சென்னை, ஏப். 7: திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து பார்சலில் கோவைக்கு அனுப்பிய பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான 267 இயற்பியல் விடைத்தாள்கள் மாயமானது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடைத்தாள்கள் மாயமாகி ஒரு மாதமாகி விட்ட நிலையில், இதுவரை விடைத்தாள்கள் கிடைத்தபாடில்லை. அதேசமயத்தில், விடைத்தாள்கள் மீண்டும் கிடைக்காதபட்சத்தில் 267 மாணவருக்கு மட்டும் மறு தேர்வு நடத்தலாமா என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
விடைத்தாள்கள் மாயமானது தொடர்பான அனைத்து விவரங்களும், அரசுக்கு அறிக்கையாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், மார்ச் 8}ம் தேதி பிளஸ் 2 இயற்பியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கான தேர்வு நடந்தது. தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை சீலிட்டு, மாற்று எண் பதிவு செய்ய கோவைக்கு அனுப்புவதற்காகக் கல்வித்துறை அதிகாரிகள், தபாலில் அனுப்பினர். இரண்டு பெரிய கவர்களில் சீலிட்டு அனுப்பி வைக்கப்பட்ட பார்சலில் ஒன்று தான் கோவைக்குச் சென்று சேர்ந்தது. மற்றொரு பார்சல் கிடைக்கவில்லை என்று அங்குள்ள தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த பார்சலில் இயற்பியல் பாடத்துக்கான 267 விடைத்தாள்கள் இருந்தன. இதையடுத்து முசிறி தபால் துறை அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. ஆனால், இன்றுவரை தொலைந்து போன விடைத்தாள்கள் கிடைக்கவில்லை.
இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:
முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் இருந்து, இரண்டு பார்சல்களில் விடைத்தாள்கள் தபால்துறை அலுவலகத்தின் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஒரு பார்சல் காணவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுபற்றி சென்னையில் உள்ள தபால்துறை தலைமை அலுவலக அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மைய அதிகாரிகள், தபாலில் பார்சல் அனுப்பியதற்கான ரசீதுகளை வைத்துள்ளனர். ஆனால், தபால் துறையினர் பார்சலை கொண்டு சேர்ப்பதில் தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சாதாரண பார்சல் அல்லாமல், "இன்சூர்டு பார்சல் சேவை' மூலம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.
1988}ல் சம்பவம்: 1988}ம் ஆண்டு இதேபோன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள்கள் தொலைந்ததாகக் கூறப்படுகிறது. அதில் 400}க்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் இருந்ததாகவும், அப்போது மறு தேர்வு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணி ஏப்ரல் 21}ம் தேதியுடன் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மறு தேர்வு? அதற்குள் மாயமான விடைத்தாள்கள் கிடைக்கும்பட்சத்தில், விடைத்தாள்களை உடனே திருத்த மறு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இல்லையெனில் மறு தேர்வு நடத்தலாமா என தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. இதுபற்றி அரசு தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.