உத்தபுரம் பிரச்னையால் நிம்மதியிழக்கும் மக்கள்

மதுரை  : மதுரை மாவட்டம், உத்தபுரம் கிராமத்தில் நிலவும் பிரச்னையால் வாழ்வாதாரம் தேடி இரு தரப்பையும் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் குடும்பத்துடன் கேரளம் மற்றும் திருப்பூர் பகுதிக்குச் சென்று குடியேறுவது அ
உத்தபுரம் பிரச்னையால் நிம்மதியிழக்கும் மக்கள்
Updated on
2 min read

மதுரை  : மதுரை மாவட்டம், உத்தபுரம் கிராமத்தில் நிலவும் பிரச்னையால்

வாழ்வாதாரம் தேடி இரு தரப்பையும் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் குடும்பத்துடன் கேரளம் மற்றும் திருப்பூர் பகுதிக்குச் சென்று குடியேறுவது அதிகரித்து வருகிறது.

   மலையடிவாரத்தில் உள்ள உத்தபுரம் கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 5,000 பேர். இதில், இரு சமூகத்தினர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். 1989-ம் ஆண்டு கோயில் திருவிழா ஒன்றில் ஏற்பட்ட தகராறில், துப்பாக்கிச் சூட்டில் 3 பேரும், கலவரத்தில் 6 பேரும் உயிரிழந்தனர்.

  இதையடுத்து, இதுபோன்ற பிரச்னையைத் தவிர்க்க அப்போது இரு சமூகத்தையும் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி, அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஓர் உடன்பாடு செய்துகொண்டனர். இதன்படி பெரும்பாலான எண்ணிக்கையில் வாழும் இரு சமூகத்தின் இடையே "அமைதிச் சுவர்' ஏற்படுத்தப்பட்டது. இந்த முடிவையடுத்து 18 ஆண்டுகளாக இக்கிராமத்தில் எவ்விதப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை எனக் கூறப்படுகிறது.

   இந்நிலையில், அமைதிச் சுவரை சிலர் தீண்டாமைச் சுவர் என பிரசாரம் செய்ததால், மீண்டும் இரு சமூகத்தினருக்கு இடையே கலவர பீதி ஏற்பட்டது. ஒரு கட்சியைச் சேர்ந்த தேசியத் தலைவர் உத்தபுரம் வருவதையொட்டி, அவசர அவசரமாக அந்த சர்ச்சைக்குரிய சுவர் 6.5.2008-ல் இடிக்கப்பட்டது.

  இதையடுத்து, கோயிலில் வழிபடுவது, சாக்கடைத் தண்ணீரை வெளியேற்றுவது, நிழற்குடை அமைப்பது உள்ளிட்ட பிரச்னைகளால் இரு சமூகத்தினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

திசை மாறும் பிரச்னை: இக்கிராமத்தில் தீண்டாமை நிலவுவதாக, ஒரு குறிப்பிட்ட கட்சி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அரசு தரப்பினரோ அங்கு தீண்டாமை இல்லை; இரு சமூகத்தினரும் ஒற்றுமையாகவே உள்ளனர். அரசியல் ஆதாயத்துக்காக உத்தபுரம் கிராமம் பகடைக்காயாக ஆக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கின்றனர்.

  சில தினங்களுக்கு முன் மதுரை ஆட்சியர் வளாகம் முன் நடைபெற்ற முற்றுகைப்  போராட்டத்தில், பாதிக்கப்பட்ட உத்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் யாரும் பங்கேற்கவில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  இந்நிலையில், போலீஸôரும் இக்கிராமத்தில் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சிறு பிரச்னை என்றால்கூட இரு தரப்பினரையும் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. இப்பிரச்னையால் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய விவசாயமும் இக்கிராமத்தில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூகப் பிரச்னையில் இருந்த இக்கிராம மக்கள், தற்போது பொருளாதாரப் பிரச்னையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

  இதனால், ஒரு சமூகத்தைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களின் வீடுகளைப் பூட்டிவிட்டு அவர்களின் உறவினர்கள் வாழும் திருப்பூர், திருப்பரங்குன்றம், பரவை (மதுரை) உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றுவிட்டதாகத்

தெரியவருகிறது.

  மேலும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த பல குடும்பங்கள், கேரள மாநிலத்துக்கு பிழைப்புத் தேடி குடும்பத்துடன் செல்வதும் அதிகரித்து வருகிறது.  இதனால், குழந்தைகளின் படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகிறது.

உத்தபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களான நல்லமநாயக்கன்பட்டி, தங்ககவுண்டன்பட்டி, பொட்டல்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 250 குழந்தைகளே இங்குள்ள பள்ளியில் தற்போது படித்து வருகின்றனர்.

  உத்தபுரம் கிராமத்தில் தற்போது நிலவும் பிரச்னையால், ஒட்டுமொத்த கிராம மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் தெரிவிக்கையில், இக்கிராமத்தின் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமத்த்துக்கு அடிப்படை வசதிகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை உத்தபுரம் கிராமத்தில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்திலும்

இரு தரப்பைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர். இக்கிராம மக்களின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

  பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலே நடத்த முடியாமல் இருந்த மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் கிராமங்களில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் அங்கு தேர்தலை நடத்தி மக்கள் பிரச்னைக்குத் தீர்வு காண அரசின் பல்வேறு சிறப்பு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல், உத்தபுரம் கிராமத்திலும் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட சிறப்பு நலத்திட்டங்களை அரசு அறிவித்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com