நிலையாமையைப் பாடியதேன்?

தமிழ் இலக்கிய உலகில் நிலையாமையைப் பற்றிய சிந்தனை நெடுங்காலமாக உள்ளது. இளமை, யாக்கை, செல்வம் போன்றவை நிலைக்காது என்று உணர்ந்த சான்றோர், தாம் உணர்ந்த நிலையாமையை மக்கள் உய்திபெறும் பொருட்டுப் பாடி வைத்தன

தமிழ் இலக்கிய உலகில் நிலையாமையைப் பற்றிய சிந்தனை நெடுங்காலமாக உள்ளது. இளமை, யாக்கை, செல்வம் போன்றவை நிலைக்காது என்று உணர்ந்த சான்றோர், தாம் உணர்ந்த நிலையாமையை மக்கள் உய்திபெறும் பொருட்டுப் பாடி வைத்தனர்.

""நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு''

  என்று பாடினார் வள்ளுவர். நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று கூறும் பெருமையை உடையது இவ்வுலகம் என்றார் அவர். நிலையாமையைப் பாடியது அச்சுறுத்துவதற்கோ, விரக்தியில் ஆழ்த்துவதற்கோ அன்று. அறச்செயல்களில் நெறிப்படுத்துவதற்கும் ஆண்டவனை நாடும் ஆன்மிக நாட்டத்தில் ஈடுபடுத்துவதற்கும் நிலையாமையை உணர்த்தினர் சான்றோர்.

  சங்க காலத்தில் அரசாண்ட புகழ்மிக்க சோழ மன்னர்களில் நலங்கிள்ளியும் ஒருவன். அவன் போர் புரிவதிலும் அதனால் கிடைக்கும் வெற்றியில் மகிழ்வதிலும் ஈடுபாடு உள்ளவனாக இருந்தான். பாடல் புனையும் ஆற்றல் மிக்க புலவனாகவும் திகழ்ந்த அவனுக்கு, உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற பெரும்புலவர், நிலையாமையைச் சுட்டி, அறச்செயல்களில் ஈடுபட அறிவுறுத்திய இரண்டு புறநானூற்றுப் பாடல்கள் குறிப்பிடத்தக்கவை. அவற்றுள் ஒன்று:

""தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்

மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்

அறியா தோரையும் அறியக் காட்டித்

திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து

வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி

அருள வல்லை ஆகுமதி''

  ""நலங்கிள்ளியே! வளர்ந்தது ஒன்று குறையும்; குறைந்தது ஒன்று பின் வளரும்; பிறந்த ஒன்று இறக்கும்; இறந்த ஒன்று பின் பிறக்கும். கல்வியறிவு இல்லாதோரும் இவ்வுண்மையை உணரும் வண்ணம், வானில் நிலவு, தோன்றியும் மறைந்தும் வளர்ந்தும் தேய்ந்தும் நிலையாமையைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, வறுமையால் வருத்தமுற்று வந்தோர்க்கு, பசியால் உட்குழிந்த அடிவயிற்றைப் பார்த்துப் பொருளை வாரி வழங்கி அருள்புரிக! என்பது பொருள். சேர்த்த பொருளை வறுமையில் வாடும் மானிடர்க்கு வழங்கி அறச்செயல்களில் ஈடுபடுக என்று கூறவரும் புலவர், நிலையாமையைச் சுட்டிக்காட்டி, நிலைபேறில்லாத உலகில், சேர்த்த பொருளைப் பலன் இன்றி இருப்பிடத்திலேயே குவித்து வைக்காமல் பிறருக்கு வழங்கி நன்மை புரிக என்று அறிவுறுத்தியது நோக்கத்தக்கது.

