

காரைக்கால், ஜூலை 9: கேரளத்தில் மத்தி மீன் சீசன் களை கட்டியுள்ளதால், காரைக்காலில் கிடைக்கும் மத்தியை கருவாடாக்கி கோழிப் பண்ணைகளுக்கு அனுப்பும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம், புதுவை கடல் பகுதியில் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மத்தி மீன்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. இந்த மத்தி சீசனை பயன்படுத்தி, அவற்றை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி காசு பார்க்கின்றனர் மீனவர்கள்.
காரைக்கால் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் இருந்தாலும், ஒரு சில கிராம மீனவர்கள் மட்டுமே மத்தி மீன்களை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பிடிக்கப்படும் மீனை மண்டபத்தூர் கடலோரக் கிராமத்தில் ஒருங்கிணைத்து கேரளத்துக்கு நாள்தோறும் அனுப்பி வைக்கின்றனர்.
மார்ச் மாதத்தில் சீசன் தொடங்கியபோது சிறப்பாக இருந்ததாகவும், நாளடைவில் மீன் வரத்து குறையத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர் மீனவர்கள்.
பொதுவாக கேரள மக்களே மத்தி மீனை விரும்பிச் சாப்பிடுபவர்கள், அந்த மாநிலத்தில் மத்தி வரத்து எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் அதிகமாகக் கிடைப்பதால், காரைக்கால் மாவட்டத்துக்கு வந்து முகவர்கள் மத்தியை வாங்கிச் செல்வது வெகுவாகக் குறைந்து விட்டதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், தினமும் பிடித்து வரும் மத்தியை கடலோரப் பகுதியில் காயவைத்து கருவாடாக்கி தமிழகம், ஆந்திரத்தில் கோழிப் பண்ணைகளுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மண்டபத்தூரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கூறியது:
கரையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கிடைக்கக் கூடியது மத்தி மீன். கேரளத்தில் சீசன் களை கட்டியுள்ளதால், காரைக்காலில் பிடிக்கப்படும் மீன்கள் அங்கு செல்லும் வாய்ப்பு குறைந்துவிட்டது. இதனால், கருவாடாக்கி கோழிப் பண்ணைகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். மத்தி மீன் 50 கிலோ ரூ. 300 முதல் 400 வரை விற்பனை செய்ய முடியும். கருவாடாக்குவதால் 50 கிலோ மீன் 25 கிலோவுக்கும் குறைவான எடைக்கு வந்துவிடுகிறது. ஒரு கிலோ கருவாடு ரூ. 5-க்கு விலை போகிறது. லாபம் வெகுவாகக் குறைந்தே கிடைத்தாலும், மத்தியை மட்டுமே நம்பி தொழில் செய்யும் போது எங்களுக்கு வேறு வழியில்லை என்றார் அவர்.
அதிலும், காரைக்காலில் ஒரு மாதமாக அவ்வப்போது விட்டு விட்டு பெய்யும் மழையால் கருவாடாக்கும் பணியும் முடங்கிப் போகிறது. இருப்பினும், ஆண்கள், பெண்கள் என குடும்பத்தோடு தீவிரமாகப் பணியாற்றி கருவாட்டு மூட்டைகளை கோழிப் பண்ணைகளுக்கு அனுப்பி வருகின்றனர் மீனவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.