

புலிகளின் மகளிர் பிரிவு, நேரடிப் போரில் கலந்துகொண்டது "கொக்காவில்' சிங்கள ராணுவ முகாம் தகர்ப்பில்தான். அதுநாள்வரை மகளிர் படைப்பிரிவு, தற்காப்பு யுத்தத்திலேயே பங்கெடுத்திருந்தார்கள். இந்த "கொக்காவில்' சிங்கள முகாம் தகர்ப்பில் புலிகளுடன் மகளிரும் சம அளவில் கலந்துகொண்டனர்.
1990-ஆம் ஆண்டு ஜூலை 10, 11-ஆம் தேதிகளில் நடைபெற்ற தாக்குதலில் ராணுவ முகாம் முழுமையாகத் தகர்க்கப்பட்டது. முகாம் பொறுப்பாளர் காப்டன் அலந்தெனியா உள்ளிட்ட எழுபதுக்கும் மேற்பட்டோர் உயிர் துறந்தனர்.
புலிகள் தரப்பிலும் 18 வீரர்கள் இறந்தனர். இதில் மகளிர் படைப் பிரிவைச் சேர்ந்த 6 பெண் புலிகளும் அடங்குவர். இந்தப் போரில் காப்டன் உஷா, இரண்டாம் லெப்டினன்ட் பிரியங்கா, சாலினி, மாலா, குமாரி, அஜந்தா ஆகியோர் இறந்தனர். பெண்புலிகளின் இந்தத் தாக்குதல் சிங்கள ராணுவத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
யாழ்கோட்டை விழுந்தபிறகு சிங்கள ராணுவம் வன்னிப் பகுதியில் மாங்குளத்தில் இருந்த ராணுவ முகாமை பலப்படுத்தியது. இந்த முகாமைத் தாக்குவது புலிகளின் திட்டமாயிற்று. 1990-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் தாக்குதல் நடைபெற்றது. பெருமழையிலும், எதிரிகள் வானிலிருந்து குண்டு மழை பொழிந்த போதிலும் புலிகள் கடுமையாகப் போரிட்டனர். முகாமில் இருந்த அனைவருமே கொல்லப்பட்டனர். பெருமளவில் ஆயுதங்கள் மற்றும் கவச வண்டிகள், பீரங்கிகள், வெடிமருந்துகள், ரவைகள் கைப்பற்றப்பட்டன.
மாங்குளம் வீழ்ச்சியினால் எதிர்க்கட்சிகளின் கண்டனத்தையும் பிரேமதாசா அரசு சந்திக்க வேண்டியிருந்தது. இந்தப் போரில் விடுதலைப் புலிகளின் "பசீலன்' என்கிற 500 மீட்டர் தூரத்தில் இருந்து வீசக்கூடிய ராக்கெட் குண்டுகள், எதிரிகளை நிலைகுலைய வைத்தது.
புலிகள் 1991-ஆம் ஆண்டு ஜனவரியில் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். இந்தப் போர்நிறுத்தத்தை சிங்கள அரசு ஏற்கவில்லை. புலிகள் தங்களது ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்தால்தான் போர்நிறுத்தம் என்று சொன்ன பிரேமதாசா, போர்நிறுத்தக் கோரிக்கையை நிராகரித்தார்.
அதுமட்டுமன்றி, இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே, "புலிகளின் பலவீனப் போக்கை வெளிப்படுத்துகிறது' என்றார்.
"வல்வெட்டித்துறை முகாமில் பிரபாகரன் தங்கியிருக்கிறார்' என்ற தகவலையடுத்து, வடமராட்சிப் பகுதி, விமானத் தாக்குதலுக்கு ஆளானது. அமைதிப் படையின் தாக்குதலுக்குத் தப்பிய கட்டடங்கள், சிங்களப் படையின் விமானத் தாக்குதலால் தரைமட்டமாயின. சிங்களப் படைகள் இந்தத் தாக்குதலில் பீப்பாய் குண்டு என்கிற ஆயுதத்தை மேலிருந்து வீசினார்கள். பீப்பாய் குண்டில் வெடிமருந்துகள் அதிக அளவில் நிரப்பப்பட்டிருக்கும். இதனால் அது கீழே விழுந்து சிதறியபோது பெருமளவில் நாசத்தை ஏற்படுத்தியது.
