கடல் அரிப்பு: அச்சத்தில் மீனவ கிராமம்

புதுச்சேரி, செப். 29:   மனு போட்டும் பயனில்லை. அமைச்சர் வந்து பார்த்தும் நடக்கவில்லை. கடல் அரிப்பைத் தடுக்க நேரடி நடவடிக்கையில் மக்கள் இறங்கி தாற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தினர்.   புதுச்சேரி அருகே 5 க
கடல் அரிப்பு: அச்சத்தில் மீனவ கிராமம்

புதுச்சேரி, செப். 29:   மனு போட்டும் பயனில்லை. அமைச்சர் வந்து பார்த்தும் நடக்கவில்லை. கடல் அரிப்பைத் தடுக்க நேரடி நடவடிக்கையில் மக்கள் இறங்கி தாற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தினர்.

  புதுச்சேரி அருகே 5 கி.மீ. தொலைவில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட மீனவ கிராமமான சின்னமுதலியார் சாவடி குப்பத்தில் கடல் அரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாள்களுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும், கடல் நீர் வேகமாகக் குடியிருப்புப் பகுதியை நோக்கி முன்னேறி வருவதை உணர முடிகிறது. இதனால், இப் பகுதி மக்கள் செய்வது அறியாமல் தவிர்த்து வருகின்றனர்.

  ஏற்கெனவே கடல் அரிப்பு காரணமாக இப் பகுதியில் 125 வீடுகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதாகவும் இது தொடர் கதையாக மாறிவிட்டது என்றும் இந்த ஊரின் தலைவர் வி.குப்புசாமி கூறுகிறார்.

  "நாங்கள் என்ன செய்வது. எங்களால் முடிந்த காரியங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டோம். ஆட்சியருக்கு மனு கொடுத்தோம். தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இப் பகுதியை நேரில் வந்து பார்த்துச் சென்றார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  உண்ணாவிரதம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்திவிட்டோம். ஆனால், எங்களுக்கு இன்னும் விமோசனம் கிடைத்தப்பாடில்லை' என்று இந்த ஊர் மக்கள் வருத்தப்படுகின்றனர்.

  "புதுச்சேரி நகரப் பகுதியில் கடற்கரையே இல்லை. ஆனால், அப் பகுதியில் கருங்கற்கள் கொட்டி செயற்கை கடற்கரையை உருவாக்குகின்றனர். மேலும் எங்கள் ஊரை ஒட்டிய ஒரு சிலப் பகுதிகளிலும் கருங்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. அப் பகுதிகளில் எல்லாம் கருங்கற்கள் கொட்டப்பட்டு அரிப்புத் தடுக்கப்பட்டதால் அப் பாதிப்பு எங்கள் ஊர்ப் பகுதிக்குத் திரும்பியுள்ளதாக உணருகிறோம். சுனாமிக்குப் பிறகு கடல் அரிப்பும், கடல் சீற்றமும் அதிகமாக இருந்து வருகிறது' என்கின்றனர் இப் பகுதி மக்கள்.

  இந்நிலையில், கடல் அரிப்பு செவ்வாய்க்கிழமை தீவிரமாக இருந்தது. தலா ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 2 படகுகளை கடல் அலை இழுத்துச் சென்று உடைந்தது. மேலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம் அடைந்தன.

  இதனால், இப் பகுதியில் உள்ள குடியிருப்புகளைப் பாதுகாக்கும் வகையில் ஊர் மக்களே திரண்டு தடுப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடலோரத்தில் சவுக்குக் கட்டைகளை நட்டு, சிமென்ட் சிலாப்புகளைத் தடுப்புச் சுவர்களாக அமைத்து அதற்குப் பின்பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் இம் மக்கள் ஒருசேர திரண்டு செய்தனர்.

 ""ஊர் மக்களின் பணத்தில் இருந்து ரூ.50 ஆயிரம்வரை இதற்காக செலவு செய்துள்ளோம்'' என்கிறார் குப்புசாமி.

  ""எங்கள் பகுதியில் உடனடியாக கடல் அரிப்பைத் தடுக்க கருங்கற்கள் கொட்ட வேண்டும். இதுதான் எங்களின் அவசரத் தேவை. அதற்குப் பிறகு இப் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.

  உடனடியாக இப் பகுதியில் கருங்கற்கள் கொட்டவில்லையென்றால், எங்களின் குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைத்து, குடும்பத்தினருடன் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம்'' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com