

செங்கல்பட்டு, நவ.21: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவி வரும் அவல நிலை காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், குறிப்பாக ஏழை மக்கள் முறையான சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது.
இம்மருத்துவமனை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவீன மருத்துவக் கருவிகள், அறுவை சிகிச்சை அரங்குகளுடன் உள்ளது. ஆனால் முறையான பராமரிப்பு, கட்டுப்பாடு, வழிநடத்துதல் இல்லாமல் பல வகையிலும் மருத்துவமனைப் பணிகள் பாதிக்கப்பட்டு அவல நிலையில் சிக்கித் தவித்து வருகிறது. இம்மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து வருகின்றனர்.மருத்து வமனையில் சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளில் நவீன கருவிகள் பழுதுபட்டு செயல்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சிறப்பு சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களும், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களும் தீவிர சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு போதிய மருந்து மாத்திரைகள் தரப்படுவதில்லை. கேட்டாலும் "ஸ்டாக் இல்லை' என்று கூறி விடுகின்றனர். மருத்துவமனை ஊழியர்களும் நோயாளிகளுக்கு பொறுப்பான பதிலை அளிப்பதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனையில் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களை மரியாதை யின்றி நடத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "பொறுப்பில் இருக்கும் தங்களால் மருத்துவமனை குறைபாடுகள் குறித்து ஏதும் பதில் சொல்ல முடியாது' எனத் தட்டி கழித்து விடுகின்றனர்.
எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்டவைகளுக்காக ஏழையாக இருந்தாலும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் அரசு மருத்துவமனைக்கு வருவதை தவிர்த்து இயலாத நேரங்களில் கடன்பாட்டாவது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் எந்த வசதியும் இல்லாதவர்கள் நீண்ட வரிசையில் காத்து கிடந்து கிடைக்கும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனை வளாகத்துக்குள் அச்சம் ஏதும் இல்லாமல் ஆடு, மாடுகள், கழுதைகள், நாய்கள் ஏராளமாக சுற்றித் திரிவதை பார்க்கும் போது நாம் இருப்பது மனிதர்களுக்கான மருத்துவமனையா அல்லது கால்நடைகளுக்கான மருத்துவமனையா என்ற சந்தேகம் தோன்றுகிறது. மருத்துவர்கள் பயன்படுத்தும் கையுறைகள், காயங்களுக்கு சுற்றப்பட்ட துணிகள், கழிவுகள் நடைபாதையில் போடப்பட்டு நடப்பவர்களையே அச்சுறுத்தும் வகையில் காட்சி அளிக்கிறது. முக்கிய மருத்துவமனையாக விளங்கும் இந்த மருத்துவமனையின் விடிவை நோக்கி மக்கள் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.