"ஒரு லட்சம் வீரர்கள்' என்ற கோஷத்தை முன்வைத்த இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே, ராணுவத்துக்கு அப்போது இருந்த 60 ஆயிரம் வீரர்கள் என்ற எண்ணிக்கையை ஒரு லட்சம் வீரர்களாக உயர்த்தப் போவதாக அறிவித்தார்.
ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த அதிரடி அரசியல்வாதிகள் காமினி திஸ்ஸநாயகா, அதுலத் முதலி போன்றோரை பிரேமதாசா ஒதுக்கி வைத்துதான் ரஞ்சன் விஜயரத்னேவுக்கு பதவி வழங்கி இருந்தார். தொடர்ந்த சில வாரங்களில், பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே குறிவைக்கப்பட்டார். இருவேறு தாக்குதல் முயற்சிகளில் தப்பித்த அவர், மூன்றாவது முயற்சியாக, வெடிபொருள் நிரப்பிய மினிபஸ் மோதலில் சின்னாபின்னமாக்கப்பட்டார் (2-3-1991).
இந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் பிரதமர் சந்திரசேகர் ஆட்சியில், நிர்வாகரீதியாக சொல்லப்பட்ட தகவலை, புலிகளுக்கு தெரிவித்ததாக திமுக அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது.
தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் பர்னாலாவிடம் மத்திய அரசு அறிக்கை கேட்ட சூழ்நிலையில், அவர் மறுக்கவே, அவரை தில்லிக்கு அழைத்தனர். தில்லியில் உளவுத்துறை இயக்குநர் எம்.கே. நாராயணன், "ரா' உயர் அதிகாரி ஜி.எஸ். வாஜ்பாய் ஆகியோர் திரட்டித் தந்த தகவல்கள் கொண்ட கோப்பினை, அவரது பார்வைக்கு வைத்தனர். அந்த உளவுத் தகவல்கள், விடுதலைப் புலிகளுடனான தகவல் பரிமாற்றங்களை இடைமறித்துக் கேட்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
நிர்வாகரீதியில் அரசுக்குத் தரப்பட்ட தகவல்கள் புலிகளிடம் தெரிவிக்கப்பட்டதாக அத்தகவல்கள் கூறின. இதன் அடிப்படையில் 30-1-1991-இல் திமுக அரசின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இலங்கையைத் தாயகமாகக் கொண்டதும், தமிழீழம் என்னும் தனி நாடுக்கான ஆயுதமேந்திய போராட்டம் நடத்தி வருவதுமான தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் தமக்கென்று சில பகுதிகளில் செல்வாக்கை ஏற்படுத்திக்கொண்டு சுதந்திரமாகச் செயல்படக்கூடிய அளவுக்கு வளரவிட்டதாகவும், அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும் திமுக அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் காரணத்துக்காகவே மாநில அரசு கலைக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது (31-1-1991-தினமணி).
ஆளுநர் அறிக்கையைப் பெறாமல் திமுக அரசு கலைக்கப்பட்டது குறித்து எழுந்த விமர்சனத்துக்கு அப்போதைய வர்த்தகம் மற்றம் சட்டத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சுப்ரமணியன் சுவாமி "ஆளுநரிடம் அறிக்கை கேட்கலாம்; பெறவேண்டும் என்பது அவசியமில்லை' என்று தெரிவித்தார் (நாளிதழ்கள் செய்திகள்).
இதனையொட்டி, பிரதமர் சந்திரசேகர் பலத்த கண்டனத்துக்கு ஆளானார்.
ஆட்சிக்கலைப்பையொட்டி கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.கருணாநிதி, "ஜனநாயகத்துக்கு விடப்பட்ட அறைகூவல்; தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்' என்று குறிப்பிட்ட அவர், மேலும் கூறுகையில், "ஜனநாயக நெறிமுறைகளைக் காப்பாற்றத் தவறியுள்ள சந்திரசேகர், எனது தலைமையிலிருந்த ஆட்சியைக் கலைத்ததன் மூலம் தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்' என்றும் தெரிவித்தார். பிப்ரவரி 6-ஆம் தேதி முழு அடைப்பு நடத்துவதாக, தேசிய முன்னணி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுத்ததாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. 20, 23, 26-5-1991 ஆகிய தேதிகள் தேர்தல் நாள்களாக அறிவிக்கப்பட்டன.
