கேள்விக்குறியானது கடல் வழி கண்காணிப்பு: ரோந்துப் படகு முடக்கம்

காரைக்கால், மே 6: தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் நிலையத்துக்குச் சொந்தமான படகு, பழுது காரணமாக முடக்கப்பட்டுள்ளதால் காரைக்கால் பகுதியில் கடல் வழிக் கண்காணிப்பு முற்றிலும் நின்றுவிட்
கேள்விக்குறியானது கடல் வழி கண்காணிப்பு: ரோந்துப் படகு முடக்கம்
Updated on
2 min read

காரைக்கால், மே 6: தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் நிலையத்துக்குச் சொந்தமான படகு, பழுது காரணமாக முடக்கப்பட்டுள்ளதால் காரைக்கால் பகுதியில் கடல் வழிக் கண்காணிப்பு முற்றிலும் நின்றுவிட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 22 கி.மீ. நீளம் வரையுள்ள கடல் பகுதியை ரோந்து மூலம் கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம், 5 டன் எடையுள்ள நவீனப் படகை வழங்கியது.

மாநிலத்திலேயே காரைக்காலில் மட்டுமே உள்ள கடலோரக் காவல் நிலையத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் பயிற்சி பெற்ற காவலர்கள் ஆயுதம் ஏந்தி, தினமும் காலை, மாலை வேளைகளில் கடலுக்குள் தீவிர ரோந்துப் பணியைச் செய்து வந்தனர்.

தற்போது காரைக்காலில் கப்பல் துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், 5 டன் குறைந்த வசதி கொண்ட படகால் போதுமான அளவு கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள முடியவில்லை. பெரிய மீன்பிடிப் படகில் ஏறிச் சோதனை செய்ய முடியவில்லை. ரேடார் மற்றும் கடல் ஆழத்தைக் கண்டறியும் கருவிகள் இல்லை. இரவில் தொலைவில் உள்ளவற்றைப் பார்க்கும் வகையில் நவீன விளக்கு இல்லை. இதுபோன்ற வசதிக் குறைவான ரோந்துப் பணியில் கடலோரக் காவல் நிலைய போலீஸôர் இடைவிடாது பணியை மேற்கொண்டு வந்தனர்.  இப் படகில் ஏற்படும் சிறிய பழுது நீக்கத்துக்கான செலவை செய்யக்கூட உள்ளூர் காவல் துறைக்கு அதிகாரம் இல்லையாம். இதனால், தற்போது இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை நீக்க, கொல்கத்தாவிலிருந்து நிபுணர்கள் வர வேண்டுமென கடந்த 15 நாள்களுக்கும் மேலாக படகை இயக்காமல் முடக்கிவிட்டனர் காவல் துறையினர். மாதமொன்றுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில், அதாவது எரிபொருளாக மட்டும் 6 ஆயிரம் லிட்டர் இப்படகுக்கு செலவிடப்படுகிறது.

இதில் ஏற்படும் பழுதை நீக்க உரிய நிதிப் பங்கீட்டு அதிகாரம் காவல் துறையினருக்கு இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மீனவர்கள் பொதுவாக கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, கடலில் இருந்து சில தகவல்களை போலீஸôருக்கு தெரிவிப்பார்களாம். தற்போது மீன்பிடித் தடைக் காலத்தில் ஏதேனும் ஊடுருவல் நடந்தால், இதைக் கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரைக்கால் துறைமுகத்துக்கு கப்பல்கள் வந்து சென்றவண்ணம் உள்ளன. இங்கு குடியேற்றப் பிரிவு அலுவலகம் அமைக்காமல் திறந்தவெளித் துறைமுகமாகவே சுமார் ஓராண்டுக்கு மேலாக இருக்கிறது.

மத்திய உள்துறை நேரடியாகவோ, அல்லது மத்திய அரசிடன் அனுமதி பெற்றோ, மாநில அரசோ துறைமுகத்தில் குடியேற்றப் பிரிவு அமைக்காமல் இருப்பதால், சுற்றுலாத்தலமாகவும், பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் பகுதியாகவும் காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி ஆகியவை இருப்பது சமூக ஆர்வலர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலில் உள்ள சுங்கத் துறைக்குச் சொந்தமான ரோந்துப் படகு மட்டுமல்லாமல், நாகை மாவட்டத்தில் பணியிலிருந்த மற்றொரு படகும் காரைக்காலில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்த நேரம் பார்த்தாலும் சுங்கத் துறையின் படகும், அரசலாற்றில் கட்டிப்போட்ட நிலையிலேயே இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ரோந்துப் படகுகள் யாவும் முடங்கியிருப்பது, மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதையே காட்டுவதாக காரைக்கால் பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com