பார்வையிழந்தும் படிப்பில் ஒளிரும் மாணவர்: மேற்படிப்புக்கு உதவி கிடைக்குமா?
சென்னை, மே 27: பத்தாவது வயதில் பார்வை இழப்பு, வறுமை நிறைந்த குடும்பச் சூழ்நிலை. இவை எந்த மாணவரையும் கலங்கச் செய்திருக்கும். ஆனால், எதற்கும் கலங்காத மாணவர் நரசிம்மன் (படம்), தனது விடா முயற்சியால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 456 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள செயின்ட் லூயிஸ் பார்வையற்றோர் பள்ளி மாணவரான இவர், பள்ளியிலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். இருந்தும் கட்டடத் தொழிலாளியின் மகனான நரசிம்மன், மேற்படிப்புக்காக உதவியை எதிர்நோக்கியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆர்க்காடு அருகே திமிரியைச் சேர்ந்த பெருமாளின் ஒரே மகன் நரசிம்மன்.
நல்ல கண் பார்வையுடன் இருந்த நரசிம்மனுக்கு 10 வயதில் திடீரென கண்பார்வை மங்கலானது. அச்சமயத்தில் நரசிம்மன் 4-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். படிப்பறிவில்லாத பெற்றோர், தங்களது மகனின் கண்ணில் கோளாறு இருப்பதை அறிந்து, மருத்துவ சிகிச்சை அளிப்பதற்குள் நரசிம்மனுக்கு முழு பார்வையும் பறி போனது.
கண்பார்வை இழந்தவர்களுக்கு வேலூரில் சிறப்புப் பள்ளி ஏதும் இல்லை. நரசிம்மன் மீண்டும் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் நரசிம்மனுடன் அவரது பெற்றோர் சென்னைக்கு குடிபெயர்ந்தனர். ஓட்டேரியில் ஒரு வாடகை வீட்டில் தங்கிவிட்டனர்.
அடையாறில் உள்ள செயின்ட் லூயிஸ் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர், பார்வையில்லாதோருக்கான சிறப்பு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்க்கப்பட்டார் நரசிம்மன். தினந்தோறும் ஓட்டேரியில் இருந்து நரசிம்மனை அவரது தாய் குமாரி, பஸ்ஸில் அடையாறில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தார்.
அதே பள்ளியில் துப்புரவு தொழிலாளியாகப் பணிபுரிந்து வரும் குமாரி, பள்ளி முடிந்து செல்லும்போது தன்னுடன் மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். பள்ளியில் மாதந்தோறும் கிடைக்கும் ரூ. 2 ஆயிரம் சம்பளத்திலும், கட்டடத் தொழிலாளியான பெருமாளின் தினக் கூலியிலும்தான் குடும்பமே நடந்து வருகிறது.
இம்மாதிரியான சூழ்நிலையில், வறுமையில் இருந்தாலும் விடா முயற்சியில் பிரெய்லி முறையில் படித்த நரசிம்மன், புதன்கிழமை (மே 26) வெளியான 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவில் 456 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழ்-91, ஆங்கிலம்-91, கணிதம்-95, அறிவியல்-84, சமூக அறிவியல்-95 என மொத்தம் 456 மதிப்பெண் பெற்றுóளார்.
அதேபள்ளியில் 11-ம் வகுப்பு படிக்க விரும்பும் நரசிம்மனுக்கு அதற்குப் போதிய வசதியில்லை.
வழக்கறிஞர் ஆவதே லட்சியம் - நரசிம்மன்:
சட்டம் படித்து வழக்கறிஞர் ஆவதே எனது லட்சியம். ஆனால், மேற்படிப்புக்கு எனது பெற்றோருக்கு போதிய வசதி இல்லை. எங்களுக்கு யாரேனும் உதவிக் கரம் நீட்டினால் மேலும் சிறப்பாக படிப்பதற்கு உதவியாக இருக்கும் என்றார் நரசிம்மன்.
கண் பார்வையிழந்தும் படிப்பில் ஒளிரும் மாணவர் நரசிம்மனின் மேற்படிப்புக்கு உதவிக் கரம் நீட்ட விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9790393124.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

