தருமபுரி : மாற்றுத் திறனாளிகளுக்கான தருமபுரி அரசு காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளி 17 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கி வருகிறது.
தமிழகம் முழுவதும் காது கேளாதோர் மற்றும் வாய்பேசாதோர், பார்வையற்றோர் பள்ளிகள் என மொத்தம் 23 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 11 இடங்களில் காதுகேளாதோர் பள்ளிகள் உள்ளன.
தருமபுரி காதுகேளாதோர் மேனிலைப்பள்ளியில்தான் மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இங்கு மொத்தம் 180-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளனர். இதில் 157 பேர், பள்ளி வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர். 30-க்கும் மேற்பட்டோர் வெளியில் இருந்து வந்தும் படிக்கின்றனர். இப்பள்ளியில் 14 சிறப்பு ஆசிரிய, ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
1976-ம் ஆண்டு உயர் நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி, 1993-94-ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த ஆண்டு முதல் இதுவரை இப்பள்ளிக்கு நிரந்தரமாக தலைமை ஆசிரியர் இல்லை. தலைமை ஆசிரியர் பணியிடம் இருந்தும் அயல் பணி அடிப்படையில் மற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்களே இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இருப்பினும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்தான் அயல் பணி அல்லது கூடுதல் பொறுப்பு என்ற முறையில் தலைமை ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்தனர். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் (பட்டதாரி ஆசிரியர்), தருமபுரி மேல்நிலைப்பள்ளியில் அயல்பணி அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.
இப்பள்ளியில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை 10 ஆசிரியர் பணியிடங்களில் உள்ளன. இதில் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) பணியிடமும் காலியாக உள்ளது. இதனால்,கல்வித்தரம் பாதிக்கப்படுகிறதாம்.
கடந்த ஆண்டு இப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 14 பேரும் தேர்ச்சிப் பெற்றனர். ஆனால், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 24 பேரும் தோல்வி அடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர். இப் பள்ளியில் நிரந்தரமாக தலைமை ஆசிரியர் நியமிக்கப்படாததே இதற்குக் காரணம் என்று சிறப்பு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளைக் கண்காணிக்க விடுதிக் காப்பாளர்கள் இல்லை. இதனால், இரவு நேரங்களில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பின்றி தங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், உணவும் சரியில்லை என்ற புகார் உள்ளது.
இந் நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் பள்ளியில் இருந்து வெளியேறி சாலையை கடந்து ஹோட்டல்களுக்குச் செல்கின்றனர். இதனால், அவ்வப்போது சிறிய, சிறிய விபத்துகளில் மாணவ, மாணவிகள் சிக்குகின்றனர். எனவே, விடுதிக் காப்பாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.
விடுதியில் உள்ள கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால், திறந்தவெளியில் மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர்.
சிறப்புப் பள்ளியில் படிக்கும் காதுகேளாத மாணவ, மாணவிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை காதொலி கருவி வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இப்பள்ளி மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோருக்கு காதொலி கருவி இல்லை. இதனால், இவர்களுக்கு பாடங்கள் கற்றுத்தருவதில் சிரமம் ஏற்படுவதாக சிறப்பு ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எம்.அகமது கூறியது:
"இப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காதொலி கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்குவதாக இம்மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் உறுதி அளித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் பள்ளிகளில் ஆய்வு செய்ய மாற்றுத்திறனாளிகளின் மாநில நல அலுவலருக்குத்தான் அதிகாரம் உள்ளது. மாநில ஆணையர் உத்தரவிட்டால்தான் நாங்கள் ஆய்வு செய்ய இயலும். இது குறித்து மாநில ஆணையருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.