புற்று நோய்க்கு மருந்தாகும் கண்வலிக் கிழங்கு

கடலூர்,  பிப்.17:   தமிழ் இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்று உள்ளது செங்காந்தள் மலர்கள். இது தென் மாவட்டங்களில் வறண்டப் பகுதிகளில் வேலிகளில் படர்ந்து கிடக்கும். மலைப் பிரதேசங்களிலும் அதிகமாகக் காணப்படு
புற்று நோய்க்கு மருந்தாகும் கண்வலிக் கிழங்கு
Updated on
1 min read

கடலூர்,  பிப்.17:   தமிழ் இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்று உள்ளது செங்காந்தள் மலர்கள். இது தென் மாவட்டங்களில் வறண்டப் பகுதிகளில் வேலிகளில் படர்ந்து கிடக்கும். மலைப் பிரதேசங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது. கலப்பைக் கிழங்கு, கண்வலிக் கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.

சித்த மருந்துகளில் தோல் வியாதிகள் மற்றும் வயிற்று நோய்களுக்கான மருந்துகளிலும் கலப்பைக் கிழங்கு சேர்க்கப்படுவதாக அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் கடலூர் ஆறுமுகம் தெரிவித்தார்.

பணப் பயிராகப் பயிரிடப்பட்டு இதன் விதைகள் வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அதில் இருந்து பிரித்தெடுக்கப்படும் (0.7 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை) வேதியல் பொருள்களில் (கோல்ச்சிசின் மற்றும் சூப்பர்பின்) இருந்து புற்று நோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுவதாகவும் டாக்டர் ஆறுமுகம் தெரிவித்தார்.

மலைப்பாங்கான வறண்ட நிலங்களில் கலப்பைக் கிழங்கு நன்றாகச் செழித்து வளர்கிறது. காடுகளிலும் வேலிகளிலும் படர்ந்து கிடந்த கலப்பைக் கிழங்கை, 1980-ல் முதல் முதலாக ஈரோடு மாவட்டம் மூலனூரிலும், சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் பணப் பயிராக வயல்களில் பயிரிடத் தொடங்கினர் விவசாயிகள்.

தற்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது. தற்போது விவசாயிகளுக்கு நல்ல ஆதாரம் தரும் பயிராக கலப்பைக் கிழங்கு மாறியிருப்பதாக மங்களூர் வேளாண் உதவி இயக்குநர் முருகன் தெரிவிக்கிறார்.

கலப்பைக் கிழங்கு விவசாயம் குறித்து முருகன் மேலும் கூறியது:

திட்டக்குடி வட்டம் சிறுபாக்கம், இ.கீரனூர், ஐவனூர் உள்ளிட்ட கிராமங்களில் கலப்பைக் கிழங்கு பயிரிடப்படுகிறது. விதைப்புக்கு ஹெக்டேருக்கு 400 முதல் 500 கிலோ வரை கிழங்கு தேவைப்படும். கலப்பைக் கிழங்கு சாகுபடிச் செலவு  ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 லட்சம் ஆகும். தேசிய மருத்துவப் பயிர்கள் திட்டத்தில் தமிழக அரசு 50 சதவீதம் மானியமாக ஹெக்டேருக்கு ரூ.67,500 அளிக்கிறது.

மகசூலைப் பொருத்தவரை ஹெக்டேருக்கு 700 கிலோ வரை விதைகளும், 1,000 கிலோ வரை கிழங்கும் கிடைக்கும். பருவத்துக்கு ஏற்றார்போல் விதை கிலோ ரூ.1,250 முதல் ரூ. 2 ஆயிரம் வரை விலை போகும். கிழங்குக்கு கிலோ ரூ.400 வரை விலை கிடைக்கும்.

அனைத்தையும் சேர்த்து கணக்கிட்டால் ஹெக்டேருக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைக்கும். ஒரு முறை கிழங்கு நட்டால், 5 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாகப் பலன் கிடைக்கும்.

சென்னையைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கலப்பைக் கிழங்கு மற்றும் விதைகளைக் கொள்முதல் செய்கின்றன. எனவே கலப்பைக் கிழங்கு சாகுபடி நல்ல லாபம் தரும் பணப் பயிராகும் என்றார் முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com