
பண்ருட்டி,நவ.3: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள பிறையாத்தாள் என்கிற பிடாரி அம்மன் கோயிலில் அபூர்வமான யோகீஸ்வரர் கற்சிலையும், அக்காலப் போர் வீரர்கள் பயன்படுத்திய வாள்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
பண்ருட்டி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன், புதுப்பேட்டை வ.கோவிந்தன் ஆகியோர் கெடில நதிக்கரையில் கள ஆய்வு செய்த போது இவற்றை கண்டெடுத்தனர். இதுகுறித்து தமிழரசன் கூறியது:
700 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயில் சப்த மாதர்களின் கோயிலாக சிறந்து விளங்கியிருக்கிறது. அந்த நூற்றாண்டில் கருவறையில் வைத்து வணங்கப்பட்ட ஏழு கன்னியர்களின் சிலைகளும் உடைந்து தற்போது கோயிலுக்கு வெளியே உள்ளன.
இதில் ஒரு சிலையை ஆய்வு செய்த போது நான்கு கரங்களுடன் காணப்பட்டது. 58 செ.மீ. உயரமும், 35 செ.மீ. அகலமும் கொண்ட இச் சிலையின் பின்புற இரண்டு கரங்களில் வலக்கை உடைந்துள்ளது. இக்கரத்தில் மான் இருந்துள்ளது. இடக்கை மழுவைப் பிடித்துள்ளது, முன்புற வலக்கை அபயம் காட்டியும், இடக்கை பீடத்தின் மீது தூக்கி வைக்கப்பட்டுள்ள இடது கால் மூட்டின் மீது வைத்துத் தொங்க விட்ட நிலையிலும், வலக்கால் பீடத்தின் மீது படிந்த யோக நிலையில் காணப்படுகிறது. விரிந்த சடை முடியுடன் வலது காதில் மகர குண்டலமும், இடது காதில் பத்ர குண்டலமும், கழுத்தில் மூன்று வகையான ஆபரணங்களுடன் காணப்படும் இச்சிலை கி.பி.13 நூற்றாண்டின் பிற்பகுதியில் படைக்கப்பட்ட யோகீஸ்வரர் எனப்படும் சிவப்பெருமான் சிலை என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதே நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் மூன்று கத்திகள் கருவறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 80 செ.மீ. உயரமும், 9 செ.மீ.ó அகலமும் கொண்ட ஒரு வாள் அம்மனுக்கு பலியிடும் கொடுவாள் ஆகும். 75 செ.மி. உயரமும், 4 செ.மீ. அகலமும் கொண்ட மற்ற இரண்டும் வாள்கள் போர் கத்திகள். போரில் வெற்றி பெற்ற வீரர்கள் கொற்றவை (காளி) மற்றும் பிடாரி போன்ற தெய்வங்களுக்கு பலி கொடுத்து, தங்கள் உடை வாள்களில் ஒன்றை அம்மனின் முன் வைத்து வழிபடுவது அன்றைய வழக்கமாக இருந்துள்ளது. அது போன்று வைத்து வழிபடப்பட்ட இந்த வாள்கள் மிகக் கூர்மையாகவும், அழகிய வேலைப்பாடுகளுடனும் அமைந்துள்ளன என பண்ருட்டி தமிழரசன் கூறினார்.