வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்: இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு

வேதாரண்யம், ஏப்.  29: இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய, வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று வெள்ளிக்கிழமையுடன் (ஏப்ரல் 30) 80 ஆண்டுகள் நிறைவடைகின்றன
Published on
Updated on
2 min read

வேதாரண்யம், ஏப்.  29: இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய, வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று வெள்ளிக்கிழமையுடன் (ஏப்ரல் 30) 80 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

ஆங்கிலேய அரசின் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற இந்தப் போராட்டம் தண்டியில் காந்தியடிகள் தலைமையிலும், வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையிலும் நடைபெற்றது.

 ராஜாஜி தலைமையில் திருச்சியிலிருந்து, 1930, ஏப்ரல் 13-ல் 100 தொண்டர்களுடன் தொடங்கிய பாதயாத்திரைக் குழுவினர் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூர், அய்யம்பேட்டை, கும்பகோணம், ஆலங்குடி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, தகட்டூர் வழியாக பிரசாரம் மேற்கொண்டு வேதாரண்யம் வந்தடைந்தனர்.

வேதாரண்யத்தை சேர்ந்த அகஸ்தியன்பள்ளி உப்பளத்தில் 1930 ஏப்ரல் 30-ம் தேதி  அதிகாலை திட்டமிட்டபடி உப்பு அள்ளிய ராஜாஜி கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்புத் துறை அலுவலகத்தில் உள்ள தனி அறையில் சிறை வைக்கப்பட்டார். தற்போது அந்த அறை அரசால் அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

  நாடு முழு முழுவதிலும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைதாகினர். இந்தப் போராட்டத்தின் விளைவாக தனது நிலையிலிருந்து இறங்கிவந்த ஆங்கிலேய அரசு, காந்திஜியை 2-ம் வட்ட மேஜை மாநாட்டுக்கு அழைத்தது.  

 சர்தார் வேதரத்தினம்: உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்று தண்டனை பெற்றனர். இந்தப் போராட்டம் வெற்றியடைந்ததில் வேதாரண்யம் பகுதி மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாக இருந்தது.

  குறிப்பாக, வேதாரண்யம் அ. வேதரத்தினம் பிள்ளை இயக்கத்தின் தளபதியாக விளங்கினார். தொண்டர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர் இவர்தான்.  இதனால், இவரது சொத்துகளைப் பறிமுதல் செய்த ஆங்கில அரசு, சிறைத் தண்டனை அளித்தது. இந்தத் தியாகமும், செயல்பாடுகளுமே அவரை சர்தார் என அழைக்கக் காரணமாக இருந்தது.

  இவர் ஏழை, எளிய பெண்களுக்காக கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தை நிறுவினார். இவரது நினைவு தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளது.

  வேதாரண்யம் வடக்கு வீதியில் உப்பு சத்தியாகிரக நினைவுக் கட்டடமும், வளாகத்தில் சர்தாரின் உருவச் சிலையும் நிறுவப்பட்டுள்ளன. உப்பு அள்ளிய அகஸ்தியன்பள்ளியில் சத்தியாகிரக நினைவுத் தூண் ஏற்படுத்தப்பட்டு, 1950-ல் திறக்கப்பட்டது.

  தியாகி வைரப்பன்: போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்களிப்பு செய்தார்கள் என்பதற்கு உதாரணமானவர் தியாகி வைரப்பன். இவர் நாவிதர் தொழிலாளி. ஆங்கிலேயருக்கு உதவிகள் ஏதும் செய்வதில்லை என்று தங்களுக்குள்ளேயே கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டிருந்தனர் அந்தப் பகுதி மக்கள்.

  அப்போது, தன்னிடம் சாதாரண உடையில் முகச்சவரம் செய்துகொள்ள வந்தவர் ஆங்கிலேயக் காவலர் என்பதைத் தெரிந்து கொண்டார் 18 வயது இளைஞராக இருந்த வைரப்பன்.

  உடனே பாதியில் சவரத்தை நிறுத்திவிட்டு, தொடர்ந்து சவரம் செய்ய மறுத்தார். நீதிபதி உத்தரவிட்டும், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததால், கடுங்காவல் தண்டனை பெற்றார். இவருக்கு 1998-ல் காங்கிரஸ் சார்பில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இவரது உருவச் சிலையும் திறக்கப்படவுள்ளது.

  உப்பு சத்தியாகிரகம் நடைபெற்று 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை நினைவுகூறும் வகையில் வேதாரண்யத்தில் வெள்ளிக்கிழமை உப்பு அள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com