சென்னை, மே 20: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வழங்கும் 2009-ம் ஆண்டுக்கான தமிழக அறிவியல் அறிஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் ஆண்டுதோறும் தமிழக அறிவியல் அறிஞர் விருதுகளை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் உள்ள உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் சிறப்பாக பணிபுரியும் ஆய்வாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வேளாண்மையியல், உயிரியல், வேதியியல். சுற்றுச் சூழலியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கணிதவியல்,மருத்துவம், இயற்பியல், கால்நடை அறிவியல், சமூகவியல் ஆகிய பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருது பெறுபவர்கள்:
வால்பாறை தேயிலை ஆய்வு மைய அறிவியல் அறிஞர் ஆர். ராஜ்குமார் (வேளாண்மையியல்), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விலங்கியல் துறை இணை பேராசிரியர் ஜி. அர்ச்சுணன் (உயிரியல்), காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொழில் வேதியியல் துறை பேராசிரியர் பி. மணிசங்கர் (வேதியியல்), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் உயிர் தொழில்நுட்பவியல் துறை இணைப் பேராசிரியர் ஜி. அண்ணாதுரை (சுற்றுச் சூழலியல்), மதுரை தியாகராஜர் மின்னணுவியல்- தொலைத்தொடர்புத் துறை பேராசிரியர் எஸ். ராஜு (பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்), சேலம் பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியர் கே. தங்கவேல் (கணிதவியல்), தரமணியில் உள்ள ஒய்.ஆர்.ஜி. எய்ட்ஸ் ஆய்வு மையத்தின் பேராசிரியர் சுனிதி சாலமன், சென்னை மருத்துவக் கல்லூரி குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் எஸ்.எம். சந்திரமோகன் (மருத்துவம்), சென்னை அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை துணைப் பேராசிரியர் ஆர். கோபாலகிருஷ்ணன் (இயற்பியல்), சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் பால்வளத் துறை இணைப் பேராசிரியர் பி. சுரேஷ் சுப்பிரமணியன் (கால்நடை அறிவியல்), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். சங்கர் (சமூகவியல்).
இவர்கள் அனைவருக்கும் விருதுடன் ரூ. 10 ஆயிரம் பணமுடிப்பும், சாதனைகள் பற்றிய விளக்கக் குறிப்பும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் ச. வின்சென்ட் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.