

கோவை : கோவையில் சாணிப் பவுடரை குடித்து, இந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.
பண்டிகைக் காலம் என்றதுமே வீட்டை சுத்தம் செய்யும் மகளிர், தரையில் சாணியை கொண்டு மெழுகுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சாணியின் நிறத்தை அதிகமாக்குவதற்காக பயன்படுத்துவதுதான் சாணிப் பவுடர். சந்தைக்கு இந்தப் பவுடர் வந்ததில் இருந்து, வாழ்வில் நம்பிக்கை இழந்த பல நூறு பேரின் உயிர் போவதற்கு காரணமாக அமைந்துவிட்டது.
ஒரு கட்டத்தில் சாணிப் பவுடர் குடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அந்தப் பவுடரை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து, மளிகைக் கடைகளில் சாணிப் பவுடர் வெளிப்படையாக விற்கப்படுவது வெகுவாகக் குறைந்தது. ஆனால் இன்னும் கோவையில் உள்ள மளிகைக் கடைகளில் சாணிப் பவுடர் விற்பனை ஜோராக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து சாணிப் பவுடரை கரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 100-ஐ தாண்டிவிட்டது.தற்போது இந்தச் சாணிப் பவுடர் பச்சை, மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. பச்சை நிற பவுடரை காட்டிலும் மஞ்சள் நிற பவுடர்தான் விஷத் தன்மை அதிகம் என்கிறார்கள் கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், "மஞ்சள் நிற சாணிப் பவுடரானது ஹருமின் என்ற ரசாயனத்தால் தயாரிக்கப்படுகிறது. பச்சை நிற பவுடர் மாலசைட் என்ற ரசாயனத்தால் ஆனது. தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் மஞ்சள் நிற சாணிப் பவுடரை ஒருவர் உட்கொண்டால், அந்த ரசாயனமானது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் மீதும் ஒட்டிக் கொள்கிறது. உறுப்புகளைச் செயலிழக்க செய்வதோடு நேரடியாக நரம்பு மண்டலத்தை பாதித்து, மூளையை வீங்க வைத்து மரணத்தை ஏற்படுத்தும். பச்சை நிற பவுடர் நேரடியாக சிறுநீரகங்களைப் பாதித்து, அவற்றின் செயல்பாட்டை முழுமையாக முடக்கும். இதனால் சில நிமிடங்களில் மரணம் சம்பவிக்கும். சாணிப் பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றவரை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் அவர்கள் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன், பூச்சிக் கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. நகர்ப் பகுதிகளில் பூச்சிக் கொல்லி மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிட்டதால் அந்த வகை விஷம் குடித்து தற்கொலைக்கு முயல்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது' என்றனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஆண்கள் 88 பேரும், பெண்கள் 89 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆண்களில் 12 பேரும், பெண்களில் 6 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதே போல், பிப்ரவரி மாதத்தில் ஆண்கள் 116 பேரும், பெண்கள் 40 பேரும் தற்கொலைக்கு முயன்றனர். இவர்களில் ஆண்கள் 10 பேரும், பெண்கள் 3 பேரும் இறந்தனர். மார்ச் மாதத்தில் தற்கொலைக்கு முயன்ற 110 ஆண்களில் 10 பேரும், 79 பெண்களில் ஒருவரும் இறந்தனர். செப்டம்பர் மாதத்தில் மட்டும் தற்கொலைக்கு முயன்ற 96 ஆண்களில் 13 பேரும், 76 பெண்களில் 7 பேரும் இறந்துவிட்டனர். விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வோர் 90 சதவீதம் பேர் சாணி பவுடரைத்தான் பயன்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றளவு எளிதில் கிடைக்கக் கூடிய பொருளாகத்தான் சாணி பவுடர் இருக்கிறது. இதன் விலையும் பூச்சிக் கொல்லி மருந்துகளைக் காட்டிலும் மிகவும் மலிவு. இதன் விற்பனைக்குத் தடை விதிப்பதோடு மட்டும் மாநில அரசு நிற்காமல் அதைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். சாணிப் பவுடரை விற்பனை செய்யும் கடைகள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.