சிதைந்து வரும் இசைச் சிற்பம்

பண்ருட்டி, ஜூன் 8: விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த இசைச் சிற்பங்கள் கவனிப்பாரற்று சிதைந்து வருகின்றன. நம் நாட்டின் பண்பாடு, நாகரிகம் கலாசாரங்களை எடுத்துக்காட்டுவதில் ஓவ
சிதைந்து வரும் இசைச் சிற்பம்
Published on
Updated on
2 min read

பண்ருட்டி, ஜூன் 8: விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த இசைச் சிற்பங்கள் கவனிப்பாரற்று சிதைந்து வருகின்றன.

நம் நாட்டின் பண்பாடு, நாகரிகம் கலாசாரங்களை எடுத்துக்காட்டுவதில் ஓவியங்களும் சிற்பங்களும் ஒர் அங்கமாக விளங்குகின்றன. அத்தகைய சிற்பங்களும் ஓவியங்களும் மாற்றார் படையெடுப்பால் தமிழ்நாடு முழுவதும் சிதைக்கப்பட்டன. எஞ்சியுள்ள கலைச் சின்னங்கள் கவனிப்பாரற்று சிதைந்து கொண்டிருப்பதை இன்றும் பல்வேறு இடங்களில் பார்க்க முடிகிறது.

பாவங்களும், கருமங்களும் தொலைய வேண்டுமானால் காசிக்கும், கங்கைக்கும் சென்று தீர்த்தமாடி விட்டு வரவேண்டும் என்கிற நம்பிக்கை நமக்கு இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் நம் சொந்த ஊரில் இருக்கும் ஆறும், குளங்களும் புண்ணிய கங்கைகள்தான் என்பதை நம்மில் சிலர் சிந்திக்கத் தவறுகின்றனர். அதனால் தான் உள்ளூர்க் குளம், தீர்த்தகுளம் ஆகாது என்கிற எதிர் மறையான பழமொழியைப் பெரியோர்கள் கூறி வைத்துள்ளனர். இது போன்று சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலும், இசை தரும் குதிரை சிற்பமும் கவனிப்பாரற்று சிதைந்து கிடக்கின்றன.

இது குறித்து கல்வெட்டாய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறியது: இந்த இசை தரும் குதிரைச் சிற்பம் உள்ள இடம் கி.பி. 12-13 ஆம் நூற்றாண்டுகளில் தலை நகரமாக விளங்கி இன்று சிறிய கிராமமாக காட்சி தரும் சேந்தமங்கலம் என்ற ஊராகும்.

விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் நதிக்கு தேற்கே 1 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூர் பல போர்களை நிகழ்த்திய வரலாற்றுப் பெருமை வாய்ந்தது.

பல்லவர் குலத் தோன்றல்களாகிய மணவாளக் காடவராயரும், அவர் மகனாகிய கோப்பெருஞ்சிங்கக் காடவராயரும் தங்கள் வீர வாள்களால் நிகழ்த்திய போர்களில் பெற்ற வெற்றியின் சின்னமாக அப்பகுதியில் இருந்த பெரிய காட்டை அழித்து வாணிலை கண்டீச்சுரம் (வாள்நிலை கண்ட ஈச்சரம்) என்கிற சிவன் கோயிலைக் கட்டினர். ஏழு வாயில்கள் மற்றும் அகழிகள் சூழ்ந்த கோட்டைக் கொத்தளங்களை அமைத்து, அருகே மக்களைக் குடியமர்த்தி சேர்ந்தமங்கலம் என்ற பெயரைச் சூட்டினர்.இவர்களுக்குப் பிறகு பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர-நாயக்கர் போன்ற மன்னர்களின் ஆளுகைக்கு உள்பட்டுப் பின்னர் கவனிப்பாரற்று சிதைந்து வந்துள்ளது. தற்போது இக்கோயில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் கட்டுப்பாட்டில் வந்தபிறகு திருப்பணி தொடங்கி நடந்தேறி வருகிறது.

இக்கோயிலுக்கு எதிரில் பெரிய குளத்தை வெட்டிய காடவ மன்னர்கள், நாற்புறங்களிலும் அழகிய படிக்கட்டுகளை அமைத்து வட கரையில் நிழல் தருவதற்கென இரண்டு குதிரைகள் பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் எழில்மிக்க கருங்கல் மண்டபத்தை கட்டியுள்ளனர். இந்த மண்டபம் தற்போது முற்றிலும் அழிந்து இரண்டு குதிரைகள் மட்டும் எஞ்சியுள்ளன.

சீறிப் பாய்வதுபோல் நின்று கொண்டிருக்கும் இக்குதிரையின் மீது சிறு கல்லை எடுத்து எங்கெல்லாம் தட்டுகிறோமோ அங்கெல்லாம் பல விதமான ஒலியெழுப்பி நம்மை வியப்படையச் செய்கிறது. இதில் ஒரு குதிரை தரையில் விழுந்து கிடக்கிறது. எஞ்சி நிற்கும் ஒரு குதிரையாவது விழுவதற்குள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்களின் ஆவல் என பண்ருட்டி தமிழரசன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com