
சென்னை, மே. 1: சேலம் இரும்பு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவது தொடர்பாக உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மத்திய அரசை முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மத்திய இரும்பு மற்றும் எஃகு துறை அமைச்சர் வீரபத்ர சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை எழுதியுள்ள கடித விவரம்:
"சேலம் அருகே உள்ள இரும்பு ஆலை அமைப்பதற்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலத்தை கையகப்படுத்தும்போது, இந்த ஆலைக்கு நிலம்
அளிப்பவர்களுக்கும்,அவர்களது வாரிசுதாரர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை
அளிக்கப்படும் என்று அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி உறுதி அளித்தார்.
அதன் அ=டிப்படையில், இரும்பு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்காக, அதே ஆலையில் வேலை கொடுக்க சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகமும் ஏற்படுத்தப்பட்டது.
இரும்பு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரி ஏப்ரல் 3, 27 ஆகிய தேதிகளில் அந்த ஆலைக்கு எதிரே போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக, அப்பகுதி மக்களின் பிரதிநிதிகள், சேலம் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ராஜா மற்றும் சேலம் இரும்பாலை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற சமாதானக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் இரும்பு ஆலைக்கு பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க தனியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும்; இந்த அலுவலகம் மூலமே அனைத்துப் பணிகளும் நிரப்பப்பட வேண்டும்; அவ்வாறு நிரப்பும்போது இரும்பு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; தற்போது 78 பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இந்தக் கூட்டத்தின் முடிவில் ஏற்பட்ட உடன்பாடு விவரம்:
இரும்பு ஆலையில் 78 பணியாளர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நேர்முகத் தேர்வில் இரும்பு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள் எத்தனை பேர் பங்கேற்றுள்ளனர் என்ற விவரம் சேகரிக்கப்படும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். சேலம் இரும்பு ஆலைக்கு பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பட்டியல் பெறப்படும். அவற்றில் தகுதியான நபர்கள் யாரும் இல்லாத நிலையில் வேலைவாய்ப்பு குறித்து செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று உடன்பாடு ஏற்பட்டது.
இந்தப் பிரச்னை குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
சேலம் இரும்பு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள், அந்த ஆலையால் இடம்பெயர்ந்தவர்கள்
ஆகியோருக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என்று முதல்வர் கருணாநிதி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.