ரயில்களில் திருட்டைத் தடுக்க பறக்கும் படைப் பிரிவு

திருச்சி, ஏப். 20: ரயில்களில் நடைபெறும் திருட்டுகள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க, ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளர் தலைமையில் 12 பேர் கொண்ட சிறப்பு பறக்கும் படைப் பிரிவு விரைவில் அறிமுகப
Updated on
1 min read

திருச்சி, ஏப். 20: ரயில்களில் நடைபெறும் திருட்டுகள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க, ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளர் தலைமையில் 12 பேர் கொண்ட சிறப்பு பறக்கும் படைப் பிரிவு விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்தியா முழுவதும் ரயில்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தெற்கு ரயில்வேக்குள்பட்ட பகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளாகவே திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

தமிழகத்தைப் பொருத்தவரை, மாநிலத்தின் மையப்பகுதியாக திகழும் திருச்சி ரயில்வே  கோட்டத்தில்தான் அதிக குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்போது கோடை விடுமுறை என்பதால் ரயில்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படும். இதனால், குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும் பெரும்பாலும் நள்ளிரவு நேரத்தில்தான் திருச்சியைக் கடக்கின்றன.

இந்த நேரத்தில்தான் பயணிகள் அசந்து தூங்குவார்கள் என்பதால், கொள்ளையர்கள் எளிதாக தங்களது காரியத்தை நிறைவேற்றிச் சென்றுவிடுகின்றனர்.  அரியலூர்- திருச்சி இடையே அதிக "கிராசிங்' இருப்பதால் ரயில்கள் குறைவான வேகத்திலேயே செல்லும். இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் கொள்ளையர்கள் பயணிகளின் உடைமைகளை திருடிவிட்டு எளிதாக தப்பிவிடுகின்றனர்.

இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நள்ளிரவு நேரத்தில் ரயிலுக்குள் ரோந்து செல்லும் வகையிலும், சந்தேகப்படும் நபரைச் சோதனையிடும் வகையிலும் சிறப்பு பறக்கும் படைப் பிரிவை அமைக்க ரயில்வே பாதுகாப்புப் படை முடிவு செய்துள்ளது.

ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர் உள்பட 12 பேர் கொண்ட பாதுகாப்புப் படை வீரர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள். குறிப்பிட்ட ரயில் என்றில்லாமல் நள்ளிரவு நேரத்தில் ஏதாவது ஒரு ரயிலைத் தேர்வு செய்து இந்தக் குழுவினர் திடீரென கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

சிலர் பயணிகளைப் போல சாதாரண உடையிலும், சிலர் காவலர் உடையிலும் சென்று கண்காணிப்பார்கள். பயணிகள் போல நடமாடும் சந்தேகப்படும்படியான  நபரை பயணச்சீட்டு பரிசோதகர் உதவியோடு பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி தங்களது சந்தேகத்தை தீர்த்துக் கொள்வார்கள்.

பறக்கும் படைப் பிரிவுக்கான பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், ஓரிரு தினங்களில் இந்த படைப் பிரிவு செயல்படத் தொடங்கும் என்றும் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுபோன்ற சோதனைகளின்போது பயணிகளின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபடுபவர்கள், இருட்டைப் பயன்படுத்தி பயணியை மிரட்டிப் பணம், நகை பறிப்பவர்கள், பெண்களிடம் தகாத முறையில் நடப்பவர்கள் எளிதில் கண்டறியப்படுவார்கள் என்றார் பாதுகாப்புப் படை ஆய்வாளர் ஒருவர்.

ரயில்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பயணிகளும் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com