கவனம் பெறாத கழிமுகப் பகுதிகள்
வேதாரண்யம் : வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையிலும், வேதாரண்யம் பகுதியில் வெள்ளப் பாதிப்பைச் சமாளிக்க ஏதுவாக கழிமுகப் பகுதிகள் தயாராகாமல் இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் காவிரி டெல்டா உள்ளடங்கிய கடலோர மாவட்டங்ளில் அதிக அளவிலான மழைப் பொழிவு இருக்கும்.
இவற்றில் நாகை மாவட்டம், வேதாரண்யம், தலைஞாயிறு, திருப்பூண்டி சுற்று வட்டாரங்கள் குறிப்பிட்டுக் கூறத் தகுந்த இடங்கள். இப் பகுதியில் இயற்கையாகவே காணப்படும் மழை வளத்துக்கான சுற்றுச்சூழல், மாறுபட்ட கடல் அமைப்புமே இதற்கு முக்கியக் காரணம்.
வேறு பகுதிகளில் இல்லாத வாய்ப்பைப் பெற்றிருந்த போதிலும், இந்த நீரைச் சேமிக்க பயன்படும் நீர்நிலைகளில் முறையான பராமரிப்பு இல்லாமையால், அவற்றின் கொள்ளவு வெகுவாகக் குறைந்ததுடன், மழை நீரும் வீணாகிறது. மேலும், வடிகால் வசதிக் குறைவால் தொடர்ந்து வெள்ளப் பாதிப்பையும் இப் பகுதி சந்திந்து வருகிறது.
தொடரும் பாதிப்பு:
வேதாரண்யம் பகுதி வழியாக வளவனாறு, முள்ளியாறு, மானங்கொண்டான் ஆறு, அரிச்சந்திரா நதி, நல்லாறு உள்ளிட்ட 7 முக்கிய வடிகால் ஆறுகள் மூலம் டெல்டாவிலிருந்து வெளியேறும் உபரி நீர் கடலில் கலக்கிறது.
இவற்றின் கழிமுகப் பகுதிகளில் காணப்படும் பராமரிப்புக் குறைபாடுகள் வெள்ளப் பாதிப்புக்கு முக்கிய காரணியாக உள்ளன. மேலும், வடிகால் ஆறுகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தரைப் பாலங்கள், அகற்றப்படாத வெங்காயத் தாமரைச் செடிகள், அனுமதியற்ற இறால் பண்ணைகள், சுண்ணாம்பு பாறைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளும் வெள்ள நீர் வடிவதைத் தடுக்கின்றன.
இதனால், வேதாரண்யம் பகுதியில் பொழியும் குறைந்த அளவு மழைக்கே தலைஞாயிறு, தகட்டூர் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன.
இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உதாரணமாக, கடந்த 2006 ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால் தகட்டூர் பகுதியில் மட்டும் 1073 குடும்பங்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இதையடுத்து, நிரந்தரத் தீர்வுக்காக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் 24.11.2006-ல் நடைபெற்றது.
அப்போதைய மாவட்ட ஆட்சியர் தலைமையில் பால் வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், உயர் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். ஆனால், இன்று வரை எந்தவிதத் தீர்வு கிடைக்கவில்லை.
இதுகுறித்து தகட்டூர் பகுதி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கோவிந்தசாமி கூறியது:
சில மாதங்களுக்கு முன்பு தகட்டூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், வடிகால் தூர் வார அறிவிக்கப்பட்ட | 25 லட்சம் ஒதுக்கீடும் கிடைக்கவில்லை. இதனால், எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என்றார் அவர்.
இதே பகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். மாணிக்கம் கூறியது:
முள்ளியாறு வடிகால் பகுதியை கழிமுகம் வரை தூர் வாரி, மதகுகளை மாற்றி அமைத்தால்தான் வெள்ள நீர் வடியும் என்றார்.
கழிமுகத்தில் உமரிக்காடு:
முள்ளியாற்றின் கழிமுகப் பகுதியானது உப்பளத்தை சார்ந்து (வாய்மேடு- தென்னடார் பகுதி) சுமார் 200 ஏக்கர் படுகை அமைப்பைக் கொண்டது. இதில் சுமார் 4 அடி உயரம் வரை அடர்ந்து வளர்ந்துள்ள உமரி எனப்படும் சதுப்பு நிலத் தாவரம் காடாக உள்ளது. இது தண்ணீர் வடிவதைத் தேக்குகிறது.
கண்டி எனப்படும் இதன் பின் பகுதியில் சுமார் 1500 மீட்டர் தொலைவு 100 மீட்டர் அகலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு தூர்வாரப்பட்டது. ஆனால், கழிமுகத்தின் முன் பகுதியான ஆற்றின் கடைசிப் பகுதி தொடங்கி தூர்வாரப்படவில்லை.
முனங்கு என்ற இப் பகுதியில் உமரிகள் காடாக உள்ளன. இந்தப் பகுதிக்கு அதிகாரிகள் வாகனத்தில் செல்வதில் பிரச்னை இருப்பதால், அரசின் கடைநிலை அதிகாரிகூட வந்து நிலைமையை ஆய்வு செய்யவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் விவசாயிகள்.
வாட்டி- தட்டி வலை:
இதேபோல, அரிச்சந்திர நதி ஆற்றின் வடிகால் பிரச்னைகள் குறித்து தலைஞாயிறு சமூக ஆர்வலர் சோமு. இளங்கோ கூறியது:
ஆற்றின் குறுக்கே மீன் பிடிக்க அமைக்கப்படும் தட்டி வலைகள் தண்ணீரைத் தேக்குகின்றன. கழிமுகம் வரை நாலுவேதபதி வழியாகச் செல்லும் வடிகால் ஆற்றுக்குள் காணப்படும் வாட்டி எனப்படும் சுண்ணாம்பு மட்டி போன்ற ஓடுகள் இயற்கையாக வளர்கின்றன. இவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டன. ஆனால், இவை மீண்டும் வளர்ந்துள்ளன. இவற்றை முழுமையாக அகற்ற வேண்டும் என்றார் அவர்.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், நலத் திட்ட உதவிகள், இலவசம் எனப் பல கோடிகளை ஒதுக்கும் அரசிடமிருந்து இந்தப் பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பது நிவாரணங்களுக்குப் பதிலாக கழிமுகங்களின் முறையான பராமரிப்புக்கு சில லட்ச ரூபாய்களுக்கான நிதி ஒதுக்கீடுகளைத்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

