ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்க, பாட்டிலுடன் செல்ல வேண்டும்

புதுச்சேரி, மே 8: புதுச்சேரி ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்க பாட்டிலுடன் செல்ல வேண்டியுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மற்றும் அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட புற ந
ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்க, பாட்டிலுடன் செல்ல வேண்டும்
Updated on
2 min read

புதுச்சேரி, மே 8: புதுச்சேரி ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்க பாட்டிலுடன் செல்ல வேண்டியுள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மற்றும் அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இவர்களில் குழந்தைகளுக்கான இருமல் மருந்து மற்றும் தோல் நோய்களுக்கான மேல் பூச்சு மருந்துகள் திரவமாக இருப்பதால் பாட்டிலில் வழங்க வேண்டியுள்ளது.

மருத்துவமனைகள் சிறு சிறு பாட்டில்களாக வாங்கினால் மருத்துவமனைக்கு கூடுதல் செலவு என்பதால் பெரிய பாட்டிலில் மருந்துகளை வாங்குகின்றன. பெரிய பாட்டிலில் வாங்குவதால் மருந்துகளை அப்படியே அளிக்க இயலாததால், மருந்தாளுனர்கள் நோயாளிகளை பாட்டில்களை கொண்டு வருமாறு கூறுகின்றனர்.

ஒரு சிலர் வீட்டிலிருந்து கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் கண்டபோது யாரும் பாட்டில்களை தேடுவதில்லை. அவசர கோலத்தில் மருத்துவமனைகளை நோக்கி ஓடுகின்றனர். அங்கு வரிசையில் நின்று பெயர் பதிவு செய்தல், மருத்துவரை பார்த்தல், பின்னர் மருந்து வாங்கும்போது பாட்டில் வேண்டும் என்று மருந்தாளுனர் தெரிவிப்பார். அப்போது மருத்துவமனைக்கு வெளியில் ரூ.2-க்கு விற்கப்படும், ஏற்கெனவே பயன்படுத்திய தண்ணீர் பாட்டில்களை வாங்கிக் கொண்டு மீண்டும் வரிசையில் நின்று மருந்துகளை வாங்குகின்றனர்.

இந்த பாட்டில்கள் சுத்தமாக இருப்பதில்லை.

திருமணம் மற்றும் இல்ல சுப நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு வைக்கப்படும் 500 மி.லி. கொள்ளளவு கொண்ட பாட்டில்கள், பின்னர் குப்பைகளில் கொட்டப்படுகிறது.

இதை சிலர் எடுத்து வந்து, அவர்களுக்கு தெரிந்தவரை சுத்தம் செய்து, கொண்டு வந்து ரூ.2-க்கு விற்பனை செய்கின்றனர். இதை பெற்றுக் கொண்டு தான் நோயாளிகள் மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர்.

வந்த நோய்க்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள், அசுத்தமான பாட்டில்களில் மருந்துகளை வாங்கிச் செல்வதால், மற்றொரு நோய்க்கு ஆளாகிறார்கள்.

மகளிர் குழு மூலம் விற்பனை: செலவு அதிகம் என்பதால் அரசால் சிறிய பாட்டில்களை வாங்க முடியாது.

அரசு மருத்துமனை என்பதால் அங்கு பாட்டில்களை விற்பனையும் செய்ய முடியாது.

ஜிப்மர் மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களை கொண்டு, அவர்களுக்கு என மருத்துவமனை வளாகத்திலேயே ஒரு இடம் ஒதுக்கி, அவர்களையே குறைந்த விலையில் பாட்டில்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுத்து, அதற்கான வங்கிக் கடனையும் அரசு பெற்றுத் தரலாம்.

பின்னர் அவர்களின் தயாரிப்பு பாட்டில்களை குறைந்த விலையில் விற்பனை செய்யலாம்.  இதன் மூலம் குறைந்த விலையில், சுத்தமான மருந்து பாட்டில் நோயாளிகளுக்கு கிடைக்கும்.

ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் கே.எஸ்.வி.கே.சுப்பாராவ்: சிறிய பாட்டில்களில் மருந்துகள் வழங்கினால் அதிக செலவு என்பதால் அதை ஜிப்மர் நிர்வாகம் செய்யாது. மருத்துவமனைக்கு செல்லும்போது, திரவ வகையான மருந்தும் அளிக்கலாம் என்று நினைத்து, சுத்தம் செய்யப்பட்ட பாட்டிலை கொண்டு வர வேண்டும் என்ற விழிப்புணர்வு நோயாளிகளுக்கு வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு சுத்தமான பாட்டில்களை விற்பனை செய்வது என்பது நல்ல யோசனை தான். நிர்வாகத்தை அணுகும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு, அனுமதி மற்றும் தனி இடம் அளிக்க ஜிப்மர் நிர்வாகம் தயாராக உள்ளது என்றார்.

புதுவை முதல்வர் வி. வைத்திலிங்கம்: இது நல்ல ஆலோசனைதான். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com