

மதுரை, ஏப். 23: மதுரை அருகே உள்ள சிறுவாலை கிராமத்தில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமானோர் வாந்தி, பேதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த 20}ம் தேதி நள்ளிரவில் இவ்வூரைச் சேர்ந்த ஆறுமுகம், அவரது குழந்தைகள் ராஜ்குமார் (7), யோகேஸ்வரி (5) ஆகியோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அவசர அவசரமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
கடந்த 21}ம் தேதி அதே ஊரைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன்கள் சித்திரைச் செல்வன் (12), தினேஷ் (10) ஆகியோரும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து வியாழக்கிழமை காலையில் இருளாயி (55), லெட்சுமி (70), தேவி (17) ஆகியோர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பலரும் மதுரை அரசு மருத்துவமனையிலும், தோப்பூர் தொற்றுநோய் சிகிச்சை மையத்திலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மதுரை நகரிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிறுவாலை ஊராட்சி. இந்த ஊராட்சியில் சிறுவாலை, செல்லக் கவுண்டன்பட்டி, சி.புதூர் ஆகிய ஊர்கள் அடங்கியுள்ளன.
சிறுவாலை கிராமத்தில் மட்டும் 284 வீடுகள் உள்ளன. 1060 பேர் வசிக்கின்றனர். கழிவுநீர்க் கால்வாய் இருந்தும், கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. சாணக் கழிவுகளும் தெருவெங்கும் தேங்கியுள்ளன.
தெருக்கள் புதர்மண்டியும், பிளாஸ்டிக் பைகள் குவிந்தும், குப்பைக் கூளம் அகற்றப்படாமலும் இருப்பதால் சுகாதாரமற்ற சூழ்நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாகவே இந்தப் பகுதி மக்கள் வாந்தி பேதி பாதிப்புக்கு உள்ளாவதாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த 3 நாள்களாக இவ்வூரில் தொடர்ந்து பலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் இப்பாதிப்பு ஏற்பட்டதாக அங்கிருந்த சுகாதார அலுவலர்கள் கூறினர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிராம சுகாதார கழிப்பறைத் திட்டத்திற்கு அளிக்கப்பட்ட கழிப்பறை கோப்பைகள் பயன்பாடற்று வீடுகள் முன் உடைந்து கிடக்கிறது.
இந்த ஊராட்சியில் 3 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர். ஆனால், சுகாதாரத்தை பேணுவதற்கு உரிய வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று அங்குள்ளோர் கூறினர்.
மேலும், சுகாதார ஊழியர்களுக்கு மாதம் ரூ.1400 மட்டுமே ஊதியம் என்பதால் அவர்கள் முழுநேரமும் சுகாதாரப் பணியில் ஈடுபடுவதில்லை என்ற புகாரும் கூறப்படுகிறது.
குப்பைகளை ஏற்றிச்செல்லும் தள்ளுவண்டியம் பயனற்ற நிலையில் உள்ளது. குப்பைகளை கொட்டுவதற்கும் இடமில்லை. இதனால் இந்தப் பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அடிக்கடி அலையும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் கிராம மக்கள்.
சிறுவாலை ஊராட்சித் தலைவர் கே.அதிவீரபாண்டியன் கூறுகையில், " சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை, அவர்களுக்குரிய வசதி இன்மை என பல பிரச்னைகள் உள்ளன. தினமும் 1 டன் சாணமாவது தேங்குகிறது. சாணத்தை எரிவாயு தயாரிக்கும் வகையில் அரசு ஏற்பாடு செய்தால் சுகாதாரம் மேம்படும்.
இந்தப் பகுதியில் 16 ஊர்கள் உள்ளன. அனைத்து ஊர் மக்களும் பயன்பெறும் சிறுவாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
சுகாதாரப் பிரச்னையால் அடிக்கடி இப்பகுதி மக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்காக தனிப்பட்ட முறையில் மருத்துவ முகாம்களை இலவசமாக நான் நடத்தி வருகிறேன் என்றார்.
மதுரையில் சிறுவாலை போன்ற பல கிராமங்கள் போதிய சுகாதார வசதியின்றி காணப்படுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சுகாதாரத்தை மேம்படுத்தி மக்களைப் பாதுகாக்க வேண்டியது' அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.