த மகேஷ், அதனுள் "கூஜா' என கூறப்படும் சிறிய சில்வர் பாத்திரங்கள் இருந்ததை கண்டார்.
பையில் 13 பாத்திரங்கள் இருந்தன. அதில் ஒன்றை எடுத்த மகேஷ், அதன் மூடியைத் திறக்க முயன்றார். முடியவில்லை.
அப்போது அருகிலிருந்த நண்பர், அது வெடிகுண்டாக இருக்கலாம் என எச்சரித்தார். உடனே கையிலிருந்த கூஜாவை மகேஷ் எறிந்ததாகத் தெரிகிறது.
அந்தக் கூஜா, பாலத்தின் அடியில் இருந்த தண்ணீரில் விழுந்தது. மற்றொரு கூஜாவை எடுத்த மகேஷ், அதை பாலத்தின் பக்கவாட்டில் வீசினார். கல்லில் பட்ட கூஜா திடீரென வெடித்தது. அதிலிருந்து வந்த சிதறல்கள் மகேஷ் மற்றும் அவரது நண்பரின் முகத்தில் பட்டன.
இதனால் பயந்துபோன மகேஷ், தமது வழக்கறிஞர் என். சிவமுருகனிடம் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் கருப்பாயூரணி போலீஸ் நிலையத்துக்கு மகேஷை அழைத்துவந்து புகார் அளிக்கவைத்தார்.
அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீஸôர், கூஜாக்கள் இருந்ததாகக் கூறப்படும் பையைக் கைப்பற்றி பார்த்தபோது, அதில் இருந்த கூஜாக்கள் அனைத்தும் வெடிகுண்டுகள் எனத் தெரியவந்தது. 3 வகையான கூஜாக்கள் வெடிகுண்டாக அமைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் இரவு முழுதும் அங்கேயே அவற்றை வைத்திருந்தனர். பின்னர் செவ்வாய்க்கிழமை காலையில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் சிறப்பு போலீஸôர் உதவியுடன் அவற்றை வெடிக்கச் செய்தனர். குண்டுகள் வெடித்தபோது சுமார் 50 அடி உயரத்துக்கு புகைமண்டலம் எழுந்தது.
கூஜா குண்டுகளில் ஒன்றிலிருந்த வெடிமருந்துகளை எடுத்து பத்திரப்படுத்தினர்.
இந்தக் குண்டுகள் வைக்கப்பட்டிருந்த பையில் கைலி, பனியன், ஜட்டிகள் இருந்தன.
அதிகாரிகள் விசாரணை: கூஜா குண்டுகளை செயலிழக்கச் செய்யும் இடத்துக்கு, தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சஞ்சீவ்குமார், மதுரை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் (பொறுப்பு) விருதுநகர் எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோர் நேரில் வந்தனர்.
அப்போது சஞ்சீவ்குமார் கூறுகையில், சாதாரண நாட்டு வெடிகுண்டுகளுக்கு உரிய பொருள்களைச் சேர்த்து கூஜாவில் வைத்துள்ளனர். குண்டுகளை எந்த நோக்கத்துக்காக தயாரித்துள்ளனர் எனத் தெரியவில்லை. அழுத்தம் தந்தால் வெடிக்கும் வகையில் குண்டுகள் இருந்தன. தீவிரவாத அமைப்புகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா என தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறோம் என்றார்.
ஒரு குண்டு எங்கே?: போலீஸôரால் பத்து குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. ஒரு குண்டு மாதிரிக்காக வைக்கப்பட்டது. தண்ணீரில் விழுந்ததாக மகேஷ் கூறிய ஒரு குண்டை போலீஸôர் இன்னும் மீட்கவில்லை.
அதிக சேதத்தை உருவாக்கும் குண்டுகள்
மதுரை, ஜூன் 16: கூஜா வகை குண்டுகள் பொது இடத்தில் வெடித்திருந்தால் அதிகளவு சேதத்தை உருவாக்கியிருக்கும் என போலீஸôர் கூறினர்.
கூஜா குண்டுகளில் நாட்டு வெடிகுண்டுக்கு பயன்படுத்தும் மூலப் பொருள்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் பீங்கான், பிளேடு துகள்கள், சைக்கிள் பால்ரஸ் குண்டுகள், கூழாங்கற்கள் ஆகியவையும் அதில் சேர்க்கப்பட்டிருந்தன. மிகுந்த அழுத்தம் தந்தால் வெடிக்கும் வகையில் குண்டுகள் தயாரிக்கப்பட்டிருந்தன.
ஏதாவது ஒன்று அழுத்தும் பட்சத்தில் பொது இடத்தில் கூஜா குண்டுகள் வெடித்திருந்தால், சுமார் 30 மீட்டர் அளவுக்கு பலத்த சேதமும், சுமார் 50 மீட்டர் அளவுக்கு லேசான சேதமும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக போலீஸôர் கூறினர்.
கூஜாவை வெடிகுண்டாகப் பயன்படுத்த தேர்வு செய்தவர்கள் தீவிரவாதிகளாகத்தான் இருப்பர் என போலீஸôர் சந்தேகிக்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள பாண்டி கோயில் பகுதியில், பல மாதங்களுக்கு முன் நெல்லை பகுதியைச் சேர்ந்த மத தீவிரவாத அமைப்பினர் வெடிபொருள்களை பதுக்கிவைத்து இருந்ததாக புகார் எழுந்தது. இமாம் அலியை சில ஆண்டுகளுக்கு முன்னர் தீவிரவாதிகள் மீட்டுச் சென்ற சம்பவத்தின்போதும் இதே பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதே பகுதியில் தற்போது கூஜா குண்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.