கிடைக்குமா ஜெனரேட்டர் மானியம்?

கோவை: விண்ணப்பித்து ஓராண்டுக்கு மேலாகியும் ஜெனரேட்டர் மானியம் கிடைக்காததால் கோவை தொழில்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.   தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாக மின்வெட்டு அமல்படுத
கிடைக்குமா ஜெனரேட்டர் மானியம்?
Updated on
2 min read

கோவை: விண்ணப்பித்து ஓராண்டுக்கு மேலாகியும் ஜெனரேட்டர் மானியம் கிடைக்காததால் கோவை தொழில்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

  தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்நகரமான கோவை மின்வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக கோவை தொழில்நிறுவனங்களில் அதிகபட்சம் 30 சதவீதம் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

 சிறு, குறுந்தொழில்நிறுவனங்களில் மின்வெட்டுப் பிரச்னைக்குத் தீர்வுகாணும்  வகையில் ஜெனரேட்டர் மானியம் வழங்க தமிழக அரசு 21.5.2009-ல் அரசாணை வெளியிட்டது. இதன்படி 125 கிலோ வாட் மின்திறனுடைய ஜெனரேட்டர் வாங்கும் நிறுவனங்களுக்கு 20 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத் திட்டத்தின்கீழ் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை மானியம் பெற முடியும்.

ஜெனரேட்டர் வாங்கிய 6 மாதங்களுக்குள் மாவட்டத் தொழில்மையத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  ஏற்கெனவே இருக்கும் பழைய ஜெனரேட்டர்களை அகற்றிவிட்டு, புதிய  ஜெனரேட்டர்களை வாங்கும் தொழில்நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், கோவையில் உள்ள ஏராளமான  தொழில்நிறுவனங்கள் பழைய ஜெனரேட்டர்களுக்குப்பதில் புதிய ஜெனரேட்டர்களை வாங்கிவிட்டு மானியம் பெற விண்ணப்பித்திருந்தன.

   வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடனைப் பெற்று பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் புதிய ஜெனரேட்டர்களை வாங்கியிருந்தன. மானியத்துக்காக விண்ணப்பித்த தொழில்நிறுவனங்களில், ஒரு சில நிறுவனங்களைத் தவிர பெரும்பாலான தொழில்நிறுவனங்களுக்கு ஜெனரேட்டர் மானியம் கிடைக்கவில்லை. இதனால், பல நிறுவனங்கள் பல மாதங்களாக கூடுதல் வட்டி கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

 "ஜெனரேட்டர் மானியம் கேட்டு குறுந்தொழில்கூடங்களில் 50-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஓராண்டுக்கு முன்பு விண்ணப்பித்தும் இதுவரை 3 பேர்களுக்கு மட்டுமே மானியம் கிடைத்துள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் தர மறுப்பதால் பெரும்பாலான குறுந்தொழில்கூடங்கள் தனியார் வங்கிகளில் கடன் பெற்று ஜெனரேட்டர்களை வாங்கியுள்ளன. இதனால் அதிக வட்டி கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

 ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருக்கும் குறுந்தொழில்கூடங்கள், ஜெனரேட்டர் மானியம் கிடைக்காததால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன' என்கிறார் தமிழ்நாடு ஊரகத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்க (டேக்ட்) கோவை மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ்.

  "கோவை மாவட்டத்தில் உள்ள பல சிறுதொழில்கூடங்கள் ஜெனரேட்டர் மானியத்துக்காக விண்ணப்பித்துள்ளன. ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே மானியம் வந்துள்ளது. அரசு அறிவித்த விதிமுறைக்குட்பட்டுதான் ஜெனரேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. விண்ணப்பித்து ஓராண்டாகியும் ஜெனரேட்டர் மானியம் வழங்கப்படாததால் சிறுதொழில்கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு இப் பிரச்னையில் தலையிட்டு மானியம் உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார் கோவை மாவட்ட சிறுதொழில் சங்கத் (கொடிசியா) தலைவர் எம்.கந்தசாமி.

  "ஜெனரேட்டர் மானியத்துக்காக விண்ணப்பித்து நிலுவையில் இருக்கும் தொழில்நிறுவனங்களுக்கு மானியம் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு மானியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியலை தொழில்நிறுவன அமைப்புகள் தெரிவித்தால் மானியத்தை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்' என்கிறார் கோவை மாவட்ட தொழில்மையப் பொதுமேலாளர் ராமசுப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com