

சென்னை, மே 19: லைலா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புதன்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 108 மி.மீ. மழை பதிவானது.
சென்னை அருகே வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள லைலா புயல், வியாழக்கிழமை மதியம் ஆந்திர கடற்கரை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும்போது, வடக்கு தமிழக கடற்கரை பகுதியில் அதிகபட்சமாக 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை உள்பட பல நகரங்களில் சாலைகளில் வெள்ளம் புகுந்ததோடு, மரங்களும் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சூறாவளிக் காற்று காரணமாக கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மீன்பிடி படகுகள் கடும் சேதம் அடைந்ததால், மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் சென்னைக்கு அருகில் நிலைகொண்டுள்ள புயல் காரணமாக, சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. மேலும் இரண்டு தினங்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
5 பேர் சாவு: தொடர் மழைக்கு சென்னை உள்பட தமிழகத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் சாலையில் அறுந்து விழுந்துகிடந்த மின்சார வயரை மிதித்த பெண் கம்ப்யூட்டர் என்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
படகுகள் சேதம்: லைலா புயலால் வீசிய சூறாவளிக் காற்றுக்கு ராமேசுவரம் மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 46 நாட்டுப் படகுகளும், 40 விசைப் படகுகளும் பலத்த சேதமடைந்தன. இதனால் ரூ. 20 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு: பலத்த காற்றுடன் வீசிய மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னையில் பல சாலைகளில் வெள்ளம் புகுந்ததோடு, 70-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் 5 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகச் சென்றன. இதுபோல் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல பகுதிகள் இருளில் மூழ்கின.
மேலும் இரண்டு தினங்களுக்கு மழை: புயல் கரையைக் கடக்கும்போது, ஆந்திர கடற்கரையில் 60 முதல் 75 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசக் கூடும். வடக்கு தமிழகம் கடற்கரை பகுதிகளில் 55 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசும். தமிழகம் மற்றும் புதுவையில் கன மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் 108 மி.மீ. மழை: சென்னையில் புதன்கிழமை ஒரே நாளில் 108 மி.மீ. மழை பதிவானது. புதன்கிழமை காலை 8.30 மணி வரை தொழுதூரில் 90 மி.மீ., திரூவாரூர், முசிறி பகுதிகளில் 70 மி.மீ., வேதாரண்யம், சாத்தனூர் அணை, தாம்பரம், பாபநாசம், தஞ்சாவூர், நன்னிலம், ஆலங்குடி, தம்மம்பட்டி, சீராழ் பகுதிகளில் 50 மி.மீ. மழை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.