மதுரை அரசு மருத்துவமனையில் "எய்ட்ஸ்' பரிசோதனை நிறுத்தம்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஏஆர்டி மையத்தில் ஒரு வாரமாக எய்ட்ஸ் கண்டறியும் பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால் பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.   மதுரை அரசு மருத்துவமனையி
மதுரை அரசு மருத்துவமனையில் "எய்ட்ஸ்' பரிசோதனை நிறுத்தம்
Updated on
2 min read

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஏஆர்டி மையத்தில் ஒரு வாரமாக எய்ட்ஸ் கண்டறியும் பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால் பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

  மதுரை அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கும் மையமாக ஏஆர்டி செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் நோயாளிகளுக்கு முதலில் தன்னார்வ ஆற்றுப்படுத்துதல் எனும் சிகிச்சை அளிக்கப்படும். அதாவது நோய் குறித்த தன்மையையும், அந் நோய் பாதிப்பைக் குறைப்பதற்கான வழிமுறைகளும் ஆலோசகர்களால் எடுத்துக் கூறப்படும்.

  பின் நோய் பாதிப்பு இருக்கிறதா? என அறியும் சோதனை செய்யப்படும். அதில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அதன் பிறகும் 2 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

  இவ்வாறு எய்ட்ஸ் கண்டறிவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் ஏஆர்டி மையத்தில் மிக முக்கியப் பிரிவாக விசிடிசி பிரிவு (தன்னார்வ ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையம்) செயல்படுகிறது.

  இப் பிரிவானது எய்ட்ஸ் நோய் உள்ளதா, இல்லையா? என அறிந்து கொள்ளும் இடமாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 ஆலோசகர்கள் மற்றும் ஒரு ரத்தப் பரிசோதகர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், ஓர் ஆலோசகர், ஓர் பரிசோதகர் மட்டுமே பணியில் உள்ளனர்.

  மேலும் ஆலோசனை கூற, ரத்தப் பரிசோதனை செய்ய எனத் தனித்தனி அறைகள் இருக்க வேண்டும். ஆனால், விசிடிசி மையமே மிகச் சிறிய அறையில் செயல்பட்டு வருகிறது. இந்த அறையில்தான் ஆலோசனை மற்றும் பரிசோதனை நடத்தும் நிலை உள்ளது.

இம் மையத்தில் ஆலோசகர் மற்றும் பரிசோதகர் மேஜை, நாற்காலி போட்டு அமருவதற்கே இடம் போதாத நிலையும் உள்ளது.

  இந் நிலையில், ஆலோசனையும், பரிசோதனையும் பெயரளவுக்கு நடத்தப்பட்டு வருகிறது என்பதே நோயாளிகளின் ஆதங்கம்.

  மதுரையில் ரயில் நிலையம், பெரியார் பஸ் நிலையத்தில் எய்ட்ஸ் ஆலோசனை மையம் அமைக்கப்படும் என ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அமைக்கப்படவில்லை.

  இவ்விரு மையங்களுக்கு 2 ஆலோசகர்கள், 2 பரிசோதகர்கள் என 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டோரும் அரசு மருத்துவமனை ஏஆர்டி மைய விசிடிசி பிரிவிலேயே பணிபுரிகின்றனர்.

  இதனால், அரசு மருத்துவமனை ஏஆர்டி மைய விசிடிசி பிரிவின் சிறிய அறையில் 7 பேர் அமரக்கூட இடமில்லாத நிலையும் உள்ளது. ஆலோசனை பெற வரும் நோயாளிகள் வெளியில் நிற்கும் நிலை உள்ளது.

  இப் பிரிவுக்கு தினமும் 75 முதல் 100 பேர் பரிசோதனைக்கு வருகின்றனர். ஜூன் மாதம் மட்டும் 1,571 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 90 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  ஜூலையில் 1,194 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஜூலை முதல் வாரத்திலேயே இம் மையத்தில் எய்ட்ஸ் கண்டறியும் பரிசோதனைப் பொருள்கள் (கிட்ஸ்) இல்லை. இதனால் இங்கிருப்போர் ஆரம்ப சுகாதர நிலையங்களை அணுகி, கடன் வாங்கியே பலருக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

  இந் நிலையில், கடந்த ஒருவாரமாக யாரிடமும் பரிசோதனைப் பொருள்களை கடன் வாங்க முடியாததால், பரிசோதனை நிறுத்தப்பட்டதாக மருத்துவமனை டாக்டர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

  அரசு மருத்துவமனை  ஏஆர்டி மையத்தில் எய்ட்ஸ் கண்டறியும் பரிசோதனை நிறுத்தப்பட்டதால், பரிசோதனைக்கு வருவோர் தனியார் பரிசோதனை மையங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பரிசோதனைக் கட்டணமாக ரூ. 175 முதல் ரூ.750 வரை கேட்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

  இதுகுறித்து பலமுறை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், கிட்ஸ் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

  மேலும், ஏஆர்டி மையத்துக்கு நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரி பெரும்பாலான நாள் வருவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

  ஒருபுறம் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக அதிகமான நிதியைச் செலவிடும் அரசு, மறுபுறும் விழிப்புணர்வு பெற்று எய்ட்ஸ் பரிசோதனைக்கு வருவோருக்கு உரிய வசதியை செய்து தராமல் இருப்பது எவ்விதத்தில் நியாயம்? என எச்ஐவி பாதித்தோர் கேள்வி எழுப்புகின்றனர்.

  சமீபத்தில் மதுரை ரேஸ் கோர்ஸில் இளவட்டம் எனும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் மூலம் ஏராளமானோர் ஏஆர்டி மையத்துக்கு பரிசோதனைக்காக வந்துள்ளனர். ஆனால், அவர்களைப் பரிசோதிக்க கிட்ஸ் இல்லாத நிலையும், ஆலோசனை வழங்க ஆலோசகர் இல்லாத நிலையும் இருந்துள்ளது.

  எய்ட்ஸ் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற அரசு உரிய நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், எய்ட்ûஸ கண்டறியும் பரிசோதனைக்குக் கூட உரிய வசதி இல்லாத நிலை நீடிப்பது வியப்பை அளிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com