இதில் தமிழகம், பாண்டிச்சேரி, மேற்கு வங்காளம், ஒரிசா, குஜராத் மாநிலங்களில் முழு அளவிலும், உத்தர பிரதேசத்தில் இறுதிக்கட்டமாக 43 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மையத்தில் ஆட்சியை இழந்திருந்த ராஜீவ் காந்தி, இம்முறை ஆட்சியைப் பிடிப்பதில் தீவிரம் காட்டி, பிரசாரத்தை முடுக்கிவிட்டிருந்தார். அந்தவகையில் அவர் தமிழகத்திலும் பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.
ராஜீவ் காந்தி தமிழகத்துக்கு வருவது என்பது புதிதல்ல; 1984 தொடங்கி 1991 வரை பிரதமர் என்கிற முறையிலும் பிரதமர் அல்லாத நிலையிலுமாக 64 தடவைகள் அவர் தமிழகம் வந்திருக்கிறார்; பத்திரமாகத் திரும்பிச் சென்றுமிருக்கிறார்.
அதேபோன்றுதான் தற்போதும் (1991) பிரசாரம் மேற்கொள்ள மே 21-ஆம் தேதி, இரவு 8.30 மணியளவில் சென்னை வந்திறங்கினார். விமானநிலையத்திலிருந்து குண்டு துளைக்காத காரில் ஏறி, நேரடியாகப் பிரசாரத்துக்குக் கிளம்பினார். வழியில் காரை நிறுத்தி, போரூர், பூவிருந்தவல்லி சந்திப்புகளில் வாக்குக் கேட்டுவிட்டு, ஸ்ரீபெரும்பூதூர் சென்றார். அங்குதான் விரிவான பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சாலையோரமிருந்த அன்னை இந்திரா காந்தி சிலைக்கு மாலையணிவித்துவிட்டு, அங்கிருந்து நடந்தே பொதுக்கூட்ட மேடைக்குச் சென்றார். வழியில் தொண்டர்களும், பொதுமக்களும் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர், மேடையை நெருங்கியபோது, அங்கே நின்றுகொண்டிருந்த காங்கிரஸ் பிரமுகர் லதா கண்ணனின் மகள் கோகிலா, ராஜீவ் காந்தியைப் புகழ்ந்து, தான் எழுதிய கவிதையை வாசித்துக் காட்டினார். அதைக்கேட்டு மகிழ்ந்த ராஜீவ், கோகிலாவின் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுத் திரும்பினார்.
கையில் மாலையுடன் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை போலீசார் தடுப்பதைப் பார்த்து, அவரை அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். அந்தப் பெண் ராஜீவ் காந்தியை நெருங்கி, பாதம் நோக்கிக் குனிந்தபோது, பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்து அங்கு கூடியிருந்த 18 பேர் உடல் சிதறி பலியாயினர்.
அந்த 18 பேரில் ராஜீவும் ஒருவராக இருக்கக்கூடும் என்று கனவிலும் கருதாத நிலையில், அவரைத் தேடினார்கள். அனைவரிடமும் பதைபதைப்பும், ஆற்றாமையும் பொங்கிக்கொண்டிருந்த நிலையில், ராஜீவ் காந்தி அணிந்திருந்த "கான்வாஸ் ஷூ'வுடன் கிடந்த கால்களும் மற்றும் சில உடல் பாகங்களும் அவர் இறந்துவிட்டார் என்பதைப் புரியவைத்தது. கூடியிருந்தவர்களும் செய்தி அறிந்தவர்களும் பதறினர்.
இந்தச் சம்பவத்துக்குக் காரணமான பெண்ணின் தலை சில அடி தூரத்தில் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டெடுத்தார்கள். அந்தப் பெண் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. (ஆதாரம்: India after Gandhi by Ramachandra Guha. Page-637)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.