நிதி உதவியின்றி முடங்கிய மாற்றுத் திறனாளிகள் உதவி மையம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி மையம் (மானசா) அரசு நிதி உதவியின்றி முடங்கிப்போய் உள்ளது. இந்த மையத்தின் மூலம் பயனடையலாம் என மனுச் செய்த 5,000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன
நிதி உதவியின்றி முடங்கிய மாற்றுத் திறனாளிகள் உதவி மையம்
Updated on
2 min read

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி மையம் (மானசா) அரசு நிதி உதவியின்றி முடங்கிப்போய் உள்ளது. இந்த மையத்தின் மூலம் பயனடையலாம் என மனுச் செய்த 5,000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் அரசின் உதவிக்காக காத்திருப்பது தெரியவந்துள்ளது.

  மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் உரிமை காக்கும் வகையில் கடந்த 1995-ல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

  இதையடுத்து நாட்டில் 149 மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்தில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.  இந்த மையங்கள் மூலம் உடல் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலே அறிந்து சிகிச்சை அளிப்பது, மறுவாழ்வுப் பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல் ஆகிய பணிகளையும் இம்மையம் மூலம் செயல்படுத்த நிதி உதவி வழங்கப்பட்டது.

  அதன்படி மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மையம் செயல்பட்டது. இம்மையம் கடந்த 2000 ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை மனவளர்ச்சி குன்றியோருக்கான தேசிய நிறுவனத்தின் ஆலோசனையின் கீழ் செயல்பட்டது.

  ஆனால், 13.4.2004 முதல் இந்த மையம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட மனநலம் குன்றியோருக்கான நலமுகமை எனும் அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதற்கு "மானசா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

  இதன் மூலம் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களும், ஸ்ரீபெரும்புதூர், திருச்செங்கோடு, சிவகாசி ஆகிய மக்களவைத் தொகுதிகளிலும் மறுவாழ்வு மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.  இந்த மையங்கள் மூலம் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்று வந்தனர். மையம் மூலம் கால் குறைபாடு உள்ளோருக்கு செயற்கைக்கால் பொருத்துதல், மூன்று சக்கர சைக்கிள் வாங்கித் தருதல், பார்வைக் குறைபாடு உடையோருக்கு கருப்புக் கண்ணாடிகள் வழங்குதல், கேட்கும் குறைபாடு உள்ளோருக்கு காதொலி கருவிகள் வழங்குதல் போன்றவை செயல்படுத்தப்பட்டன.

  மதுரை மானசா மையம் கடந்த 2002-ம் ஆண்டில் சிறந்த சேவைக்காக குடியரசுத் தலைவர் விருதை பெற்றுள்ளது. நாட்டிலேயே சிறந்த சேவை மையம் எனக்கூறப்பட்ட மானசா மையத்துக்கு, கடந்த 2007-ம் ஆண்டு முதல் இம்மையத்தில் பணிபுரியும் சுமார் 10 ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்கப்படவில்லை. இதனால், மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.

  மத்திய அரசு திட்டத்துக்கான நிதியை அளித்த நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் அந்த நிதியை முறையாகப் பெற்றுச் செலவிட முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், இம்மையம் மூலம் பயனை எதிர்பார்த்து சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

  மதுரை மாவட்டத்தில் 2002-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 25,62,279 பேரில், 70,256 பேர் மாற்றுத் திறனாளிகள் என ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இதில் 44,091 பேர் பார்வைக்குறைபாடும், 2,381 பேருக்கு பேச்சுக் குறைபாடும், 4,428 பேருக்கு செவித்திறன் குறைபாடும், 13,164 பேருக்கு செயல்பாடு குறைபாடும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

  மேலும் 6,192 பேர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை தற்போது மேலும் கூடுதலாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. இத்தகைய நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மானசா அமைப்புக்கு உரிய நிதியை அளித்தால், அதன் மூலம் ஏராளமானோர் பயனடைவர் என்பதுடன், திட்டத்தின் மூலம் பணி வாய்ப்பைப் பெற்றவர்களும் மறுவாழ்வு பெறுவர் என்பதே சம்பந்தப்பட்டோரின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com