

காஞ்சிபுரம், அக். 14: காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா சிகிச்சை பெற்ற பழமையும், பெருமையும் வாய்ந்த மருத்துவமனை, தற்போது நலிவுற்ற நிலையில் உள்ளது.
காஞ்சிபுரம் நகரத்தில் கச்சபேஸ்வரர் கோயில் அருகில் கடந்த 93 ஆண்டுகளாக ஸ்ரீ நாராயண குரு இலவச ஆயுர்வேத மருத்துவமனை இயங்கி வருகிறது. அறிஞர் அண்ணா முதல்வராவதற்கு முன்பு, தனது நாள்பட்ட தோள்வலிக்கு இங்கு 8 நாள்கள் தங்கி ராஜயோக சிகிச்சை பெற்றார். பின் அண்ணாவின் பெருமுயற்சியால் இம் மருத்துமனையின் எதிரே உள்ள அரை ஏக்கர் நிலம் மருத்துவமனை விரிவாக்கத்திற்காக காஞ்சிபுரம் நகரசபையால் 1962-ல் வழங்கப்பட்டது.
இத்தகைய சிறப்பு பெற்ற மருத்துவமனை தற்போது போதிய நிதியாதாரம் இன்றி நலிவுற்ற நிலையில் உள்ளது. இந்த மருத்துவமனை தற்போது புற நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து வருகிறது. தினந்தோறும் 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள் நோயாளிகளாக அனுமதிப்பதற்கு போதிய கட்டடம், படுக்கை வசதிகள் இல்லை. மேலும் சிகிச்சைக்கு தேவையான மருந்து மூலப்பொருள்கள் தமிழகத்தில் கிடைக்காத நிலையில், தற்போது கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்துதான் பெறப்படுகிறது.
""வெளி மாநிலங்களில் இருந்து மருந்து வாங்கப்படுவதால் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.
சில கொடை உள்ளங்களாலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள திருமண மண்டபம் மூலம் கிடைக்கும் வருமானத்தாலும் மட்டும் தற்போது மருத்துவமனை இயங்கி வருகிறது'' என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். அரசு ஆணையின்படி மருத்துவம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதால், காலம்காலமாக மருத்துவம் பார்த்து வந்த சுவாமிகள் தற்போது மருத்துவம் பார்க்க முடியாமல், படித்தவர்களை பணியமர்த்தி ஊதியம் கொடுத்து மருத்துவமனையை இயக்கி வருகிறார்.
கடந்த காலங்களில் இயற்கையாக மருந்து தயாரித்து வந்த இவர்கள், மூடிய நிலையில் உள்ள அறையில் மட்டுமே மருந்துகளை தயாரிக்க வேண்டும் என்ற அரசு ஆணை இருப்பதால், அத்தகைய அறைகளை கூட தயார் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
மேலும் இவர்கள் தயாரிக்கும் மருந்துப் பொருள்களை இந்திய மருத்துவக் கழகம் ஒவ்வொரு முறையும் ஆய்வுசெய்து சான்று அளித்த பின்னரே நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற ஆணை உள்ளது.
இவையனைத்தையும் நிறைவேற்ற போதிய நிதியாதாரம் இன்றி இம்மருத்துமனை நிர்வாகம் தத்தளித்து வருகிறது. அண்ணா நூற்றாண்டு விழாவை பல விதங்களில் கொண்டாடி மகிழும் தமிழக அரசு, அண்ணா சிகிச்சை பெற்ற, நூற்றாண்டை நெருங்கும் இந்த ஆயுர்வேத மருத்துவமனை மீதும் தன் கடைக்கண் பார்வையை செலுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
மருத்துவமனை வரலாறு
முதல் உலகப்போர் மூண்ட நேரத்தில் காஞ்சிபுரம் பகுதியில் மக்கள் அதிக நோய்வாய்ப்பட்டு இருப்பதாக அறிந்த கேரளத்தை சேர்ந்த சுவாமி நாராயண குரு, தனது சீடர் சுவாமி கோவிந்தானந்தாவை சிகிச்சை அளிப்பதற்காக காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைத்தார்.
இவர் தன்னால் எவ்வளவு சுமக்க முடியுமோ அவ்வளவு மருந்துகளை சுமந்துகொண்டு காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள சுமார் 80 கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளித்தார். இவரும் காரைக்குடி வள்ளல் சோமசுந்தர செட்டியாரும் சந்திக்க நேர்ந்தது. செட்டியாருக்கு குழந்தைகள் இல்லாததை அறிந்த சுவாமி, சிகிச்சை அளித்து குழந்தை பேறு அருளச் செய்தார். இதையடுத்து செட்டியாரின் உதவியால் 1916-ல் இந்த மருத்துமனை தொடங்கப்பட்டது. சுவாமி கோவிந்தானந்தாவின் சேவையைப் பாராட்டி 1917-ல் காஞ்சிபுரம் நகரசபை குதிரை வண்டி ஒன்றை பரிசளித்தது.
இவர்களின் மறைவுக்குப் பின் தற்போது மருத்துமனையை சுவாமி சத்ருபானந்தர் கவனித்து வருகிறார். இன்றும் சுவாமி நாராயண குரு நினைவாக காஞ்சிபுரம் ஒன்றியம் சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தில் மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.