ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம்

பெரியார், அண்ணா, முதல்வர் கருணாநிதி என்று வாழையடி வாழையென வந்த மரபினில் நானும் ஒருவன்.
ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம்

சென்னை, ஆக. 1:   அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், அண்ணா நூற்றாண்டு சிறப்பு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், "சந்திரயான்-1' செயற்கைக்கோள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, திரைப்பட இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு கெüரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டங்களை தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா வழங்கினார்.

  உயர் கல்வித் துறை அமைச்சர்

க. பொன்முடி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முன்னாள் துணைவேந்தர்

மு. அனந்தகிருஷ்ணன், துணைவேந்தர்

பி. மன்னர்ஜவஹர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  டாக்டர் பட்டம் என்னை மேலும் அடக்கமுள்ளவனாக ஆக்கட்டும் என்று தனது ஏற்புரையில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

  கெüரவ முனைவர் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட பின், ஸ்டாலின் பேசியதாவது:

  "உலக அளவில் உயர் தனிச் சிறப்பிடம் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் எனக்கு வழங்கிய இப் பட்டம் மிகுந்த மிகழ்ச்சியை அளிக்கிறது. உலகின் பல்வேறு தொழில்நுட்பச் சவால்களைச் சமாளித்து வெற்றி பெறுவதற்கான சரியான யுக்திகளையும், சான்றான்மை மிக்க வல்லுநர்களையும் இப் பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது.

  பெரியார், அண்ணா, முதல்வர் கருணாநிதி என்று வாழையடி வாழையென வந்த மரபினில் நானும் ஒருவன். இந்த முறையில் நீங்கள் வழங்கியுள்ள "டாக்டர்' பட்டம், மேலும், மேலும் என்னை அடக்கமுள்ளவனாக ஆக்கட்டும் என உறுதி மேற்கொள்கிறேன். இப் பெருமையினை எனது பெற்றோருக்கும், இளைய சமுதாயத்தினருக்கும் காணிக்கையாக்குகிறேன்.

  கல்வியறிவும், அதன் கட்டமைப்பும் காலத்துக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கிறது. பாட நூல்களைப் படித்து அறிந்து கொள்வதுதான் படிப்பு என்ற நிலை மாறி, எதிர்காலம் விடுக்க எண்ணியிருக்கும் வினாக்களைக் கண்டுணர்ந்து, விடை காணக் கூடிய விவேகத்தை மாணவர்களிடம் உருவாக்குதல் என்ற நிலை கல்வி முறையில் வந்துள்ளது.

  மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பதையும் தாண்டி எதிர்காலப் புதிர்களின் தன்மையையும் அறிந்து, அவற்றை விடுவிப்பதில் வெற்றி அடைவதுதான் இப்போதைய கல்வியின் நோக்கமாக உள்ளது. இதற்கு தொழில்நுட்பப் படிப்பும் விதிவிலக்கு அல்ல.

  தொழில்நுட்ப வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்கு தொழில் அறிவு, தொழில் திறன்களைக் கற்பித்தல் என்பது பரவி வருகிறது.

  கற்பித்தல் என்பது ஆசிரியர்களை மையமாகக் கொண்டு நடைபெற்ற முறை மாறி இப்போது மாணவர்களை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.

  தரமான கல்வி பெற...கற்பிக்கும் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் கற்பித்தலுக்கான உத்திகளை ஆசிரியர்கள் உருமாற்றம் செய்ய வேண்டும். தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் இத்தகைய மாற்றங்கள் சீரிய வழியில் செயல்பட்டால்தான் கல்வியின் தன்மையும், தரமும் உயரும்,

  காலத்தின் தேவைகளை ஆசிரியர்கள் உள்வாங்கிக் கொண்டு, அதற்கேற்ப கற்பிக்கும் முறைகளில் உரிய மாற்றங்களைப் புகுத்த வேண்டும். அப்போதுதான் புதுமை படைக்கும் கற்பனைச் செறிவும், திறனும் பெற்று மாணவர்கள் உயர முடியும். உயர் கல்வி மூலம் பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சமூக மாற்றங்களை அடைய முடியும்.

  நவீன ஆராய்ச்சி முயற்சிகள் தேவை: கல்வி முறையில் மாற்றம், ஆராய்ச்சி வாய்ப்புகள், புதுமை முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

  அறிவு வளர்ச்சியும், உன்னதமும் ஆராய்ச்சிக்கு நேரடித் தொடர்பு உடையவை. இந்த வகையில், ஆராய்ச்சியும், கற்பித்தலும் பல்கலைக்கழகத்தின் இரு கண்களாகும். இந்தியாவில் மட்டும் ஆராய்ச்சி என்பது, ஒரு சில ஆராய்ச்சி நிறுவனங்களில் மட்டுமே நடைபெறும் அரிய நிகழ்வுகளாக உள்ளன. உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியா முதன்மை பெற வேண்டுமெனில், ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழகங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  "அனுசாட்' செயற்கைக்கோளை உருவாக்கி, அதை விண்ணில் செலுத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகத்தின் அரிய சாதனை. இதே போல பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் இப் பல்கலைக்கழகம் ஈடுபட்டு சாதனைகளைக் குவிக்க வேண்டும்' என்றார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com