அரசுப் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேங்கும் அவலம்!

மதுரை : மதுரை அருகே சிந்தாமணியில் ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பெருமைமிக்க அரசு நடுநிலைப் பள்ளியில் ஊர்க்கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு பயிலும் மாணவ, மாணவியர் கல்வி கற்க வகுப்பறையில் அமர முட
அரசுப் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேங்கும் அவலம்!
Updated on
2 min read

மதுரை : மதுரை அருகே சிந்தாமணியில் ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பெருமைமிக்க அரசு நடுநிலைப் பள்ளியில் ஊர்க்கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு பயிலும் மாணவ, மாணவியர் கல்வி கற்க வகுப்பறையில் அமர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை அருகே உள்ளது சிந்தாமணி ஊராட்சி. இது திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உள்பட்டதாகும். இங்கு 28.10.1930-ல் ஆரம்பப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி கடந்த 1963-ல் தரம் உயர்த்தப்பட்டு நடுநிலைப் பள்ளியாகத் திகழ்கிறது.

ஆரம்பத்தில் 2 கட்டடங்கள் மட்டுமே இருந்த இப்பள்ளிக்கு இப்போது 6 கட்டடங்கள் உள்ளன. எனினும் அவற்றில் பெரும்பாலானவை ஓட்டுக்கூரையுடனும், இடிந்த நிலையிலும் காணப்படுகின்றன.

எட்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் தலைமை ஆசிரியை உள்பட 17 பேர் பணிபுரிகின்றனர். 164 மாணவர்களும், 162 மாணவியரும் என 326 பேர் இங்கு படித்து வருகின்றனர்.

இப்பள்ளியின் கட்டடங்களுக்கு நடுவே ஊர்ப் பொதுக் கழிப்பறை நீர் செல்லும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கால்வாய் தூர்ந்துபோனதால் ஊர்க்கழிவு நீரெல்லாம் பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கியுள்ளன.

மேலும், கழிவுநீர் தேங்கிய பகுதியில் கருவேல முள் செடி உள்ளிட்ட புதர்களும் காணப்படுகின்றன. வளாகம் முழுவதும் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் ஆசிரியர்கள் மாணவ, மாணவியருக்குப் பாடம் நடத்தமுடியாத சூழ்நிலை உள்ளது.

இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பக் கூடுதல் கட்டட வசதி இல்லை. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குரிய சிறிய கட்டடத்தில் 7-ம் வகுப்பு நடைபெறுகிறது. கரும்பலகை உள்ளிட்ட எவ்வித வசதியும் இன்றி இந்த வகுப்பறை சுகாதரமற்ற நிலையில் உள்ளது.

பள்ளியில் 326 மாணவ, மாணவியர் படித்தாலும், குடிநீர் தொட்டியோ, கழிப்பறையோ இல்லை. இதனால், மாணவியர் கழிப்பறையின் முன் உள்ள கதவு இல்லாத சிறிய அறையை சிறுநீர் கழிக்கப் பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்களோ பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர் அருகே சிறுநீர் கழிக்கின்றனர்.

பள்ளியில் சத்துணவுக் கூடம் இடிந்த நிலையில் பயனில்லாமல் உள்ளது. இதனால்  திறந்தவெளியிலேயே சத்துணவு சமைக்கப்படுகிறது. மழைக்காலங்களில் சத்துணவு ஏதும் சமைக்கப்படாது என்றும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

இப்பள்ளியில் தினமும் குறைந்தது 15 மாணவர்களாவது விடுமுறை எடுப்பதாகவும், கழிவுநீர் தேங்கி நிற்பதால் அடிக்கடி மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவரான எழுபது வயது முதியவர் பால்சாமி கூறுகையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட இப்பள்ளியின் சுகாதாரம் குறித்தோ, பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலன் குறித்தோ யாரும் கவலைப்படுவது இல்லை.

இப்பகுதியில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அதிகம். அவர்களது குழந்தைகளே இங்கு படிக்கிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்டோர் அக்குழந்தைகளது நலன் கருதியாவது பள்ளியைச் சீரமைக்க முன்வரவேண்டும் என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு என கோடிக்கணக்கான ரூபாய் நிதி செலவிடப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டாலும்,  சிந்தாமணியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் பரிதாப நிலையைப் பார்க்கும்போது   நாம் இன்னும் இந்த நிலையிலா உள்ளோம்? என அதிர்ச்சியே ஏற்படுகிறது.

இனியாவது சம்பந்தப்பட்ட பள்ளிக் கல்வித் துறையினர் சிந்தாமணி நடுநிலைப் பள்ளிக் குழந்தைகளை கருத்தில் கொண்டு பள்ளியை சீரமைக்க முன்வர வேண்டும் என்பது அப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com