நீலகிரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை வீட்டோடு புதைத்தது மழை!

உதகை, நவ.10:  நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழைக்கு இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 மாத குழந்தை உட்பட 8 பேர் வீட்டோடு மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.  
Updated on
2 min read

உதகை, நவ.10:  நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழைக்கு இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 மாத குழந்தை உட்பட 8 பேர் வீட்டோடு மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

  நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. ஏராளமானேர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர்.

  அச்சனக்கல் பகுதியில் லூயிஸ் (55) என்பவர் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். இவர் உதகை அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வேலிவியூ மலைப் பகுதியிலிருந்து வந்த வெள்ள நீர் வழியிலிருந்த பாறைகளையும் உருட்டி பெரும் மண் சரிவை ஏற்படுத்தியதோடு லூயிசின் வீட்டையும் அடித்துச் சென்றுவிட்டது.

  இதில் லூயிசுடன் அவரது மனைவி ஷெர்லி (50), மகள்கள் சுமீதா (28), லலிதா (25), மருமகன் குமார் (35), சுமீதாவின் மகள் மற்றும் லலிதாவின் மகள் ஆகியோருடன் அந்த வீட்டிலிருந்த 6 மாத கைக்குழந்தையும் அடித்துச் செல்லப்பட்டனர். பெரும் மண் குவியலில் சிக்கி இவர்கள் 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  வேலிவியூ பகுதியில் கிராண்டப் சாலையில் வசித்து வந்த ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டதில் மண்ணுக்குள் புதைந்த அந்த குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  மேல் கோடப்பமந்து பகுதியில் அம்பேத்கர் நகரப் பகுதியில் ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டதோடு அருகிலிருந்த பெரிய மரமும் விழுந்ததில் அந்த வீட்டிலிருந்த ராஜேஸ்வரி (28) அவரது மகன் சத்யா (3) மற்றும் 6 மாத கைக்குழந்தையும் உயிரிழந்தனர்.

  இவர்களைத்தவிர இடுஹட்டி பகுதியை சேர்ந்த துரை (45), நொண்டிமேடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணம்மாள் (50), அவரது மகன் பிரவீண்குமார் (13) ஆகியோரும், குன்னூரில் குரூஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (60), பாரத்நகர் பகுதியை சேர்ந்த அந்தோணியம்மாள் (75), கோத்தகிரியில் நடுஹட்டி பகுதியை சேர்ந்த கமலம் (50), ஒரசோலை பகுதியைச் சேர்ந்த சிவகாமி (35) ஆகியோரும் மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

  அதேபோல, குன்னூரில் நஞ்சப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த நாகராணி (22), அவரது மகள் தானேஸ்வரி (4) மற்றும் மகன் மகேந்திரன் (2) ஆகியோர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி (50) என்பவரும் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தார்.

  கிளிஞ்சாடா பகுதியை சேர்ந்த பார்த்திபன் (33) தூதூர்மட்டம் பகுதியை சேர்ந்த ராணி (35) ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

  குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மண் சரிவு ஏற்பட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரி அடித்து செல்லப்பட்டது. அந்த லாரியிலிருந்த ஓட்டுநர் ஜோய் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com