

வேலூர்: வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள சுகாதாரப் பூங்காவை பராமரிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயில் அருகே உள்ளது வேலூர் மாவட்ட சுகாதாரப் பூங்கா. சுகாதாரமற்ற நிலையில் இந்தப் பூங்கா காணப்படுகிறது.
சுகாதாரப் பூங்கா என்ற பெயர் பலகையின் அடியில் செல்லும் மழைநீர் வடிகால் கால்வாயில், காலியான தண்ணீர் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டீ கப்புகள், கேரி பேக்குகள் என பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன.
கால்வாய் மட்டுமல்லாமல் அங்குள்ள நடைபாதையிலும், இருக்கைகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள்தான் அதிகமாக உள்ளன.
சுகாதார வளாகத்தில் குவிந்துள்ள குப்பைகளை பார்க்கும்போது அந்த வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு மாதக்கணக்கில் இருக்கும் என்று தெரிகிறது.
பூங்காவில் அலங்கார விளக்குகள் இருந்ததற்கான சில அடையாளங்களை மட்டுமே இப்போது காணமுடிகிறது.
ஒதுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி என்று அழைக்கப்படும் அம்பேத்கரின் சிலையும் பூங்காவில் ஒதுக்குப்புறமான இடத்தில்தான் உள்ளது.
பூங்கா வளாகத்தில் உள்ள மாதிரி கழிவறைகளின் நிலை இன்னும் பரிதாபம். குளியலறையுடன் கூடிய கழிவறை, குழந்தைகள் நலமைய கழிவறை, கூரை வசதியுடன் கூடிய கழிவறை, மேற்கத்திய கழிவறை, சூழலுக்கேற்ற கழிவறை, சுற்றுச்சுவர் கொண்ட கழிவறை என பல்வேறு தலைப்புகளுடன் பெயர் பலகைகள் உள்ளன. ஆனால் அங்கு சிதைந்துபோன நிலையில் சில செங்கற்கள் மட்டுமே உள்ளன.
ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்பகுதி மாநகராட்சி குப்பைக் கிடங்காகவே செயல்படுகிறது. அங்கு பிளாஸ்டிக் குப்பைகளுடன் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகளும் குவிக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் பொருள்களால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு அதனை எரிக்கும்போது மனிதர்களுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள அரசு அறிவுறுத்திவருகிறது. ஆனால் இங்கோ அந்த அறிவுரை உதாசினம் செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்படுமா? மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை தடை செய்ய சில நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம். குறைந்தபட்சம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மட்டுமாவது பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கவேண்டும். சுகாதாரப் பூங்காவில் சுகாதாரத்தைப் பேணவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.