வேதாரண்யம் பகுதியில் கடற்கரைச் சாலை அமையுமா?

வேதாரண்யம் : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் நாட்டின் பாதுகாப்பு, பொருள்கள் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு உதவும் வகையில், கிழக்கு கடற்கரைச் சாலைக்கு இணையான கடலோரச் சாலையை அமைக்க வேண்டும்
வேதாரண்யம் பகுதியில் கடற்கரைச் சாலை அமையுமா?
Updated on
2 min read

வேதாரண்யம் : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் நாட்டின் பாதுகாப்பு, பொருள்கள் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு உதவும் வகையில், கிழக்கு கடற்கரைச் சாலைக்கு இணையான கடலோரச் சாலையை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை - கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலையானது, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்டது.

சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரையைச்  சார்ந்து அமைந்துள்ள இந்த பிரதான சாலை சில காரணங்களால் நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி கடற்கரையை அடையவில்லை.

மாறாக, நாகப்பட்டினம்- வேதாரண்யம் சாலையில் கீழையூர் பகுதியில் பிரிந்து, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாகக் கன்னியாகுமரியைச்  சென்றடைகிறது.

வேதாரண்யம் வழியாகச் சாலையை அமைக்க, அப்போது பல்வேறு அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தின. இதையடுத்து, கிழக்கு கடற்கரைச் சாலைக்கு இணையான சாலை அமைக்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வேதாரண்யம் பகுதி வழியாக இந்தச் சாலை அமைந்திருந்தால் இங்கு உற்பத்தியாகும் உப்பு, மீன், சவுக்கு உள்ளிட்ட பொருள்களை எளிதாக வெளியிடங்களுக்கு அனுப்பிவைக்கவும், கோடியக்கரை பகுதிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் பெரும் உதவியாக இருந்திருக்கும்.

பாதுகாப்பு தேவைக்கு:  அண்மைக்காலமாக, உலகின் பல நாடுகளிலும் தீவிரவாதம், அன்னிய சக்திகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடல் வழித் தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், இந்தியக்  கடலோரங்கள் பாதுகாப்பு வட்டாரங்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளன.

குறிப்பாக, நாட்டின் கோடியில் உள்ள வேதாரண்யம் பகுதி பாதுகாப்பு வட்டாரங்களின் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

இங்குள்ள தோப்புத்துறை, கோடியக்கரை ஆகிய இரண்டு இடங்களில் இந்திய கடற்படை முகாம்கள் அமைந்துள்ளன.

கோடியக்கரையில் ரேடார் கருவி கண்காணிப்புடன் இந்திய விமானப் படை  முகாம் செயல்படுகிறது. இவை தவிர,  புறக் காவல் நிலையம் உள்பட வேதாரண்யத்தில் கடலோரக் காவல் நிலையமும், 8 காவல் சோதனைச் சாவடிகளும் செயல்படுகின்றன. அத்துடன், உள்ளுர் காவல் நிலையங்கள், உளவுப் பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

வேதாரண்யத்தின் தெற்கு கடல் பகுதி தீவுகள், சதுப்பு நிலக் காடுகளாக உள்ளதால், அன்னிய நபர்கள் எளிதில் ஊடுருவக் கூடிய சூழல் உள்ளது.

மேலும், இலங்கையில் போருக்குப் பின்னர் வெளிநாட்டின் ராணுவ முகாம்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகின்றன. கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்னைகளும் உள்ளன.

எந்த நேரத்திலும் அண்டை நாடுகளால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனச் சில அமைப்புகளின் தலைவர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

தற்போது, வேதாரண்யம்- பட்டுக்கோட்டை சாலை கடல் பகுதியிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனால், கடலோரக் கிராமங்களில் இருக்க  வேண்டிய சோதனைச் சாவடிகள்கூட இந்தச்  சாலையில்தான் அமைக்கப்பட்டுள்ளன.  உதாரணமாக, தென்னடார் சோதனைச் சாவடி (4 கி.மீ. கடந்து)  தகட்டூரில் அமைக்கப்பட்டுள்ளது.

எனவேதான், கிழக்கு கடற்கரைச் சாலைக்கு இணையான சாலை அமைக்கப்பட்டால், இந்தச் சாலையிலேயே சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்புப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியும் என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள். மேலும், பல்வேறு தேவைகளுக்கும், எதிர்காலத்தில் பாதுகாப்பு வட்டாரங்கள் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்கும் கடற்கரைச் சாலைக்கு இணையான சாலை வேதாரண்யம் பகுதியில் அவசியம் எனக்  கருதப்படுகிறது.

பழைய கடற்கரைச் சாலை:  ஆங்கிலேயர் ஆட்சியில், பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு அகஸ்தியம்பள்ளி வரை ரயில் பாதை அமைத்தனர். இங்கிருந்து தென்னடார் வழியாக முத்துப்பேட்டை வரை கடற்கரைச் சாலையாக இருந்துள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு  வரை புழக்கத்தில் இருந்து, தற்போது அந்தச்  சாலை சேதமடைந்து போக்குவரத்து இல்லாமல் காட்டுப் பகுதியாக உள்ளது.

இதைப் பயன்படுத்தி, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை வழியாக கடற்கரைச் சாலை அமைத்தால், அது மக்களின் பல்வேறு பயன்பாட்டுக்கும், அவசரக் காலத்தில் பாதுகாப்பு வட்டாரத்துக்கும் பயனளிக்கும் என்பதே இப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com