  நீதிநூல்களும், நிலையாமையைக் கூறி அறச் செயல்களில் ஈடுபடவே அறிவுரைகளை வழங்குகின்றன. நிலையாமை என்ற அதிகாரத்தில்,

""நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்''

  என்று வள்ளுவர் பாடுகிறார். உரையாட முடியாமல் நாவை அடக்கி விக்கல் வரும் முன்னர், நல்ல அறச் செயல்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ""உயிரானது கழிவதன் முன்னே நல்வினையைச் செய்ய வேண்டும் என்றது'' என்று இதற்கு மணக்குடவர் விளக்கம் எழுதுவார். எவரும் இங்கே நிலையாகவே இருந்துவிட முடியாது; மரணம் வரும்; எனவே மரணம் வரும்முன் அறச்செயல்களைச் செய்க என்று அறிவுறுத்துகிறார் வள்ளுவர். நாலடியார் போன்ற நீதி நூல்களிலும் இத்தகு கருத்துகளைக் காணலாம்.

  பழந்தமிழ்ப் புலவர்கள் நிலையாமையைச் சுட்டிக்காட்டி அறச் செயல்களில் நெறிப்படுத்தியது போல, பக்தி இலக்கியம் பாடிய கவிஞர்கள் பலரும் நிலையாமையைச் சொல்லி, ஆன்மிக நாட்டத்தில் மக்களை ஈடுபடுத்தினார்கள். சைவ சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட திருஞானசம்பந்தர், திருச்சாய்க்காடு என்ற தலப் பதிகத்தில்,

""நீநாளும் நன்நெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்

சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டெம் பெருமாற்கே

பூநாளும் தலை சுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப

நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே''

  என்று பாடி, தம் நெஞ்சுக்குக் கூறுவதுபோல நமக்கு அறிவுரை கூறுகிறார் புகலிவேந்தர். ""இவ்வுலகில் பிறந்த நாம் எவ்வளவு காலம் வாழ்வோம்; எப்போது சாவு வரும் என்று யார் அறிவார்? எனவே, நாள்தோறும் இறைவனை மலர்தூவித் துதிபாடி வழிபடுக'' என்று நிலையாமையைக் கூறி இறைவழிபாட்டில் நெறிப்படுத்துகிறார். அப்பரடிகளும்,

""இன்று ளார்நாளை இல்லை யெனும் பொருள்

ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்

அன்று வானவர்க் காக விடமுண்ட

கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்மினே''

  என்று நிலையாமையைக் கூறி, இறைவழிபாட்டில் மக்களை நெறிப்படுத்துகிறார். அப்பர் பெருமானின் இப்பாடலில் வள்ளுவர் குறள் ஒலிப்பதைக் காணலாம்.

  15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரோ, ஏழைகளுக்குப் பொருள் தந்து காப்பாற்றும் அறச்செயலையும், ஆண்டவனைத் துதித்து வழிபடும் பக்தி நாட்டத்தையும் ஒருசேர இணைத்துப் பாடுகிறார்.

""வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்

நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள் நுங்கட்கிங்ஙன்

வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்

கையிற் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே''

  என்பது அவர்தம் கந்தர் அலங்காரப் பாடல். வெயிலுக்கு ஒதுங்கி நிற்க உதவாத இந்த உடலின் பயனற்ற நிழலைப் போல இறுதியில் உயிர் பிரியும் காலத்துக் கைப்பொருள் உதவாது. எனவே, குமரக்கடவுளைத் துதித்து இயன்றவரை ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று நல்ல உவமையழகோடு அறிவுறுத்துகிறார் அருணகிரிநாதர். நம் உடம்பு நிழல், வெயிலுக்கு ஒதுங்க நமக்கு உதவாது; அதுபோல நம் கைப்பொருள் உயிர் பிரியும் காலத்தில் நமக்கு உதவாது என்ற அறிவுரை இங்கு கருதத்தக்கது.

  நல்லறச் செயல்களில் நெறிப்படுத்தவும், இறை வழிபாட்டில் ஈடுபடுத்தவும், நிலையாமைச் சுட்டிக் காட்டப்பட்டது.  இதைப் புரிந்து கொண்டு, தீய வழிகளில் ஈடுபடாமல் அறநெறியில் ஈடுபட வேண்டும் என்பதே அற இலக்கியங்கள் அறிவுறுத்தும் கருத்தாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com